Pages

Sunday, September 9, 2012

கலவை - } முகமூடி :::: குஜால் வீடியோ { உணவு :::: போலி விளம்பரம் }

வட இந்திய மக்கள் கிட்டக்க ஒரு பழக்கம், அதாவது நைட் சாப்பிட்ட பிறவு வீட்டுல செய்ஞ்ச இனிப்பை சாப்பிடுவாங்க. இது காலகாலமா தொடர்ந்து வர பழக்கம்ன்னு சில நட்புகள் சொல்லுறாங்க. இந்த இனிப்பு ங்குறது பால்ல செய்ஞ்ச ஸ்வீட்டா தான் பெரும்பாலும் இருக்குமாம். வீட்டுலையே செயஞ்சதால உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுன்னு சொல்லுறாங்க. 

இப்ப என்ன பிரச்சனைன்ன இந்த பழக்கத்தை அடிப்படையா வைச்சு ...டைரி மில்க் கம்பெனிகாரங்க "தினமும் நைட் சாப்பிட்ட பிறவு எங்க கம்பெனி ஸ்வீட்டை சாப்பிடுங்க"ங்குற மாதிரி பிரோமொட் பண்ணுறாங்களாம். அதுக்கு ஏத்த மாதிரி சில பல பேரு நைட் அந்த சாக்லேட் சாப்பிடுறாங்க. 

தினமும் இந்த டைரி மில்க் சாப்பிட்ட அஜீரண கோளாறுல இருந்து இருதய கோளாறு வரைக்கும் வருமாம். இதையெல்லாம் மறைச்சு பாச மசாலா எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணுறாங்க. கொடுமையா இருக்கு.

அதே மாதிரி நூட்லஸ் ங்குறது உடம்புக்கு ஒத்துக்காத ஒன்னு ங்குறது ஊர் அறிஞ்ச ரகசியம். இப்ப இந்த மேகி கம்பெனிகாரங்க வட இந்திய கிராம மக்கள் நூட்லஸ் சாப்பிடாம ஆரோக்கியமா எப்புடி இருக்கலாம்ன்னு யோசிச்சு அமிதாப் பச்சனை வைச்சு இந்த இரண்டு நிமிஷ குப்பையை பிரபல படுத்துறாங்க. நம்ம சினிமா நச்சத்திரங்கள் தான் காசு தந்த "டாஷ்ஷை" கூட விளம்பர படுத்துவாங்களே.... 

அதே இந்த ஓட்ஸ் கஞ்சி இவங்களே கைல மாட்டிகிட்டு அவஸ்தை படுது. மசாலா கலந்து சாபிட்டாலே உடல் கோளாறு வரும் தெரியும் ..அதுவும் முக்கியமா இதயத்துக்கு. இந்த கம்பெனிகாரங்க மார்க்கெட்டை பிடிக்கணும் ங்குறதுக்காக இதயத்துக்கு நல்லத்தான ஓட்ஸ்லையே மசாலா கலந்து விக்குறாங்க. கேட்ட மக்களுக்கு சப்புன்னு இருந்த சாப்பிட பிடிக்காதாம். கொடுமை. 

இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை.  


= = = = =

நம்ம நாட்டுல இப்போதைக்கு உணவு தான் முக்கிய பிரச்சனையா இருக்கு. ஒரு பக்கம் ஒரு வேளைக சோறே கிடைக்காம கஷ்ட படுற மக்கள் இருக்க... கிடைக்குற உணவை வீணாக்குறவங்களும் இருக்க தான் செய்றாங்க.  அப்புடி அதிகம் வீணாக்குறதுல ஓட்டல் , உணவு விடுதிகளுக்கு தான் முக்கிய இடம். ஒரு ஓட்டல் ல ஒரு நாளைக்கு வீணாகுற உணவை எடை போட்டு பார்த்திருக்காங்க ..57 கிலோ வந்துச்சாம். ஒரு ஓட்டலையே இவ்வளவுன்ன ஒரு நாளைக்கு நாடு முழுக்க எவ்வளவு வரும்ன்னு பார்த்துகோங்க. அப்ப ஒரு வருஷத்துக்கு எவ்வளவுன்னு கணக்கு போட்டுகோங்க. 

இதுக்கு தீர்வுன்னு பார்த்த இரண்டு ஆப்ஷன் தான் இருக்கு. ஒன்னு தேவையானதை சாப்பிட மக்களே எடுத்துக்க ஓட்டல்காரங்க விடனும், இன்னொன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுக்கு மட்டும் மக்கள் ஆர்டர் பண்ண வேண்டும் .... "என்னோட காசு ..நான் வாங்குவேன் இல்லை வீணாக்குவேன்"ன்னு சொல்லுற மக்கள் இருந்த ...மரியாதையா ஆர்டர் பண்ணியதை எல்லாம் சாப்பிடணும்.  இரண்டும் சரி வரலன்ன ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வேஸ்ட் ஆச்சுன்னு ஓட்டல்காரங்க பெரிய எழுத்துல வாசல்ல எழுதி போடணும். 

மறதி மட்டும் இல்லைங்க அலட்சியம் கூட தேசிய வியாதி தான். 


= = = = =

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு நட்புகள் தந்த அபாய எச்சரிக்கையை மீறி இன்னைக்கு நானும் நண்பன் ஒருத்தனும் வேற ஒரு படத்துக்கு கிளம்பி, அதை தியேட்டர்காரங்க தூக்கிவிட்டதால் வேற வழி இல்லாம முகமூடிக்கு போனோம். 

வாய்ல நல்ல  வாண்டை வாண்டையா வருது. மிஷ்கினை கழுவி கழுவி ஊத்தணும்ன்னு தோணுது. 

அதுவும் கிளைமாக்ஸ் வரும் போது பாதி உயிர் போயிருந்த சமயத்துல .... நரேன் நடிப்பு - ங்கொய்யால ...விரட்டி விரட்டி அடிச்சு தியேட்டர்ல இருக்குறவங்களை கொல்லுரங்கய்யா. 

படம் பார்த்துட்டு வரும் போது "மிஷ்கின் மேல நல்ல மரியாதை வச்சு இருந்தேன்டா"ன்னு சோகமாய் நண்பன் சொன்னான். நல்ல வேளை அவன் உலக சினிமா பார்க்குறது இல்லை. 

ஒன்றையணா மங்கி குல்லா வைச்சு பண்ணி இருக்க வேண்டியதை .... ஏதோ வெளிநாட்டுல இருந்து டிரஸ் வாங்கிட்டு வந்து காமெடி பண்ணிருக்காரு மிஷ்கின். 


= = = = =

நீண்ட நாள் கழித்து திநகரில் சந்தித்த நண்பன் "ஜி, புது கலெக்ஷன்ஸ் இருக்கு...பாக்குறீங்களா"ன்னு கேட்கவும், ரயில் ஏறி திரிசூலத்துல இறங்கி ஓரமான இடத்துல உட்கார்ந்து, அந்த பக்கத்துல இருந்த போலீஸ் மாமா பார்க்குறராங்குற பயத்தோடவே பார்த்தேன். அஞ்சு வீடியோஸ். விதவிதமானது. 

எல்லா வற்றிலும் பொருளாதார ரீதியிலோ, சமூக அந்தஸ்து ரீதியிலோ எதிர் எதிர் வகுப்பை சேர்ந்தவர்கள் புணர்த்து கொள்வதாய் இருந்தது. வலி, அலறல்ன்னு போனது அந்த வீடியோவில். 

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த மாதிரியான வீடியோக்களில் எதாவது குற்ற உணர்ச்சி உடன் இருவருக்கும் இருப்பதாய் காட்டுவார்கள். இந்த குற்ற உணர்ச்சி தான் அதிகமான இன்பத்தை தருவதாய் ஒரு உளவியல் பத்திரிகை சொல்கிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு இளம் பெண் தாக்க பட்டத்துக்கும் குற்ற உணர்ச்சி தரும் இன்பம் தான் காரணம் என்று அந்த ஆர்டிகல் சொன்னது. 

நடிகை அசின் ஹிந்தியில் நடிக்க போன போது, அவரை காட்டில் இருக்கும் அழுக்கு மரம் வெட்டிகள் பலர் சேர்ந்து கற்பழிப்பதாய் கதை பரப்பினார்கள். 

