Pages

Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Monday, May 25, 2015

இணையமும் இலக்கியமும்

தமிழ் நவீன இலக்கிய சரித்திரம் என்று ஒன்று எழுதபட்டால் அதில் நிச்சயம் இணையத்தின் பலன்கள் என்று தனியாக எழுத பட வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். 

பத்தாண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004 ஆம் ஆண்டில் மய்யம் என்ற இணையதளத்தில் சிறந்த பத்து தமிழ் புத்தகங்கள் என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடந்து இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்கள் தந்திருக்கும் புத்தக பட்டியல் எல்லாம் முப்பது அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு எழுத பட்டவையாக இருக்கிறது. தற்கால படைப்புகள் பற்றி யாரும் பேசவில்லை.

அப்பொழுது என்னென்ன படைப்புகள் வெளிவந்தன பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 

அதிலொருவர் மு.வரதராசன் அவர்களது படைப்பை பற்றி சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது எத்தனை பேர் அவரை வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

தற்காலத்தில் இலக்கியம் அறிமுகமாகும் முன்னரே எல்லோருக்கும் முக நூல் அறிமுகமாகி விடுகிறது. அதன் மூலம் அறிமுகமாகும் எழுத்தாளர்களின் நூல்களையே அவர்கள் பெரிதும் விரும்பி வாசிக்கிறார்கள். அத்தோடு நிறுத்தி கொள்பவர்கள் ஏராளம். தீவிரமாக நல்ல படைப்புகளை தேடி வாசிப்பவர்கள் குறைவே. 

நமது தமிழ் நாட்டில் தான் இப்படி ஒரு நிலைமை. கழிவறையை சுத்த படுத்தும் அமிலத்தை பற்றி கூட எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சுலபமாக தெரிந்து கொள்ள முடிகிறது ஊடகங்கள் மூலம். ஆனால் ஒருவனை நல்ல மனிதனாக்க கூடிய நல்ல புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்வது கஷ்டமான காரியமாக தான் உள்ளது. 

ஒருவன் இணைய அறிமுகம் இல்லாமல் இலக்கிய பத்திரிகைகள் வாசிக்காமல் இருந்தால் தற்கால நவீன இலக்கிய படைப்புகள் பற்றி தெரிந்து கொள்ள முடியுமா ???

பல சமானியன்களை படைப்பாளி ஆக்கி இருப்பது இணையத்தின் மற்றொரு சிறப்பு. இல்லாவிட்டால் பணத்தை தேடும் வாழ்க்கையில் இவைக்கெல்லாம் நேரமே இல்லாமல் போய் இருக்கும். 

அதே போல் தமிழ் இலக்கிய இணைய வரலாற்றில் இருவருக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் சுஜாதாவும், சாரு நிவேதிதாவும். 

சுஜாதா அவர்கள் அம்பலம் இணையதளத்தில் எழுதியது, வாசகர்களுடன் உரையாடியது பற்றி பலர் கூற கேட்டு இருக்கிறேன்.

அதே சாரு நிவேதிதா அவர்கள் கோணல் பக்கங்களை இணையத்தில் எழுதி வந்த காலத்தில் பலர் தூங்காமல் இரவு படித்து இருக்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். 

இணைய வருகைக்கு முன் பொது மக்களால் விரும்பி படிக்க பட்டது அல்லது கொண்டாட பட்ட எழுத்துக்கள் என்று பார்த்தோமானால் அவை ஜனரஞ்சக பத்திரிகைகளில் வெளி வந்த படைப்புகளே. உதாரணமாக பொன்னியின் செல்வன், கடல்புறா போன்றவை.

ஜனரஞ்சக பத்திரிகைகளில் நாவல்கள் தொடர் கதைகளாக வந்து கொண்டு இருந்த காலத்தில் கணையாழியில் தொடராக வந்த குருதிப்புனல் நாவல் அந்த காலத்தில் இலக்கிய பத்திரிகை வாசகர்களால் அதிகம் படிக்க பட்டது. வேறு சிலராலும் பிரச்சனை செய்வதற்கு என்றும் படிக்க பட்டது அந்த கதை. 

இணைய காலம் வரையிலும் சிலர் பொன்னியின் செல்வன் மற்றும் சாண்டில்யன் நாவல்களை விட்டு வெளி வரவில்லை. 

இணையத்தின் பலரது கட்டுரைகளின் மூலம், இலக்கிய விவாதங்கள் மூலம் கிடைத்த புத்தக அறிமுகங்கள் தான் பலரை தீவிர வாசிப்புக்கு அழைத்து சென்று இருக்கிறது.

இணையத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் புத்தகம் வாங்குவது. முன்பு எல்லாம் தமிழ் புத்தகங்கள் வாங்குவது என்பது மிக சுலபமான காரியமாக இருந்ததில்லை என்று கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. கடைகள் தேடுவது, பதிப்பக முகவரி தேடுவது என்று கூகிள் இல்லாத காலத்தில் எப்படி சாத்திய பட்டு இருக்கும் ??

தற்போது எல்லா முன்னணி தமிழ் பதிப்பகங்களும் முன்னணி இலக்கிய புத்தக விற்பனை கடைகளும் தங்களுக்கென்று தனிய இணையதளம் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் புத்தகம் வாங்குவது எளிமையாக உள்ளது. அமேசான் போன்ற வியாபார தளங்களும் தமிழ் புத்தகங்களை விற்கிறது. 

இணையத்தின் மூலம் ஏற்பட்டுள்ள சரிவுகளும் உள்ளது. ஒரு படைப்பாளியை முக நூல் தந்திருக்கும் அடையாளத்தை மட்டும் வைத்து கொண்டு விமர்சிப்பது. எழுத்தாளரின் கள போராட்டங்களை பற்றி எதுவும் தெரியாமல் தன்னை போல் அவரும் ஒரு சமூக தள பயனாளி என்ற முறையில் பேசுவதும் அதிகமாகியுள்ளது. 
Related Posts with Thumbnails