Pages

Tuesday, December 20, 2022

இன்றைய சினிமா


ஒரு காலத்துல  நியூஸ்பேப்பர் ல இன்னைக்கு டிவில என்னென்ன படம் போடுறாங்கன்னு ஆர்வமா பார்த்துட்டு இருந்தேன்...

அது வெட்டி ஆபீசரா இருந்த காலம் வரைக்கும் தொடர்ந்தது...

அப்ப தான் இந்தியா ல பிராட்பேண்ட் இண்டர்நெட் எல்லாம் புதுசா வர ஆரம்பிச்சது....

அப்பறமா டிவி சேனலேயே காய்கறி விக்குற மாதிரி கூவி கூவி சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பம் தான் இன்றைய சினிமா பகுதிய பாக்குறத நிறுத்தினேன்.

அப்பறமா யூட்யூப் ல புது படம் எல்லாம் வந்த கையோட சுட சுட வர ஆரம்பிச்சது. பழைய படமும் அதே மாதிரி வர ஆரம்பிச்சது. ஒரு நல்ல நாள் ல சட்டம் கொண்டு வந்து அப்படி யூட்யூப் ல படத்த கள்ள தனமா வெளியீடுறத தடை பண்ணிட்டாங்க.

அப்புறமா OTT, சேனல்ன்னு வளர்ந்துருச்சு. படம் பாக்கணுமுன்ன எதாவது சேனல வைச்சா போதுமுன்னு ஆகிடுச்சு.

இந்த சேனல் ல இந்த சினிமா போடுறாங்கன்னு ஆர்வமா பாத்து, அதுக்காக காத்திருந்து படம் பாத்த காலத்துல சந்தோஷம், இப்பம் எந்த படத்த எப்ப வேணுமுன்னாலுன் பாக்கலாமுன்னு வசதி இருக்கு... ஆனா அந்த காத்திருப்பு சந்தோஷம் இல்ல.

Sunday, August 14, 2022

பொன்னியின் செல்வனும் நானும் 2

மேற்கொண்டு போகும் முன் முக்கிய அறிவிப்பு - எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் பராக் பராக் - வந்தியதேவன் பாதையில் ஒரு அனுபவ பயணம் என்ற தொடரை கல்கி ஆன்லைன் என்னும் கல்கி இதழின் யூடியூப் ஒளியலை வரிசையில் ( https://youtu.be/bUmXhOy3Cfs ) தொகுத்து வழங்க இருக்கிறார். தவற விட கூடாத நிகழ்ச்சி இது. 

- - - 
முதன் முதலில் பொன்னியின் செல்வனை படிக்கையில் ஒரு மாயாஜால உலகத்தில் பயணித்தது போலிருந்ததும். முதல் சில பக்கங்களில் கதையோடு ஒன்ற ஆரம்பிக்கும் வரையில் கொஞ்சம் என்னடா இது என்பது போல் தான் இருந்தது. அதன் பிறவு கல்கியில் எழுத்து நடையோட்டம் கூடவே பத்மவாசனது ஓவியங்கள் எல்லாம் சேர்ந்து கல்கி உருவாக்கிய அந்த மாயாஜால உலகத்திலென்னை தள்ளி விட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாயாஜால உலகத்தை படைக்க எம்மாதிரியான அனுபவங்கள் கல்கி அவர்களுக்கு உத்வேகமாக அமைத்திருக்கும் என்பதை அறிய சில புத்தகங்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

அவை

- தெய்வத்தமிழ் ஈழத்திலே : கல்கி
- நம் தந்தையர் செய்த விந்தைகள் : கல்கி
- பொன்னியின் புதல்வர் - சுந்தா

பொன்னியின் செல்வன் நாவலை போலவே கல்கி எழுதிய மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு அலை ஓசை. கல்கி தனது சுதந்திர போராட்டங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த நாவலை எழுதிருப்பார். 1934 முதல் 1948 வரையிலான இந்தியவை அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பார். 