அதாவது சம அந்தஸ்தில் ஆட்களிடையே நடக்கும் பாலியல் வன்முறைகளை விட, மக்கள் எதிர் எதிர் அந்தஸ்தில் இருக்கும் ஆட்களிடைய நடக்கும்  பாலியல் வன்முறைகளை உலகம் முழுவதுக்கும் இருக்கும் மக்கள் விரும்பி படிக்கிறார்கள் / பார்க்கிறார்கள் என்று ஒரு கருது கணிப்பு கூறுகிறது. இதற்க்கு கண் முன்னே பல உதாரணங்கள் கிடைக்கிறது நமக்கு. 

இந்த மாதிரியான மன ஓட்டம் ஏற்படுத்தும்  வன்முறை ரீதியிலான பாதிப்புகளை   நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கிறது. இதை பாலியல் கல்வி என்ற ஒன்றினால் மட்டுமே சரி செய்து விட முடியுமா ??? 


= = = = = 

Tuesday, July 31, 2012

}} கலவை {{ குருதிபூக்கள் - 1

படிக்குற காலத்துல என் கூட படிச்ச முத்துகுமாரை கிளாஸ் போக விடாம, கட் அடிக்க வைச்சு ; என்னை மாதிரியே தற்குறியாகி ஒழுங்கா படிக்க விடாமல் நான் செய்ஞ்சதால் தான் இன்று உலகம் முழுக்க அறிய படும் பெரிய தொழிலதிபராக அவன் இருக்கிறான். இல்லாட்டி ஒழுங்கா படிச்சு எதாவது ஐடி கம்பெனில வேலைக்கு சேர்ந்திருப்பான். 

அவனை மாதிரி தொழிலதிபர்களை இந்த நாட்டிற்கு உருவாக்கி தந்துவிட்டு அமைதியாக இருக்கிறேன், ஆனா சில பயபுள்ளைங்க, முக்கியமா இந்த +கார்த்திகைப் பாண்டியன்  மாதிரியான ஆளுங்க ஏதோ மாணவர்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்டு, பிறவு போடுற சீன தாங்க முடியலப்பா. :))

இப்பவும் எங்கிருந்தாலும், வருடத்தில் ஒரு வாரம் என்னோடு செலவு செய்ய சென்னை வந்துவிடுவான்.... அப்பெல்லாம் அவன் கேக்குற கேள்வி "டேய்  மாப்பிள்ள .. நீங நல்லவனா இல்லை கெட்டவனா"ங்குறது தான். 

= = = 

காலேஜ் படிக்குறப்ப, ஒரு வெள்ளிகிழமை சாயங்காலம், முகத்துல அதிகமா பரு வந்து தழும்பு தழும்பா இருக்குன்னு வருத்தபட்டு என்கிட்டக்க சொன்னான், சரி பயபுள்ள ஆசபடுதேன்னு சோப் பவுடர், நல்லெண்ணெய், பெட்ரோல்ன்னு வாய்க்கு வந்ததை சொல்லிட்டு டவுன்ல இருக்குற பெரியம்மா வீட்டுக்கு போயிட்டேன்.... திங்ககிழமை வந்து  பார்த்த ; அவன் முஞ்சி முழுக்க கருப்பா ; ஷேவிங் பண்ணிவிட்ட கொரில்லா மாதிரியே இருந்தான்...

= = 

இப்புடி பல திருவிளையாடல்களை அவன்கிட்டக்க செய்ஞ்சு இருக்கேன்... அதை எல்லாம் குருதிபூக்கள்ன்னு டக்கோடு எழுதலாம்ன்னு இருக்கேன்.  


= =


அப்ப மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்த புதுசு. முத இரண்டு மாசம் ஏதோ தெரிஞ்சவங்க கிட்டக்க பேசி, கொஞ்சமா பிசினஸ் பண்ணி காட்டிட்டேன். ஆனா மூணாவது மாசம் ஒண்ணுமே சிக்கல...  அந்த மாசம் முழுக்க ஜீரோலையே இருந்தேன்... ஏற்கனவே இருந்த ப்ரெஷர் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. நட்புகள் / உறவுகள்ன்னு யார்கிட்ட கேட்டும் ஒன்னும் வரல. கடைசியா முத்துகுமார் கிட்ட கேட்டேன்.

அவனும் "செய்றேன்டா ...இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் ..நானே கால் பண்ணுறேன்"ன்னு மூணு நாளா சொல்லவும், நாலாவது நாள் நான் போன் பண்ணி "ஏண்டா கழுத்து அறுக்குற.... சொன்னா சொன்ன மாதிரி செய்ய மாட்டியா..நீயெல்லாம் என்ன பிரண்ட்டுடா"ன்னு இருந்த வேலை போயிடுமே என்ற கவலையும், பயமும், பிறவு ப்ரெஷராலும் கேட்டுட்டேன். 

அதுக்கு அவன் "டேய் அப்பா இறந்துட்டாருடா"ன்னு அமைதியா சொல்லிட்டு என்னோட பதிலுக்காக காத்திருந்தான். எனக்கு ஒரு மாதிரியா ஆகிடுச்சு. கேவலமா உணர்தேன். "நீயு எல்லாம் என்ன மனுஷன்டா"ன்னு மனசாட்சி கேட்டுச்சு. ஒன்னும் பேசாம போனை வைச்சுட்டேன். அன்னைக்கு கிடைத்த திட்டுக்களும், இருந்த மனநிலைக்கும் செத்து போயிறலாம்ன்னு தோனுச்சு. எப்படியோ திட்டு வாங்கிட்டு நைட்டு ஒரு பதினோரு  மணிக்கு அறை வந்து சேர்ந்தேன். 

பிறகு மறுநாள் ஆபீஸ் போக மனசு இல்லாம கிளம்பி போய், காலை மீட்டிங்ல மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கும் போது, எனக்கு வந்ததா சொல்லி ஒரு கொரியர் கவரை ஆபீஸ் பாய் கைல குடுத்துட்டு போனான். பிரிச்சு பார்த்தா முத்துகுமார் கையெழுத்து போட்ட  பிசினஸ் பார்ம் பிறகு டாகுமென்ட்ஸ்.... ஒரு லட்ச ரூபாய்க்கு செக். 

எனக்கு அழுகையே நிப்பாட்ட முடியல. ரெஸ்ட் ரூமுக்கு போயி அழுவ ஆரம்பிச்சேன். 


= = 


கேடிவில பார்த்திபன் கனவு படம். 

பல வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு சனிகிழமை இரவு திநகர் சரவணா பவன்ல சாப்பிட்டுட்டு கை கழுவும் போது, பக்கத்துல கை கழுவி முடிச்ச பொண்ணு என்னை லேசா உரசிட்டு போன. அவ மேல அடிச்ச வாசனை என்னை அப்புடியே கிறங்க அடிச்சுருச்சு. பிறகு வெளில வந்து கார் ல ஏறி போயிட்டா. நான் பைக்ல அந்த கார் பின்னாடியே போயிட்டு இருந்தேன் அவ வீடு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க. 

அண்ணா நகர் டிராபிக் சிக்னல்ல அந்த காரை மிஸ் பண்ணிட்டேன். பிறவு வந்த ஞாயித்து கிழமைல அண்ணா நகர் முழுக்க சுத்தியும் அவளை கண்டுபிடிக்க முடியல. சோகமா கொஞ்ச நாள் இருந்த பிறகு. பரங்கி மலை ரயில் ஸ்டேஷன்ல வைச்சு அவளை பார்த்தேன். கல்லூரி நாட்கள்ல அவ பின்னாடியே தான் சுத்தினேன். பிறகு ஒரு நல்ல நாள்ல அமெரிக்க மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு போயிட்ட. 


= = 


பதவி உயர்வுக்கு பிறவு புது விசிடிங் கார்டு இன்னைக்கு வந்துச்சு.... சரின்னு எதாச்சு கிளையன்ட்க்கு தந்து பந்தா காட்டுவோமேன்னு காலைல இருந்து போன இடத்துல எல்லாம் கார்டு நீட்டி பார்க்குறேன், எவனுமே வாங்கல ; வெறும் மொபைல் நம்பர் மட்டும் வாங்கினாங்க. ரொம்ப சோகமா போயிருச்சு.... வீட்டுல வர வழில எப்பவும் டி கடைல டி குடிப்பேன்... இன்னைக்கு டி குடிச்சு முடிச்ச பிறவு காசு தரும் போது புது விசிடிங் கார்டையும் தந்துட்டேன். டி மாஸ்டர் என்னைய வினோதமா பார்க்குறதுக்குள்ள ஓடி வந்துட்டேன்.  


= =


சின்ன வயதில் இருந்தே அதிகபடியான தனிமை, தோல்விகள், பயங்கள் என்று இருந்து வந்ததால் புத்தகங்கள் தான் எனக்கு இருந்தே ஒரே நட்பு. தாழ்வு மனப்பான்மையால் அப்பாஸ் யுவா இருவரிடமும் இருந்து தள்ளியே  இருப்பேன். வேலை நேரத்தை தவிர்த்து யாரிடமும் அவ்வளவாக பேச பிடிக்காது. அதுவும் மார்க்கெட்டிங் துறைக்கு வந்த பிறவு மௌன விரும்பியாகவே மாறி விட்டேன். 

எஸ்.ராமகிருஷ்ணன், சுகா, ராஜூ முருகன் ஆகியோர் விகடனில் எழுத ஆரம்பித்த பிறகு... ஒவ்வொரு வியாழனும் பத்திரிக்கை கடைக்காரனிடம் காலை வேளையில் தினமும் நேரில் போயோ அல்லது போன் மூலமாகவோ "அண்ணே விகடன் வந்துருச்சா ?" என்று நான்கைந்து கேட்பது வழக்கமாகி விட்டது. அதே போல் வாங்கிய பிறவு வட்டியும் முதலும் தொடரை தேடுகிறேன். 

அதே போல முன்பெல்லாம் புத்தகங்களை பற்றி யாரவது பேசினால் எனக்கு ரொம்ப பிடிக்கும், இல்லை என்றால் சிலருக்கு போன் பண்ணி "என்ன படிக்குறீங்க ? எதாவது புக்ஸ் பத்தி பேசுங்க"ன்னு கேட்பேன்.... இப்பெல்லாம் வட்டியும் முதலும் தொடரை பத்தி யாரவது பேசுறாங்களான்னு நோட்டம் விடுவது வழக்கமாகி விட்டது இப்பொழுதெல்லாம் ரயிலில் போகும் போது. 

Wednesday, March 14, 2012

**இன்மையின் இருப்பு** - }கவிதை{



பறவைகள் பறந்துக் கொண்டிருக்கின்றன 
அவைகளுடன் பறக்க முடியாமல் 
தூரத்தில் நான் 

அறையில் இருப்போடும் 
பறவைகளுக்கிடைய இன்மையோடும் 
இருக்கிறேன் நான் 

என் இன்மையோடு பறவைகள் 
பறந்து போயின 
கண்ணாடியை பார்த்தேன் 
என் இன்மை போய் விட்டதா 
என்று தெரியவில்லை 

சுழியத்தினுள் சிக்கி இருப்பவனுக்கு 
சுழியத்தின் வடிவம் தெரிவதில்லை. 

= = = = = 


தாமரை இலையில் இரு துளி நீர் 
இலையை மடக்கிய பொழுது 
இரு துளி ஒன்றோடு ஓன்று 
கலந்து 
இரண்டு என்ற நிலை காணமல் போனது

தாமரைகளை பூஜைக்கு மட்டும் பயன் படுத்துகிறார்கள் மனிதர்கள். 

Tuesday, January 17, 2012

**காமம் - Sexually Starved** - 5 :: }தாழ்ந்து போகுதல்{



தாழ்ந்து போகுதல் என்பது மனிதன் இரண்டு விஷயங்களில் மட்டுமே மேற்கொள்கிறான். ஓன்று வயிற்று பசி இன்னொன்று உடல் பசி. வயிற்று பசி என்று வரும் பொழுது மனிதனுக்கு பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள்; ஆனால் காமம் என்ற கோட்பாட்டில் பத்தோடு வேறேதுவுமிருந்தால் அதுவும் பறந்து போகும். சாப்பாட்டை பசி என்று வரும்  பொழுது, எப்பொழுதும் வெறி பிடித்தது போல் சாப்பிட்டு பழகியவன், காமம் என்ற விஷயத்தில் அவனால் எப்பொழுதும் அப்படி செயல் பட முடியாது . முக்கியமாக காமம் என்பது இருவர் சமந்தபட்ட விஷயமாய் இருப்பதினால் பல நேரங்களில் தாழ்ந்து போக வேண்டி தான் இருக்கும். 


எல்லோருக்கும் உடலுக்கு தான் வயதாகுமே தவிர, மனசுக்கு வயதாகுவது இல்லை.இருபத்தைந்து வயதில் ஒருவனுக்கு இருபத்தொன்று வயது பெண்ணிடம் இருந்த என்ன உடலுறவு இன்பம் கிடைத்ததோ, அதே போல் அவனுக்கு அறுபது  வயதாகும் பொழுது அதே போன்ற இருபத்தொன்று வயது பெண்ணிடம் இருந்து அதே இன்பத்தை பெற வேண்டும் என்று நினைக்கும் எவனுமே தாழ்ந்து போக தான் செய்வான். என்ன தான் பணம், அதிகாரம் என்று ஒரு பெண்ணை வசபடுத்தி விட்டாலும், தாழ்ந்து போய் இன்பம் கொள்வார்கள் சிலர். 


ஒரு ஆய்வுக்காக நானும் என் நண்பனும் பாலியல் தொழில் செய்யும் சிலரை சந்தித்த பொழுது  " சில பேரு நாய் குட்டி மாதிரி தவிழ்ந்து போவாங்க, அடிமை மாதிரி சொன்னதையெல்லாம் செய்வாங்க... இன்னும் சில பேரு அவங்க மேல ஒன்னுக்கு எல்லாம் அடிக்க சொல்லுவாங்க" என்று அவங்க சொன்ன பொழுது எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவுக்கு மனுஷங்கள் எல்லாம் போவாங்களா என்று. பிறகு அவர்களிடம் யார் எல்லாம் அந்த மாதிரி செய்ய சொல்லுவாங்க என்று கேட்ட பொழுது " பெரிய பெரிய ஆளுங்க, பணகாரங்க...." என்று சொன்னார்கள். ஏன் இப்படி செய்ய சொல்லுறார்கள்  என்று யோசித்த பொழுது காமத்தில் ஆதிக்கம் செலுத்துவதும், ஆதிக்கத்தில் இருப்பதும் ஒரு சுகம் தானே என்று ஏற்று கொண்டாலும், இது சதொமசொச்ஸ்ம  (Sadomasochism), ஆனால் இதை மன அழுத்தம் சார்ந்த விஷயமாக பார்க்க கூடாது. 


ஆனால் தாழ்ந்து போகுதல் என்பது காமம் சார்ந்த இன்பம் பெறவும் சிலர் மேற்கொள்ளலாம். இந்த வகையை சார்ந்தவர்களை சாடிஸ்ட் வகைறவிலோ மன அழுத்தம் வகைறவிலோ சேர்க்க முடியாது. நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய இன்பம் மறுக்க பட்ட இன்பம் இவர்கள் பல முறை தவறி போவர்கள் ; சிலர் கௌரவம் சமூக அந்தஸ்து  என்று பார்த்துக் கொண்டு  தியாகம் என்ற பெயரில் அவர்களை அவர்களே ஏமாற்றி கொண்டு போலியாக வாழ்வார்கள். 

இதே விஷயத்தை களமாக கொண்டு எடுக்க பட்ட பிரெஞ்சு படம் தான் "The Piano Teacher " . இதில் அவள் முதிர்கன்னி, சமூகத்திற்காக கௌரவ வேடம் அணிந்து கொண்டு வாழ்ந்தாலும், அடிமனதில் காமம் சார்ந்த இச்சைகளுடன் , தேடல்களுடன் தான் இருக்கிறாள். சுய- சித்ரவதைகளுடன்  மற்றவர்களின் அந்தரங்கத்தை எட்டி பார்ப்பதும், வீடியோ கிளப்பில் உடலுறவு காட்சிகளை பார்க்கும் பொழுது ; அவளுக்கு முன் வீடியோவை பார்த்து சுய-இன்பம் கண்டு துடைத்து போட்ட டிஷ்யூக்களை முகர்ந்து  பார்பதுமாய் காலத்தை கழிக்கும் அவள் ஒரு இளைஞ்சனை சந்திக்கிறாள்.

அவன் அவளது மாணவன். எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அவள் அடைகிறாள், அவன் அவளை புணர்கிறான். பிறகு அவனை தன் அடிமையாக நடத்தி, இன்பம் அடைகிறாள். அவன் தன் ஆளுமைக்கு உட்பட்டு நடக்கிறான், அடிமை, வடிகால் என்று அவனுடனான உறவு எத்தகையது  என்ற குழப்பத்தில் இருக்கிறாள் அவனுடன் சில காலங்களுக்கு. 