சிறு போராட்ட குழுக்கள், அவர்களது ரகசிய சந்திப்புகள், இவர்களை கண்காணிக்கும் சி.ஐ.டி.கள் மற்றும் அந்தகால அரசியல்வாதிகள் & பொதுமக்கள் என கலந்துகட்டி  எழுதிருப்பார். மிகுந்த பொறுமையுடன் வாசித்தால் தான் இப்படைப்பில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டடையலாம். கல்கிக்கு சாகித்திய அகாதமி விருதை வாங்கி தந்த படைப்பு இது.

பொன்னியின் செல்வனை மட்டுமே வாசித்த நபர்களுக்கு அலை ஓசை மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம், ஏனென்றால் இரண்டிலும் வெவ்வேறு எழுத்துநடைகளை பயன்படுத்திருப்பார் கல்கி. 

1930களில் ஆனந்த விகடனில் தனது கட்டுரைகளின் மூலமும் கதைகளின் மூலமும் புகழ்பெற்று இருந்த கல்கி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வாசன் சம்மதம் கொடுக்காத நிலையில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. 

அப்படி கல்கி ஆனந்த விகடனில் இருந்து விலகியதும் ஒரு வகையில் நன்மையே நிகழ்ந்தது. கல்கி விட்டு சென்ற இடத்தை தேவன் கையில் எடுத்து வழி நடத்தி சென்றார்.

ஏற்கனவே கல்கி தனக்கான ஒரு அடையாளத்தை எழுத்துலகில் பெற்றிருந்தார். போராட்டத்தில் சிறை சென்றுவிட்டு வந்த கல்கிக்காக அவரது நண்பர் சதாசிவம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடிவெடுத்தார். 

அப்பொழுது கல்கி அவர்களையும்  பங்குதாரராக சேர்த்து கொண்டார். ஆனந்த விகடன் அப்பொழுதே வார இதழ்களின் சந்தையில் புகழ்பெற தொடங்கி இருந்தது. 

சதாசிவம் மற்றும் கல்கி இருவருக்கும் ஆனந்த விகடன் மற்றும் பல பிரபல இதழ்களில் மத்தியில் ஒரு புது இதழை ஆரம்பித்து மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே பெரிய சவால்.

அத்தகைய சவாலை எப்படி எதிர்கொள்வது யோசித்து சதாசிவம் ஒரு முடிவை எடுத்தார். புது பத்திரிக்கைக்கான ஒரு பெயரை தேர்ந்தெடுத்தார். அந்த பெயரே போதும் மக்களின் கவனத்தை பெற என நம்பினார்.

அந்த பெயர் "கல்கி". தமிழ் பத்திரிக்கை உலகில் ஒரு எழுத்தாளரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது அதுவே முதல் முறை.

இன்னொன்றயும் கவனிக்க வேண்டும் அப்பொழுது கல்கி எத்தகைய புகழை பெற்று இருந்தால் சதாசிவம் அவர்கள் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பார்.

பத்திரிக்கை ஆரம்பித்தாகி விட்டது, மக்களின் கவனத்தை பெற்றாகி விட்டது, கல்கி இதழுக்கான வாசக பரப்பை சந்தாதாரர்களை பெற என்ன வேண்டும் ?

எப்படி எல்லாம் எழுதினால் மக்களது கவனத்தை பெற்ற முடியும் என யோசித்து கல்கி எழுத ஆரம்பித்தது தான் " பார்த்திபன் கனவு' தொடர்கதை.

பெரும்பான்மையான மக்கள் சிவகாமியின் சபதம் கதை தான் முதலில் எழுத பட்டு இருக்கும் என்று ஆனால் உண்மையில் அது  பார்த்திபன் கனவு வந்து முடிந்த பிறகே அந்ததொடர் ஆரம்பிக்க பட்டது.

பார்த்திபன் கனவு வந்து கொண்டி இருந்த நேரத்தில் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டு இருந்தது.

அதனை சமாளிக்க போட்டியில் நிலைத்திருக்க அப்பொழுது ஆனந்த விகடனில் தலைமை பொறுப்பில் இருந்த தேவன் ஒரு ஜனரஞ்சக நகைச்சுவை தொடரை எழுத ஆரம்பித்தார். இன்றளவும் அந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. 