இதனிடையே அவளது செயல்களால் வெறுப்படையும் அவன் ஒதுங்கி போகிறான். இதனை அடுத்து அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவளது  மன இச்சைகளை ஓர் கடிதம் மூலம் அவனுக்கு சொல்கிறாள் ; " நான் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நீ வந்து என்னை அடித்து, சுவரில் என் தலையை மோதி, கைகால்களை கட்டி போட்டு, துன்புறுத்தி ....... என்னை புணர வேண்டும். அப்பொழுது பக்கத்து ........" என்று போகிறது அந்த கடிதம். பாலியல் வேட்கையும் அதனூடான பிறழ்வு நிலை மன போராட்டங்களையும் நன்றாக காட்சி படுத்திருப்பார் இயக்குனர். 

ஆனால் இந்த படத்தில் தாழ்ந்த நிலை என்பது அவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை, சமூக அந்தஸ்து போன்றவற்றால் வருகிறது  என்று சொல்லிபட்டிருக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்த ஒருவன் இந்த விஷயத்தில் தாழ்ந்த நிலைக்கு போவானா

போவான் என்று சொல்கிறது சரித்திரம். 

மும்தாஸை பார்க்கும் முன்னரே ஷாஜகானுக்கு திருமணம் ஆகிவிட்டது, உடல் சார்ந்த இன்பத்தை போதும் போதும் என்றளவுக்கு அனுபவித்திருந்தார் . ஆனால் மும்தாஸ் மேல் காதல் கொண்டார் ஷாஜகான், அப்படி காதல் கொண்டதற்கு காரணம் மும்தாஸின் அழகு என்று சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். திருமணதிற்கு பின்  மும்தாஸின் அந்தபுர பறவையாக மாறி போனார் ஷாஜகான். ராஜ்ய முடிவுகளை எல்லாம் மும்தாஸ் தான் எடுத்ததாகவும் , மன்னர் அதை நடுமுறை படுத்தும் அமைச்சராக இருந்தாகவும் சொல்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறது இந்த விவகாரத்தை. 

மும்தாஸ் உண்மையாக மன்னரை காதலித்தாரா இல்லை வேண்டும் என்று செய்தாரா என்று யாராலும் உறுதியாக சொல்ல முடிவதில்லை. மும்தாஸின் வியாபாரி தந்தையை பற்றி அவ்வளவாக தெரியவில்லை, அவர் தீர்மானத்தின் மூலம் என்ன என்ன பலன்களை அனுபவித்தார் என்று தெரிந்தால் மட்டுமே மும்தாஸ் - ஷாஜகான் உறவை பற்றி சொல்ல முடியும்.  எப்படி இருந்தாலும் அதற்க்கு மும்தாஸ் கூடுத்த விலை ; அவர்களது உயிர். ஷாஜகான் மும்தாஸை படுக்கை அறை இன்பம் தரும்  பொருளாக பார்த்தார். மும்தாஸ் பிள்ளைகளை பிரசவித்து  பிரசவித்தே  உயிரை விட்டதாகவும் சொல்கிறார்கள். இதில் யார் யாருக்கு தாழ்ந்து போனார்கள் என்பது காலத்திற்கே தெரிந்த உண்மை ; சரித்திர புதிர். 

தொடரும். 

Wednesday, December 21, 2011

தந்திரம் - ட்டி.கண்ணன்

வெயிலின் குன்றோ 
சிறு செம்பவழ குன்று மணியோ 
ஆலய மணியின் கடைசிச் சொடுக்கோ 
அருங்காட்சியகத்தின் மெல்லிருட்டோ 
மோர்கள்  பற்றிய ரகசிய வதந்திகளோ 
மரணிப்பவனின் கண்ணின் கடைசி கருணையோ 
பொறுமையின் கண் வழியும் பெருமிதமோ 
உடனே வசீகரிக்கப்படுகிறோம் 
உள்ளார்ந்த கேள்விகளுக்கு விடை 
தேடாமல் மொழிக்குள் அமர்கிறோம் 
தேடியும் கிடைக்காமல் அலுத்தவர்களின் 
முகம் பூக்கும் மெல்லிய காற்று
மொழியின் வரிகளை முறிக்கிறது 
வசீகரப்படுகிறோம்.  

நன்றி - காலம் ::சிற்றிதழ் ; விலை - ரூ.60  }}}அசோகமித்திரன் சிறப்பிதழ்{{{ :::: அக்டோபர் - டிசம்பர் 2011 இஷ்யூ :::: பக்கம் - 11 :

தொடர்ப்புக்கு ::::  மொபைல் - 95436 16642 ::    
ஈமெயில் --   kalammagazine@gmail.com :: 

Sunday, December 18, 2011

ராபியா பஸ்ரியின் (Rabia Basri's) }{ }{ உதவாத பெண்மை / யோனி

"மௌனத்தில் 
அவள் வாழ்ந்தாள்.
மௌனத்திலேயே 
அவள் இறந்தாள்.
செய்தி கேள்விப்பட்ட பிறகு,
"உதவாத யோனி" என்று 
அவர்கள் சொன்னார்கள்.
நான் அவளது சடலத்தின் முன்பு 
மண்டியிட்டு அமர்ந்தேன்.
அவளை மறைத்திருந்த 
சவத்துணியை 
எனது நகங்கள் கொண்டு 
கிழித்தேன்.
பிறகு அவளது கல்லறையில் 
ஏதோ எழுதினேன்."

இந்த கவிதை என்ன பெயர் என்று  விசாரித்து பார்த்ததில் யாருக்கும் தெரியவில்லை. எனக்கு என்ன பெயர் வைக்குறதுன்னே  தெரியல. 

இந்த கவிதை எழுப்பிடும் கேள்விகள் பல. அந்தந்த கேள்விகளுக்கு எல்லாம் எது பதிலாக இருக்கும் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். யார் அவன் ??? அவர் அவளது கல்லறையில் என்ன எழுதினான் ??  அவளுக்கு அவனுக்கு என்ன தொடர்ப்பு ??? 

இந்த கவிதையின் வழியாக கவிஞர் இன்னொரு விஷயத்தையும் சொல்லாமல் சொல்லுறாரு. "மௌனத்தில் அவள் வாழ்ந்தாள்" என்ற வரி எத்தனை வலி தாங்கி உள்ளது என்று அதை படிக்க படிக்க தான் எனக்கு தெரிகிறது. பிறகு மத்தியில் "உதவாத யோனி" என்ற இடத்தில அவளது கணவன் புணர்ச்சிக்காக மட்டுமே அவளுடன் வாழ்ந்து / இருந்து இருப்பான் என்று தெரிகிறது.

அந்த இடம் வரைக்கும் எனக்கு தெளிவாக புரிந்த கவிதை, பிறகு வந்த வார்த்தைகளில் / வரிகளில் எதுவும் எனக்கு புரியவில்லை. முக்கியமாக "சவத்துணியை,  எனது நகங்கள் கொண்டு கிழித்தேன்" என்ற வரி எதை குறிப்பாதாக இருக்கும் என்று இதை டைப் அடிக்கும் வரைக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவும். 

நன்றி - வலசை : பயணம் -1 :: பக்கம் : 33 

Thursday, December 15, 2011

**கலவை** - }} மம்பட்டியான் {{ கூகிள் பஸ் {{{


கூகிள் கம்பெனிகாரங்க இதோ அதோன்னு இழுத்தடிச்சு, பூச்சாண்டி எல்லாம் காட்டி இன்னைக்கு காலைல முடிட்டாங்க. ஏதோ ரொம்ப நெருங்கி பழகின தோஸ்த் என்னை விட்டு போன மாதிரி இருந்துச்சு. ஒரு வருஷம் போனதே தெரியல. சண்டை, பிடிவாதம்ன்னு பக்கவாதம் வராத குறையா போனாலும், அதுல இருந்த ஒரு ப்ளஸ் பாயிண்ட் :::: அது எல்லோரையும் ரொம்ப அக்டிவ்வா வைச்சு இருந்துச்சு. நிமிஷத்துல லைக்கிங், காரி துப்புறதுன்னு சுவாரசியமா போச்சு. 

அரசியல் டிபேட் நடுக்குற இடத்துல எல்லாம் சும்மா ஒரு லைக்கிங்கை போட்டுட்டு வேடிக்கை பார்பேன். பதிவுலகம் போலில்லாமல் எல்லோரையும் ஒரே இடத்துல படிக்க முடிஞ்சுது. பல நட்புகள் உருவாக காரணமாகவும் இருந்தது. முக்கியமா பதிவு எழுதுற டைம்ல  சில பல புஸ்தகம் படிச்சேன். 