அந்த தொடரின் பெயர் ..... "துப்பறியும் சாம்பு".

தொடரும் ...

#பொன்னியின்செல்வன்
#PonniyinSelvan 
#பொன்னியின்செல்வனும்நானும்

Sunday, July 31, 2022

வாடகை மகிழுந்து - அநியாய கட்டணம்


இன்றைய தேதியில் வாடகைக்கு வாகனங்களை அமர்த்துவது என்பது பலரது தினசரி வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சிலரது அன்றாட வேலையே இதனை நம்பியே தான் இருக்கிறது.

கொஞ்ச நாட்களாக எரிபொருள் விலை உயர்வினால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் பலரும் பேருந்து, இரயில்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதுவுமே அதிக சேவைகளை கொண்டதாக இல்லை.

இது தான் வேளையென நாங்கள் இருக்கிறோம் போக்குவரத்து நெரிசல் பற்றியோ எரிபொருள் விலை பற்றியோ கவலை படவேண்டாம், எங்களது வாடகை மகிழுந்து சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று விளம்பர படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட வேளையில் அவர்கள் நிறுவனத்தின் வாடகை கட்டணம் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று புரியாத ஒன்று. ஏனென்றால் நேரத்திற்கு தகுந்தவாறு கட்டணம் மாறி கொண்டே இருக்கும். போகும் தூரம் ஒன்றே என்றாலும்.

இதில் வேறு கூடுதலாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தான் ஓட்டுனர்கள் வருவார்கள். இல்லாவிட்டால் ஏதோ இலவசமாக வர சொன்னது போல் பேசுவார்கள்.

சரி ஒரு மாதிரியான முயற்சி பண்ணி பார்ப்போம் என....

போகிற தூரம் சார்ந்து தான் OLA, UBERல் எல்லாம் கட்டணம் நிர்ணயிக்க படும் என்று சொல்ல படுகிறது.

ஆனால் கிளம்பும் இடமும் போய் சேர்கிற இடமும் ஒரே இடமாக வைத்து பார்த்தேன்.

நியாயமாக பார்த்தால் கட்டணம் எதுவும் வந்திருக்க கூடாது. ஆனால் வந்திருக்கிறது. 

புறப்படும் இடம் - மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன் வாசல்
சேருமிடம் -மைலாப்பூர் கபாலீஸ்வரர் முன் வாசல்

இது இப்படியாக இருக்க...

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போக எதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க படுகிறது தெரியவில்லை. 

இன்னொன்றும் புரிகிறது இதுவரையில் அதிகமாக தான் வாடகை கட்டணத்தை தான் இந்த வாடகை மகிழுந்து நிறுவனத்தார் வசூலித்துள்ளனர்.

இவர்களுக்கென கட்டண அட்டவணை என்று எதுவும் இல்லை. 

ஏன் இல்லை என்பதும் தெரியவில்லை.

#olataxi 
#ubertaxi

Sunday, July 24, 2022

டிபி கூப்பர் - 1


D.P.Cooper. 

இதுவரையில் தீர்வு காண முடியாத பல வழக்குகள் உலகம் முழுக்க இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றில் எல்லாம் இது இப்படியாக நடந்திருக்கும் என ஊகிக்க முடியும்.

ஆனால் ஒரு வழக்கில் யார் குற்றவாளி, அவர் எப்படி தப்பித்தார் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது என்றால் அது டிபி கூப்பர் விமான கடத்தல் வழக்கு தான். அந்த விமான கடத்தல் நடந்து 50 வருடங்களாகி விட்டது, இன்னும் அந்த வழக்கிற்கு டிபி கூப்பருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. வழக்கை பற்றி பல்வேறு ஆவண படங்கள், மின்னூல்கள், கலந்துரையாடல்கள் வந்துவிட்டது.