கூகிள் பஸ்ஸை என் வாழ்க்கைல மறக்கவே முடியாது :::: சென்னைல இப்ப இருக்குற வீட்டை கட்ட ஆரம்பிச்ச போது, நான் பஸ் விட ஆரம்பிச்சேன், இப்ப கட்டி முடிச்ச எங்களோட வீட்டுல இருக்குற என்னோட ரூம்ல உட்கார்ந்துகிட்டு இந்த பதிவை டைப்பிக்கிறேன். வயசான காலத்துல நினைச்சு நினைச்சு சிரிக்க நிறைய விஷயம் கிடைச்சுது  இந்த கூகிள் பஸ் மூலம். அந்த அனுபவங்களை  மனசுல சேமிச்சு வைச்சு கிட்டேன். 

இப்ப கூகிள் ப்ளஸ்ல அதே மொக்கைய ஆரம்பிச்சு இருக்கேன் :::: உருப்படியா அதுல போஸ்ட்டிக்க கொஞ்ச நாளாகும். 

எழுதாத இந்த ஒரு வருஷத்துல பல பேரு இலக்கியத பொரட்டி பொரட்டி எடுக்குற நோக்கத்துல பல திரட்டிய ஆரம்பிச்சு இருக்காங்க. இப்ப நான் அதுலை எல்லாதுலையிலும் போய் என்னோட பிளாக்கை சேர்க்கணும். 

பிரபல பதிவர்கள் பலர் பஸ்ஸிட்டு கொண்டிருந்த காலத்துல நிறைய பேரு பதிவெழுத ஆரம்பிச்சு இருக்காங்க ; அவங்களை எல்லாம் படிக்க ஆரம்பிக்கணும்.  

டிஸ்கி - பதிவுலகத்துல என்ன ஒரு குறைன்ன, யாரையும் டக் பண்ணிவிட்டுட்டு கும்மி அடிக்க முடியாது. 
= = = = = 
நம்ம பயபுள்ள சேடன் எழுதின புரட்சி இருபது/இருபது {அதாங்க REVOLUTION 2020 } வந்த அன்னைக்கே வாங்கி படிச்சுட்டேன். அவரோட மத்த நாவல்ல வர மாதிரி எல்லாம் கிளைமாக்ஸ் ல ஒரு தேவ தூதர் பேசுறதில்ல :::: ஆன்னா நாயகனும் நாயகியும் ஒட்டிண்டு இஷிண்டு  உடற்பயற்சி எல்லாம் பண்ணுறாங்க. அதுலயும் அந்த கோபால் மிஸ்ரா ( முரளிதரனோட துஸ்ரா எல்லாம் இல்லைங்க ) ஒரே பாட்டுல  தொழிலதிபர் ஆனா பிறவு கதைல பெருசா ஒரு டிவிஸ்ட் அன் டர்ன் எல்லாம் இல்லை ; ஆனாலும் சுவாரசியமா போகுது. 

= = = = = 
காலம் பத்திரிக்கைல ( இந்த மாசத்து இஷ்யூ :::: அசோகமித்திரன் ஸ்பெஷல்) அ.முத்துலிங்கம் "சோப்பும் வாசனையும்" ங்குற சிறுகதைய பத்தி எழுதிருக்காரு. படிச்சதுல இருந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்டுடா இருக்கேன். அதுவும் தான் கொலை செய்ய பட போகிறோம்ன்னு தெரிஞ்சே மௌனமா புருஷன் பின்னாடி பொண்ணை பத்தி படிக்கும் போதே ஒரு மாதிரியா இருக்கு. இத்தனைக்கும் அது அந்த சிறுகதைய பத்தின ஒரு சிறுகுறிப்பு தான். படிக்க வேண்டிய சிறுகதை லிஸ்ட்ல அதையும் வச்சு இருக்கேன். 

சிறுகதைன்ன உடனே ஞாபகம் வருது ஆதவனின் "சினிமா முடிந்தபோது" ங்குற சிறுகதைய பத்தி ரொம்ப நாளா விலாவாரியா எழுதணும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். முடிஞ்சா அடுத்த பதிவுல எழுதுடிறேன். 

டிஸ்கி - என்னோட இரண்டு சிறுகதையும் ரொம்ப டிராப்ட்ல இருக்கு ; கூடிய சீக்கிரம் பப்ளிஷ் பண்ணி இலக்கியத்தை கொலையா கொல்லுவோம். 

= = = = = 
எனக்கு பலப் பிக்ஷன் படங்களில் ரொம்ப பிடித்தது மம்பட்டியான் தான். அதுலயும் "காட்டு வழி போற பெண்ணே கவலை படாத...." ங்குற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு மாதிரியான ஹால்லோ வாய்ஸ்ல இருக்கும் அந்த பாட்டு. அதுவே அதுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்டா இருக்கும். அந்த காலதுலையே படத்தை ரொம்ப த்ரில்லிங்கா கொண்டு போயிருப்பாங்க ::::: இப்ப எப்படின்னு வந்திருக்கோன்னு தெரியல. அதுவும் பழைய மசால் வடைய தின்ன மாதிரி தியாகராஜன் ஸார் அதுல மூஞ்சிய உர்ன்னே ஒரு மாதிரி வச்சு இருப்பாரு. பிரசாந்த் எப்படி பண்ணிருக்கோ தெரியல. அவரோட "கண்ணெதிரே தோன்றினாள்" படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ::::: ஸோ இந்த படம் வெற்றி பெறணும்ன்னு கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்க கிட்ட சொல்லி, வேண்டிக்க சொல்லுறேன்.

= = = = = 
 மல்லிகா ஷெராவத் நடிச்ச மர்டர் படத்தை, அவரோட அழகுக்காகவே இரண்டு மூணு வாட்டி பார்த்திருக்கிறேன் :::: ஆனா ஒஸ்தி படத்துல வர கலாசால பாட்டை பார்க்கும் போது, அவருக்கு ரொம்ப வயசு ஆனா மாதிரி தெரியுது, இல்லாட்டி காஸ்டியூம் சரியா பொருந்தமா போயிருக்கலாம். அதுவும் எல்.ஆர். ஈஸ்வரி குரல் அவருக்கு  பொருந்தமா போய், அதுவே கவர்ச்சியை குறைச்சுருச்சுன்னு நினைக்கிறேன். 
= = = = =
தமிழுணர்வை பத்தி பேசுறதுன்னாலே "ஏழாம் அறிவு" யை தமிழர்கள் கொண்டாடணும்ன்னு சொல்லுறாங்க. ரைட்டு ஓகே. அதே மாதிரி மக்களின் நன்மைய, நாட்டு பாதுகாப்பை பத்தி பேசுற, மக்களுணர்வை பேசுற "வேலாயுதத்தை" இந்த நாடே கொண்டாடணும்ல .... ஏன் அத பத்தி யாரும் பேசல ?

= = = = = 

சரிங்க .... தூக்கம் வருது. கமெண்ட்டைய போட்டுட்டு, அப்படியா வோட்டையும் குத்தி ருங்க. அப்பாலிக்க பார்போம்.  

KEEP SMILING

ENJOY LIVING

Monday, October 24, 2011

***கலவை*** - **கூகிள் பஸ்ஸில் பயணம் செய்தவை**

போற வழி எல்லாம் கோவம், பொறமை என்ற எச்சிலை துப்பிக் கொண்டே போனால், அதே வழியில் திரும்பி வரும் போது, நாம் துப்பிய எச்சில் தான் நம்மை வரவேற்கும். வாழ்க்கை வாழ்வதற்கே. கற்று கொள்வது, கற்று தருவதற்கே ::::

= = = =
கடைசி நாள்

அன்று தான் எங்களது கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள். பிரம்மை பிடித்தது போல் எல்லோரும் டி கடையில் உட்கார்ந்து இருந்தோம். வாழ்க்கையில் என்ன ஆவோம் ? மீண்டும் சந்திப்போமா ??? என்று எல்லோரும் கவலைப்பட்டு கொண்டிருக்க ::: நானோ அந்த கவலைகளோடு வேறொரு கவலையை பற்றியும் கவலை பட்டு கொண்டிருந்தேன். காதல் :::: அவள் :::: வேலை:::::எதிர்காலம் = கவலை

என்னை தவிர வேறு யாருக்கும் பலமான குடும்ப பின்னணி இல்லை. அதற்காகவும் கவலை பட்டு கொண்டிருந்தேன். என் எதிர்க்காலதுக்காக ஒரு சிற்பத்தை போல என் அப்பா என்னை செதுக்கி கொண்டிருந்தார். என் நண்பர்களுக்கு அப்படிப்பட்ட சிற்பி என்று யாருமில்லை.