இந்த வழக்கை பற்றி முன்பே கேள்வி பட்டு இருந்தாலும், அது இத்தனை பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கும் என தெரியவில்லை நெட்ஃபிலிக்ஸில் D.B. Cooper : Where Are You ? என்னும் தொடரை பார்க்கும் வரையில்.

இந்த வழக்கை பற்றி பல திரைப்படங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள், சமீபத்தில் லோகி  தொடரில் நான் தான் டிபி கூப்பர் என லோகி சொல்வது போல் இருக்கும். 

கொஞ்சம் பெரிய விமான கடத்தல் நிகழ்வை சுருக்கமாக - ஒரு விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண் இடம் ஒரு துண்டு சீட்டு கொடுகிறார், படித்த பயத்தில் விமானியிடம் விஷயத்தை சொல்கிறார். 

மேலும் மிரட்டுவதற்காக பெட்டியில் குண்டு வைத்து இருப்பதை காட்டுகிறார்.

பேச்சு வார்த்தை - கோரிக்கை - நான்கு பாராசூட் - இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்.

கை மாறியது.

உத்தரவு - குறைந்த உயரத்தில் விமானத்தை ஓட்ட.

டிபி கூப்பருக்கு தெரியாமல் - பின் தொடர்தல்.

விமானத்தின் பின் தளத்தில் இருக்கும் வழியின் மூலம் படிகளில் இறங்கி மழையும் குளிருமாய் இருந்த அந்த இரவில் 10,000 அடி உயரத்தில் இருந்து குத்தித்து உலகத்தின் பார்வையில் இருந்து காணாமல் போகிறார் டி.பி.கூப்பர்.

விரிவாக படிக்க ( https://www.thedbcooperforum.com/ , https://en.m.wikipedia.org/wiki/D._B._Cooper , 
https://www.britannica.com/biography/D-B-Cooper ,
null 
https://www.vikatan.com/news/international/66245-fbi-is-giving-up-solving-mystery-of-db-cooper )

அமெரிக்க தனியார் துப்பறிவாளர்கள் இவர் தான் டிபி கூப்பர், இல்லை அவர் தான் டிபி கூப்பர் என பலரை கை காட்டி கொண்டு  இருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது உண்மையென்று ஆகிவிட்டால் அதிலிருந்து கிடைக்க கூடிய வணிக ரீதியிலான வருவாய் முக்கிய காரணம். அமெரிக்காவில் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதே விஷயம் இந்தியாவில் நடந்திருந்தால் அதே வணிக வாய்ப்பு இருக்குமென தெரியவில்லை. 

உங்களுக்கு வலையொளி (Podcast) கேட்கும் பழக்கம் இருந்தால் இந்த வழக்கை பற்றி அமெரிக்கர்கள் ஆர்வமாக பேசுவதை கேட்லாம்.

இந்த வழக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் தேடுதலில் ஒருவர் குற்றவாளி என சொல்ல ஆயிரம் ஆதாரங்கள் கிடைத்தால், அவர் டிபி கூப்பர் இல்லையென சொல்ல இரண்டாயிரம் ஆதாரங்கள் கிடைக்கும்.

உண்மையில் டிபி கூப்பர் என்பது ஒரு நபரா அல்லது உள்கூட்டத்தின் ஒரு ஏமாற்று வேலையா ?

ஏன் கனடாவில் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை ? ஏன் கனடாவில் விசாரிக்க வேண்டும் ?

1980ல் கொலம்பியா ஆற்றங்கரையில் டாலர் நோட்டுகளின் பின்னணி என்னவாக இருக்கும் ?

பண பரிமாற்றத்தின் / பரிவர்த்தனையின் மூலம் ஏன் கண்டுபிடிக்க முயலவில்லை ?

அரசியல் நோக்கம் கொண்டதா இந்த டிபி கூப்பர் விமான கடத்தல் ? அல்லது அந்த கடத்தலே ஒரு நாடகமா ?

தொடரும்....

Sunday, July 10, 2022

பொன்னியின் செல்வனும் நானும் - 1


பொன்னியின் செல்வன் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒன்றை சொல்லி ஆக வேண்டும், வார்த்தைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கதையை அப்படியே திரையில் கொண்டு வர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளின் மூலம் உருவாக்க படும் கற்பனைகளுக்கு எல்லை என்பது இல்லை. ஆனால் ஒரு படமாக எடுக்கப்பட்டு விட்டால் அந்த கற்பனைக்கு ஒரு உருவம் வந்துவிடும். எல்லை உருவாகி விடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதும்  "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது..." என்று பேசியபடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவிற்கு வரும். உண்மையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படி தான் பேசி இருப்பாரா என தெரியாது. ஆனால் சில பல சரித்திர குறிப்புகளை படித்தால் முற்றிலும் வேறுபட்ட உருவமே நமக்கு கிடைக்கும்.

பலருக்கு பொன்னியின் செல்வன் வழியாக இராஜராஜ சோழனும் அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் தெரிந்திருக்கும். சிலருக்கு கோயில் வழியாக இராஜராஜனையும் பின்னர் நாவலையும் அறிந்திருப்பார்கள்.

ஆனால் .....

2001ல் அழகம் பெருமாள் இயக்கத்தில் டும் டும் டும் என்ற திரைப்படம் வந்தது. அதில் தேசிங்கு ராஜா என்னும் பாடல் தஞ்சை பெருவுடையார் கோயிலில் எடுக்க பட்டு இருந்தது. அக்கோயில் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்து 50 நிமிட பயணத்தில் இருக்கிறதென்று தெரிந்த பின், ஒரு நாளில் ஜோதிகா நடனம் ஆடிய கோயிலை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் சொந்தகார அண்ணனுடன் சென்று பார்த்தேன். 

இவ்வளவு பெரிய கோயிலை யார் கட்டினாங்க என கேட்ட பொழுது இராஜராஜ சோழன் என சொன்னார்.

எங்கள் பகுதியில் நூலகத்தில் இருந்து தினந்தோறும் வார பத்திரிக்கைகள் வரும். அதில் கல்கியும் அடங்கும். அதில் எதோ ஒரு ராஜா காலத்து கதை ஒன்று வரும் (அது பொன்னியின் செல்வன் என்று அப்பொழுது தெரியாது), அதனை அம்மா ஆர்வமுடன் வாசிப்பார். என் பெரியம்மாவும் அந்த கதையை பற்றி மிகவும் சிலாகித்து சொல்வார். 

அதில் வரும் படங்கள் பார்ப்பத்தோடு மட்டும் நிறுத்தி கொள்வேன், அது ரொம்ப தமிழாக இருக்கவும் படிப்பதற்கெல்லாம் முயற்சி செய்ததில்லை. 

இப்படி பொன்னியின் செல்வன் பலர் பாராட்டி சொல்லியும் வாசிக்க சொல்லியும் .... "நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்குறது" என்று அந்த வயதிற்குள்ள மனப்பான்மையுடன் இருந்ததினால் வாசிக்கவில்லை.

நண்பர்கள், சினிமா, பாட்டு என வாழ்க்கை சுழன்று கொண்டே இருந்தது.

மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு படித்து / முயன்று  கொண்டு இருந்த ஒரு வருடத்தில் முக்கால்வாசி நேரமும் வீட்டிலேயே தான் இருப்பேன். அப்படியான நேரத்தில் பெங்களூருவில் இருந்த பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன். பெரியம்மாவிடம் வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது என சொல்லவும் ... சும்மா இருக்குற நேரத்துல் இதைய படி என பத்மவாசனின் ஓவியங்கள் கொண்டு   தொடராக வந்த பத்திரிக்கை பக்கங்களை பிணைத்த பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்கள் (ஆறு புத்தகங்கள்) கொடுத்தார்.

வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு முதல் சில பக்கங்களை வாசித்து முடிக்க 10 நாட்களானது.

அதன் பிறகு கதையோடு ஒன்றி பைத்தியம் பிடித்தது போல் வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு வாரத்தில் மொத்த நாவலையும் படித்து முடித்தேன். 