கிண்டலும் கேலியுமாய் நேரம் கடந்து போன பின், எல்லோரும் நல்லவர்களாய் மாறி விட தீர்மானித்து, தூரத்தில் wine shop நோக்கி போனோம். ஒரு பீர், மற்றும் ஒரு நீளமான சிகரட்டும் வாங்கினோம் (இரண்டினுடைய பெயர்களும் இப்பொழுது நினைவில் இல்லை). மொத்தம் பதினாறு பேர் (என்னையும் சேர்த்து (யுவா மற்றும் அப்பாஸ் இருவரும் ரொம்ப படிப்ப்ஸ் என்பதினால் அவர்கள் இந்த கோஷ்டியில் சேர்த்து கொள்ளவில்லை))

ஆளுக்கு ஒரு இழுப்பு என்று என் பக்கத்தில் இருந்த பையன் சிகரட்டை பத்த வைத்தான். அடுத்தது என்னிடம் தருவான் என்று எதிர்க்கொண்டிருந்த நேரத்தில், அவனுக்கு அடுத்து இருந்த பையன் புகைக்க ஆரம்பித்தான். அப்படியே சுற்றில் போய், குருமூர்த்தி என்னிடம் சிகரட்டை தரும் போது கங்கு பஞ்சுக்கு பக்கத்தில் இருந்தது. புகைக்க உதடுகளில் வைத்து இழுத்த பொழுது, கண்கள் எரிந்தது. இருமினேன்.

அடுத்தது பீர் ::::: இந்த தடவை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. பாதி அளவில் பீர் இருக்கும் பொழுது, பாட்டில் என்னிடம் வந்தது. சிறிது குடித்தேன். கஷாயம் போலிருந்தது. பிறவு வெளி வந்தோம். பிரிந்து போனோம்

இன்று வரையில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் ...எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார போராட்டத்தில் எனக்கு என்று அடையாளத்தை பெற்று விட்டேன். அதே போல் அவர்களும் அடையாளம் பெற்றார்களா ??? தெரியவில்லை. convocation :::: மேற்படிப்பு ; வேலை என்றாகி விட்டது அப்பொழுது. பார்க்க முடியவில்லை யாரையும் அப்பொழுது.

யுவாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அப்பாஸும் வெளிநாடு போய்விட்டான். தொடர்ப்பில் இருப்பார்களா என்று தெரியவில்லை.

அந்த பதினைந்து பெயர்களையும் சமூக இணையதளங்களில் தேடி தேடி பார்க்கிறேன்.... பார்த்து கொண்டிருக்கிறேன்..... அவர்களோடு நட்பை புதுபிக்க முடியாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே போதும் எனக்கு...

#டைரி குறிப்பு
Oct. 17, 2011

= = = =

அண்ணா நாமம் வாழ்க ; எம்ஜியார் நாமம் வாழ்க :::::: நாளை அவர்கள் நமக்கு போடபோகும் நாமமும் வாழ்க

= = = =

சிறு வயது நினைவுகள் :-

நிறைய விஷயங்கள் இருக்கு, இந்த விளம்பரத்தை பத்தி டைப்பிக்க. ஆனால் கண்களை முடி யோசித்து பார்த்தால் அழுகை தான் வருகிறது. சின்ன வயசுல அப்பா எங்களோட செலவு செய்ஞ்ச நேரம் ரொம்ப ரொம்ப கம்மி தான். அப்படி அவர் எங்களோட செலவு செய்த நேரங்களில், ஸ்கூட்டர் பயணங்களும் அடங்கும். நான் முன்னாடி நிற்க, அண்ணன் அப்பாவுக்கு பின்னாடி உட்கார்ந்து இருக்க ::::: அப்பா ஸ்கூட்டர் ஓட்டுவர். முகத்துல எதிர் காத்து அடிக்கும் போது, ஏதோ வானத்துல பறக்குற மாதிரியே இருக்கும். I miss it :(((

இன்று வரைக்கும் எங்க அப்பா மாதிரி, ஸ்டைலா யாரும் வண்டி ஒட்டி நான் பார்த்ததில்லை

= = = =

கல்லூரி படிக்கும் போது ::::: ஒரு பெண்ணை செமையா இம்ப்ரஸ் பண்ண வேண்டுமென்பதற்காக ரத்தத்தால் எடுத்திய காதல் கடிதம் தரலாமென்று முடிவு செய்தேன். அவளுக்கு ஏகப்பட்ட போட்டி பசங்க மத்தியில். இரண்டு நாள் கழித்து வேறொருவன் பிரோபோஸ் பண்ண போவதாய் தெரிந்ததும், இன்னும் பயம் ஜாஸ்தியாகிருச்சு. அவனுக்கு முன்னாடி நான் அவளுக்கு பிரோபோஸ் பண்ணி, அவளை கரெக்ட் பண்ணனும் என்பதற்காக தான், இந்த ரத்த காதல் கடித திட்டம்

அன்று மாலை விடுதி அறையில் அதற்காக பிளேட் உடன் ஆயுதமாக இருக்கும் போது ஒரே பயமா இருந்துச்சு. என்ன பண்ணுறதுன்னு தெரியல.

பிறவு பயம் காரணமாக பெருசா ஒன்னும் பண்ணல. கறி கடைல கொஞ்சம் ஆட்டு ரத்தம் வாங்கி, லெட்டர் எழுதி அவளுக்கு தந்துட்டேன். பாவி மவ பிரின்சிபால் கிட்ட போட்டு கூடுத்துடா.

வேறு வழி இல்லாம உண்மையை சொல்ல வேண்டியதா போயிருச்சு

# தொழி பிரேமா

= = = =

பல உலக சினிமாக்களை நிம்மதியா வீட்டு ஹாலில் உள்ள டிவியில் போட்டு பார்க்க முடியல. தீடிர்ன்னு முண்டமா வந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சுறாங்க

= = = =
எந்த மனிதனுக்கும் சுயம் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. அதை ஏற்று கொள்வதில் தான் அவனுக்கு பிரச்சனை. நாம் இப்படி தான் என்று மனிதன் ஒரு பொழுதும் ஒத்து கொள்வதில்லை. "நாம் இப்படி இல்லை" என்று தினமும் அவனை அவனே ஏமாற்றி கொள்ளும் முயற்சிகளில் தான் மனிதன் தீவிரமாக இருக்கிறான்

= = = =
பெண் என்பவள் புகுந்த வீட்டில் இடதுசாரியாகவும், பிறந்த வீட்டில் வலதுசாரியாகவும் இருக்கிறாள்.

= = = =

2005 யில் நண்பரிடம் நான் கூடுத்த யவன ராணி நாவல் (இரண்டு புத்தகம்) பல ஊர் சுற்றி, இன்று தான் கைக்கு வந்து சேர்ந்தது.

சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம். வாங்கிய புத்தகத்தில் வாங்கிய தேதி, படித்து முடித்த தேதி மற்றும் அந்த புத்தகத்தை பற்றி என்னுடைய எண்ணங்கள் என்று எழுதி வைப்பேன். 2005 ல என்ன மனநிலையில் இருந்தேனோ தெரியவில்லை சண்டை காட்சிகளை பற்றி புகழ்ந்து எழுதிருக்கிறேன். இதை படித்த உடன், மற்ற புத்தகங்களையும் எடுத்து, நான் எழுதி வைத்த குறிப்புகளை படித்தேன். நல்லா பொழுது போனது. இந்த மாதிரியான பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா ???

டிஸ்கி - சுஜாதாவின் "பிரிவோம் சிந்திப்போம்" ல sad smiley போட்டிருக்கிறேன்.
= = = =

புதுமைபித்தன் சிறுகதை தொகுப்புல, எக்ஸாம் பத்தியும் அதற்க்கு படிக்கும் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் பத்தியும் புதுமைபித்தன் ஒரு கதை எழுதிருக்கார், செம பட்டாசா இருக்கு. அப்படியே என்னோட கல்லூரி வாழ்க்கையை திரும்ப பார்த்த மாதிரி இருந்துச்சு. எல்லா காலத்துலையும் ஸ்டுடென்ட்ஸ் ஒரே மாதிரியா தான் இருந்திருக்காங்க போல இருக்கு.

= = = =
"ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுப்பவர்கள் இருக்க தான் செய்வார்கள்" ன்னு சொல்லுறது "கற்பழிக்க பெண்கள் இருக்கும் வரை கற்பழிப்பவர்கள் இருக்க தான் செய்வார்கள்" ன்னு சொல்லுற மாதிரி இருக்கு. இந்த மாதிரியான லூஸ் தனமான தத்துவங்களை சொல்லுகிறவர்களை கண்டால் கோவம் தான் வருது

= = = =
பல விதமான அரசியல் கட்டுரைகளை படித்த பின் பொதுபுத்தி என்ன சொல்லுகிறதென்றால் - " ஆணியே புடுங்க வேண்டாம் "
= = = =


Sunday, September 18, 2011

**என் பெயர் ராமசேஷன் - நாடோடி பிம்பங்கள்**

"ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர்." என்று முதல் வரியில் ஆரம்பித்து "பல்லை உடைத்துக் கையில் கொடுப்பேன், ஜாக்கிரதை" என்று கடைசி வரியில் கதை முடிவதற்குள், நான் ராமசேஷனாகவே வாழ்ந்துவிட்டேன். மற்ற நாவல்களில் எல்லாம் கதைமாந்தர்களுடன் கொஞ்ச நாள் வாழ்வேன், ஆனால் ஆதவன் அவர்கள் என்னை அவரது எழுத்தின் மூலம் என்னை நூற்றி எண்பத்தெட்டு பக்கங்களுக்கு ராமசேஷனாக மாற்றிவிட்டார். புத்தகம் முடித்து மாதங்களான பின்னும், வாசிப்பனுபவ சுவடுகள் என்னை விட்டு போகவில்லை.

கதாவிலாசத்தில் ஆதவனை பற்றி படித்த போது கூட, எஸ்ராவின் எழுத்துநடையில் மயங்கிருந்தேனே தவிர, ஆதவனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. பிறகு புத்தக கடையில் சுற்றி வரும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தின் அட்டைபடம் என்னை ரொம்ப வசீகரித்திருந்தது, அதற்காகவே வாங்கினேன். கதைக்கும் அட்டை படத்திற்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்று அடிக்கடி யோசிப்பேன். வாசித்து முடித்த பின், இந்த படத்தை விட வேறெந்த படமும் இதற்க்கு பொருத்தமாக இருக்க முடியாது என்பதை தெரிந்துக் கொண்டேன்.

நாடோடி பிம்பங்கள் - இந்த பதிவுக்கு ஏற்ற தலைப்பா இது என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை, ஆனால் எனக்கு பொருத்தமானது. நான் அடையாளங்களை எப்பொழுதும் வெறுப்பவன். வெறும் அப்பாவி மேவியாக இருந்த வரைக்கும் சந்தோஷமா இருந்தேன். ஆனால் பொருளாதார அடிமை வேடமிட்ட பிறகு, தினந்தோறும் புது புது அடையாளங்களை விரும்பமில்லாமல் அணிந்து கொள்கிறேன் . அதிகாரத்தை காட்ட, பணிவை காட்ட........ இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அதற்கெல்லாம். நான் நல்லவனா என்று தெரியாது ;கெட்டவன் இல்லை. ஆனால் கிளையன்ட்களுக்கு முன்னால் தூய்மையான நெய்யில் செய்த நல்லவன் என்று நடிக்க, அடையாளமற்ற எனக்கு இந்த தற்காலிய பிம்பங்கள் பெரிதும் பயன் படுகின்றன. ஆனால் கூத்து ஆடுபவர், அலங்காரத்தை கலைத்த பின், அந்த பவுடரில் உள்ள நச்சு தன்மையால் அவனது முகத்திற்கு பாதிப்பு வருவது போல், எல்லா பிம்பங்களையும் கலைத்துவிட்டு
வீட்டிற்கு வந்த பிறகும் எனக்கு அன்று அணிந்த பிம்பங்களின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.

எந்தவித அடையாளமோ, பிம்பமோ இன்றி, தோழமை உணர்வுக்காக சிலரை நாடி செல்வேன், நான் போகும் சமயம் அவர்கள் ஏதோ பிம்பத்தோடு இருப்பதை கண்டு, நொந்து போய் திரும்ப வருவேன். எனது இயல்புகளுடன் யாரிடமும் இயல்பாய் இருக்க முடிவதில்லை. பிறர் அணிந்து கொள்ளும் பிம்பங்கள் குறித்து குழப்பங்கள் / கோவங்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொள்ளும். அதை பற்றிய யோசனையாகவே இருப்பேன். ராமசேஷனும் அப்படியே. ராமசேஷனை சுற்றி உள்ளவர்களை பற்றிய அவனது பார்வையில் பேசுகிறது இந்த நாவல்.

மனிதர்கள் எப்பொழுதுமே ஒரே மாதிரி தான். எந்த நிலையிலும் தனது விருப்பங்களை நிலைநாட்ட, இருப்பை தக்க வைத்துக் கொள்ள, பிறர் மத்தியில் முக்கியத்துவம் பெற ; மற்றவர்களை குப்பை தொட்டியாக்கி தங்களது விருப்பங்களை திணிப்பதையே முக்கிய வேலையாக செய்வார்கள். ராமசேஷனை சுற்றியும் அப்படிபட்ட மனிதர்கள் தான். அவனது அம்மா,அத்தை, நண்பர்கள், உறவினர்கள், காதலிகள் என்று எல்லோரும் அவனிடத்தில் ஏதொரு பிம்பத்தோடு பழகுகிறார்கள். அவனது எண்ண ஓட்டத்தில் அதையெல்லாம் கிண்டலும் கேலியுமாய் எதிர் கொள்கிறான். அவனும் சில சமயம் பிம்பங்களை அணிந்து கொள்கிறான், வெற்றியும் தோல்வியும் அடைகிறான்.


பிம்பங்கள் சார்ந்த குழப்பங்களும் அவனுக்கு வருகிறது. எனக்கும் அந்த மாதிர்யான குழப்பங்கள் அடிக்கடி வரும் : யாரிடம் எந்த பிம்பத்தோடு பழகினேன் என்று.

நிறைய பேர் சொல்கிற மாதிரி, இந்த நாவலில் ஏதொரு இடத்தில நம்மை பொருத்தி பார்த்து கொள்ளலாம். அதிலும் கதைக்கு முன்னுரையாக லா.ச. ராமாமிருதம் அவர்கள் "அபிதா"வில் எழுதிருந்ததை போட்டிருக்கிறார்கள் .... அவ்வளவு பொருத்தும்.

"நான் ஏதோ ஒரு விளையாட்டுக்காக நாய் வேஷம் போட்டேனென்று என்னை அந்த வேஷத்திலேயே நிரந்தரப்படுத்தப் பார்க்கிறாள்"... இந்த வரிகள் எனது மன காயங்களை பிரதிபலிப்பு செய்கிறது. அலுவலக நேரத்திற்கு பிறகான நேரங்களில், அல்லது வாரயிறுதி நாட்களில் அலுவலக நட்புகளை சந்திக்கும் பொழுதெல்லாம், அவர்கள் என்னை, நான் போட்டுக்கொள்ளும் அலுவலகதிற்கான பிம்பத்தோடு தான் சந்திக்க விரும்புகிறார்கள். பிம்பங்கள் என்ற குப்பை தொட்டியை நான் எப்பொழுதும் சுமப்பதில்லை என்று அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதனால் இப்பொழுதெல்லாம் யாருக்கும் விளக்குரை தருவதில்லை... இன்ஸ்டன்ட் பிம்பம் அணிந்து கொள்கிறேன்.

மொத்தத்தில் - எல்லோரும் படிக்க வேண்டிய நூலிது

"ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும்
வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெற்ற நாவல். சுய நிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத்
தேடலும் கொண்ட இளமையின் வண்ணம் மிகுந்த சித்திரம் இந்தநாவல்." புத்தக பின் அட்டையிலிருந்து.

இந்த நாவலை படிக்கும் பொழுது ஆதவன் நமது ஆழ்மனதில் இருக்கும் சில காயங்களுக்கு தனது எழுத்துக்களின் மூலம் மயிலிறகில் மருந்து தடவிகிறார். வண்ணங்கள் ஆயிரம் அழகாய் இருந்தாலும், அவைகளை பார்த்து ரசிக்க முடியுமே தவிர, அதிலோன்றாக முடியாது, ஆனால் ஆதவன் நம் கையை பிடித்து ஒரு அற்புதமான வாசிப்பனுவ பயணத்திற்கு கொண்டு செல்கிறார். அதில் நம்மை போலவே ஏமாற்றங்களையும், எரிச்சல்களையும் ராமசேஷன் சந்திக்கிறான்.