கல்கியின் வார்த்தைகள் ஏற்படுத்திய மாயாஜாலம் ஒரு பக்கம் என்றால் அதனை வேறொரு தளத்தில் கொண்டு போனது பத்மவாசனின் ஓவியங்கள். 

துப்பறியும் கதைகள், காதல் கதைகள் ஆகியவற்றை வாசித்து கொண்டு இருந்தவனுக்கு பொன்னியின் செல்வன் வாசித்தது எப்படி இருந்ததென்றால் தெரு பசங்களுடன் பொழுதுபோக்கிற்காக குடியிருப்பு தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவனை 20-20 கிரிக்கெட் போட்டியில் விளையாட விட்டது போல் இருந்தது.

பிறவு பெரியம்மாவிடம் பத்மவாசன் ஓவியங்கள் கொண்ட தொகுப்பை கொடுத்துவிட்டு மணியம் ஓவியங்கள் இருந்த தொகுப்பை வாங்கி மீண்டும் மணியம் ஓவியங்கள் வழியாக வாசித்தேன்.

அதகளத்தின் உச்சம் அந்த அனுபவம்.

பின்னர் வேதா ஓவியங்களோடு கல்கியில் தொடராக பொன்னியின் செல்வன் வர ஆரம்பித்தது. முதல் இரண்டு வாரங்கள் தான் வாசித்தேன், ஆனால் வேதாவின் ஓவியங்கள் மூலம் கதையோடு ஒன்ற முடியவில்லை.

பின்னர் பாம்பே கண்ணன் மற்றும் குழுவினர் கொண்டு வந்த பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் / ஒலி நாடகம் வடிவத்தை கிட்டத்தட்ட 64 மணி நேரம் செலவளித்து கேட்டு முடித்தேன். அதுவுமே மறக்க முடியாத மற்றொரு அனுபவம்.

அதே போல இன்னொரு புதிய அனுபவமாக இருக்க போகிறது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம்.

தொடரும்....

Monday, June 6, 2022

கல்கி : சிவகாமியின் சபதம் : பார்த்திபன் கனவு : விக்ரம் : கைதி -மல்டிவர்ஸ்

எதோ கைதி விக்ரம் படத்துல லோகேஷ் கனகராஜ் தான் முதல் முறையே மல்டிவர்ஸ் வைச்சு இருக்காருன்னு கம்பு சுத்திட்டு இருக்காங்க.

ஆனா இதுக்கு பத்து வருஷம் முன்னாடியே தலைவன் வெங்கட் பிரபு கோவா படத்துல அதைய பயன் படுத்தி இருப்பாரு.

கோவா படத்துல கிளைமாக்ஸ் ல சுபாஷினிய மன்மதன் பட மதன் சந்திக்குற வைச்சுருப்பாரு.

அதெல்லாம் யாருக்கும் ஞாபகம் வராதே.

அவ்வளவு ஏன் பழைய சத்யராஜ் படங்கள் ல பாருங்க ஒரே கதாபாத்திரம் பல படத்துல வரும்.

அவ்வளவு ஏன் எல்லாத்துக்கும் முன்னாடி கல்கி எழுதின பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் இரண்டு நாவலும் இந்த மல்டிவர்ஸ் ல அமைஞ்சது தான்.

பார்த்திபன் கனவு சிவகாமியின் சபதம் கதைக்கான reference இரண்டு இடத்துல வரும். இரண்டு தனி தனி நாவலா படிச்சாலும் புரியும்.

வெவ்வேறு கதைன்னாலும் சில கதாபாத்திரங்கள் இரண்டு நாவலையும் வருவாங்க.

ஆனா இதைய வாசிச்ச நிறைய பேர் சிவகாமியின் சபதம் நாவல் தொடர் தான் முதல் ல வந்ததுன்னும் பார்த்திபன் கனவு நாவல் தொடர் பிறவு வந்ததுன்னும் நினைப்பாங்க.

ஆனா உண்மை என்னன பார்த்திபன் கனவு தொடர் தான் முதல் ல 1942ம் வருஷம் வந்துச்சு. அந்த தொடர் முடிஞ்ச பிறவு தான் 1944ம் வருஷத்துல தான் சிவகாமியின் சபதம் தொடர் ஆரம்பிச்சுச்சு. 