ஆதவனை பற்றி ..... அவரது படைப்புகளில் இதை மட்டும் வாசித்திருக்கிறேன் :::: இப்பொழுது ஆதவன் சிறுகதை தொகுப்பை வாசித்து கொண்டிருக்கிறேன். அதனால் ஆதவனை பற்றி அசோகமித்திரன் "1960 , 70 களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக் கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியோக ஆசை - அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப் போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை." என்கிறார்.

ஆதவனை பற்றி இந்திரா பார்த்தசாரதி " நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்" என்கிறார்.

ஆதவனின் மற்ற படைப்புகள் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் "என் பெயர் ராமசேஷன்" கொண்டாடப்பட வேண்டிய ஓன்று. எனது கல்லூரி காலத்திலையே இந்த நாவல் எனக்கு கிடைத்திருந்தால், வாழ்க்கையின் வெறுமையான சில பக்கங்களை தவிர்த்திருக்கலாம். கல்லூரி படிப்பவர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய ஓன்று, ஏனென்றால் ராமசேஷனும் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் எனக்கென்னவோ இன்றும் எல்லா கல்லூரிகளிலும் ராமசேஷன் உலவி வருவதாகவே தோன்றுகிறது.

நாவலை படிக்கும் பொழுது , பிடித்த ஜன்னலோர ரயில் பயணம் போல் இருந்தது. கடைசி பக்கம் வந்த பொழுது, அய்யோ நாவல் முடிய போகிறதே, ராமசேஷனுடன் இனிமேல் பயணிக்க முடியாதா ?? என்றெல்லாம் மனதிற்கு வேதனை பட்டேன்.

வேறென்ன சொல்ல .... நாவலை படித்து முடித்த பிறகு I was completely swept off my feet .

வெளியீடு - உயிர்மை பதிப்பகம்
விலை - ரூ.120

Sunday, September 11, 2011

The Lover (L'Amant) (1992) - படிக்க வேண்டியது ::: பார்க்க கூடாதது.

"எங்களது புணர்வின் அங்கமாய், தெருவில் நடந்து போகிறவர்களும், சத்தங்களும் ஆகி போயின. முடிய அறைக்குள் இருந்தாலும், ஏதோ அந்த சத்தங்கள் மத்தியில் நான் நிர்வாணமாய், வெட்கம் இல்லாத ஸ்தீரியாய் உணர்ந்தேன். அவனது முத்தங்களுக்கிடைய தெருவில் ஓர் வியாபாரி விற்று கொண்டு போன கருவாடு வாசனையையும் உணர்ந்தேன்."

இந்த படத்தின் காட்சிகள் மூலமாக யாரவது கதையை புரிந்து கொள்ளலாம் என்று முயற்சி செய்தால், கண்டிப்பாக அவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். ஏனென்றால் கதையென்று எதுவுமில்லை ; நான் பார்த்த வரைக்கும். இருந்தாலும் இந்த படத்தை பார்க்க ஏதொரு காரணம் உண்டென்றால், அது வசனங்கள் தான். சிற்சில இடங்களில் அழகாய். மேல நான் மொழிபெயர்த்திருக்கும் வசனம் அப்படியொன்றும் சிறப்பான காட்சியில் வரவதில்லை, இருந்தாலும் அதில் ஏதொன்று எனக்கு பிடித்திருந்தது.

கொஞ்சம் நாள் முன்பு, நானொரு வடநாட்டு கதையை படித்தேன் (வங்காள நாட்டு கதை என்று நினைக்கிறேன் : சரியாய் தெரியவில்லை), நாட்டு விடுதலைக்கு பிறகான காலகட்டத்தில், கலவரங்களுக்கு மத்தில் : தனது காதலியை முத்தமிட ஒரு மறைவான இடத்தை தேடி அலைகிறான் ஒரு காதலன் தனது காதலி உடன். தெருவில் எங்கும் கலவரக்காரர்கள் கோஷமிட்டபடி சென்று கொண்டிருப்பதால், தனிமையான இடமில்லாமல் தவிக்கிறான். ஒரு சிக்கலான சூழ்நிலையில், அவனுக்கு இடம் கிடைக்கிறது. அங்கு அவனது காதலியை அணைத்து கொள்கிறான், அவள் வைத்திருக்கும் பூக்களை மோகர்ந்து பார்க்கிறான், லேசாக முத்தமும் தருகிறான். அப்பொழுது அங்கு கலவரக்காரர்கள் சத்தம் போட்டு கொண்டு வருவதால். இருவரும் பிரிந்து போய்விடுகிறார்கள். அன்று இரவு அவன் கண் முடி, அந்த நிகழ்வை நினைத்து சந்தோஷப்பட நினைத்து, கண்களை முடி கனவு காண்கிறான், கனவில் முத்த நினைவுகளோடு கலவரக்காரர்களின் கோஷமும் அவனுக்கு கேட்கிறது. :::: இந்த கதையில் வருமிந்த நிகழ்வு தான் படத்தில் அந்த வசனங்கள் வரும் பொழுது ஞாபம் வந்தன.

கன்னடத்திலும், ஒரு கதையில், இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வாழும் அந்த கால கூட்டு குடும்பத்தில் வாழும் ஒரு கணவன் மனைவி இடைய நடக்கும் புணர்வை கூட இதே மாதிரியான எழுத்துநடையில் ஆசிரியர் சொல்லிருப்பார்.

கதை என்றோன்னுமில்லை. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நாயகன் பெயரோ, நாயகி பெயரோ சொல்ல படுவதில்லை. படம் முழுக்க நாயகி கதை சொல்லுவதாய் வருகிறது. கப்பில் அவளை அவன் சந்திக்கிறான். மோகம் கொள்கிறான். அவளும் அதை ஏற்றுக்கொள்கிறாள். புணர்கிறார்கள். அவளது கஷ்டப்படும் குடும்பத்துக்கு அவன் உதவி செய்கிறான். பிறகு சில பிரச்சனைகள். சண்டை வருகிறது. அவள் கன்னித்தன்மை இல்லாததால் கல்யாணம் செய்ய மறுக்கிறான். சண்டை வருகிறது. அவனுக்கு வேறொரு இடத்தில திருமணம் நிச்சயம் ஆகுகிறது. அவள் பாரிஸ் கிளம்ப தயாராகிறாள். பிறகு என்னானது ????

மோசமாக எடுக்க பட்ட படமிதுவாக தான் இருக்கும். எந்த கதாபாத்திரத்திலும் அழுத்தமில்லை. இருந்தும் படம் பார்க்க நமக்கு கிடைக்கும் ஒரே காரணம் வசனங்களும், சிற்பல காட்சிகளும் தான்.

நாவலை எழுதியவர் Marguerite Duras.
இந்த நாவல் முழுக்க அவரது சிறு வயது நினைவுகள் தானென்று ஒரு பேச்சும் இருக்கிறது. படத்தின் கடைசி காட்சிகளும் அதை உணர்த்துவது போல் தான் இருக்கிறது. நாவலாசிரியர் தனது கடைசி காலத்தில் எழுதிய நாவலிது.

நாணயத்தின் இரண்டு பக்கம் போல : இந்த படத்தை கொண்டாடுவோர் ஒரு கோஷ்டியாகவும், வெறுப்பவர்கள் ஒரு கோஷ்டியாகவும் பிரிந்து இருக்கிறார்கள். நானிந்த படத்தை வெறுப்பவர்களின் பக்கம் இருக்கிறேன். படத்தை பாருங்கள். நான் பார்த்த பிறகு தான் இந்த கோஷ்டியில் சேர்ந்தேன்.

நாவலை படித்த ஒருவரிடம் கேட்டு பார்த்தேன். 1929 இல் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை பற்றியும் , ஒரு பெண்ணின் உணர்வுகளை பற்றியும் அழகாக சொல்லிருப்பதாய் சொன்னார். நான் நாவலை இன்னும் படிக்கவில்லை, படத்தை மட்டும் தான் பார்த்தேன்.
படத்தை
"சின்ன பசு" என்கிற பெயரில் தமிழில் டப் செய்து, நகரங்களுக்கு வெளியே உள்ள திரையரங்குகளில் காலை காட்சியாக
நமது ஆட்கள் போட்டாலும் போடுவார்கள்.

சில வசனங்களுக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் (அதுவும் வெட்டியாக இருந்தால் மட்டுமே)

#டிஸ்கி - ஒரு வேளை நீங்க நாவலை முதலில் படித்து விட்டால், தயவு செய்து படத்தை மட்டும் பார்க்காதீங்க.
#டிஸ்கி - புணர்வு காட்சிகள் அளவுக்கு அதிகமாகவே படதிலிருக்கிறது.
Related Posts with Thumbnails