இன்னைக்கு லோகேஷ் கனகராஜ் பண்ணினதுக்கு எல்லாம் கல்கி அப்பவே பிள்ளையார் சுழி போட்டுருக்காரு.

Sunday, May 29, 2022

தாம்பரம் ரயில் நிலையம் - 4ஆம் நடைமேடை


மோடிஜி சென்னை வந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தாம்பாரம் ரயில் நிலையத்திலும் அதற்கான மேடை அமைக்கபட்டது.

தவறில்லை.

மேடை அமைக்க 3 மற்றும் 4ஆம் நடைமேடையில் இருந்த பயணிகள் அமர நிறுவ பட்டு இருந்த நாற்காலிகளை அகற்றி இருந்தனர்.

அதுவும் தவறில்லை. பெரும் நிகழ்வு நடைபெறும் சமயம் நடக்க கூடியவை தான்.

ஆனால் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களாகியும் அங்கு இருந்த நாற்காலிகள் மீண்டும் அதே இடத்தில் நிறுவ படவில்லையே ???

ஏன் ???

இன்று வாரயிறுதி என்பதால் கூட்டம் இல்லை, இதே வார நாட்கள் என்றால் செங்கல்பட்டு வரை போகும் ரயிலுக்காக ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கும்.

தாம்பாரம் வரையிலான ரயில் சேவை தான் அதிகம்.

ஆனால் குறைந்த சேவைகள் கொண்ட செங்கல்பட்டு வரை போகும் ரயில்களை அதிகம் பயன்படுத்தும் புறநகர் பகுதிவாசிகள் நிலை தான் திண்டாட்டம்.  அவர்களின் நேரத்தின் பெரும் பகுதி ரயில் காத்திருப்பில் கழிந்து விடுகிறது.

Tuesday, May 17, 2022

முதல்வர் ஸ்டாலின் II தூய்மை பணியாளர்கள் II நன்மை


வழக்கமாய் இத்தனை பெரிய குப்பை தொட்டியில் இருந்து குப்பைகளை எடுக்க தூய்மை பணியாளர்கள் அந்த குப்பைத்தொட்டியில் இறங்கி அதில் நின்று கொண்டு தான் குப்பைகளை எடுப்பார்கள். 

சுத்தம் செய்ய படாமல் இருக்கும் அந்த தொட்டியில் அவர்கள் நின்று கொண்டு வேலை செய்வதை பார்த்தால் பாவமாக இருக்கும்.

அப்படி அசுத்தமாக இருக்கும் தொட்டியில் நான் இறங்க மாட்டேன், நான் இறங்க மாட்டேன் என்றால் அவர்களும் அப்படி இறங்க கூடாது. சரி கஷ்ட ஜீவனம் என சமாதானத்துடன் கடந்து சென்று விடுவேன்.

கடந்த காலங்களில் சரியாக அசுத்தமாக இருக்கும் பல தொட்டிகள் உடைந்து குப்பைகள் வெளியில் விழுந்து சிதறி கிடப்பதையும் அதில் வெறும் கைகளுடன் பணியாளர்கள் வேலை சரி செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை கேட்டு கூட இருக்கிறேன் ...."அதை கழுவ கூட எங்க காசுல தான் பவுடர் வாங்கணும் ..." என பதில் கிடைத்தது.

ஏன் இப்படிப்பட்ட நிலையில் வேலை செய்கிறார்கள் என யோசித்ததும் உண்டு.

இன்று கோடம்பாக்கத்தில் ஒருவரை பார்க்க சென்று இருந்தது பொழுது ஒரு நிகழ்வை கண்டேன்.

ஒரு பணியாளர் குப்பைதொட்டியை சலவைத்தூள் (Soap Powder) கொண்டு சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

வெறும் கைகளுடனா வேலை செய்கிறார் என கேள்வி பார்த்த பொழுது, தேவையான கையுறைகளை அணிந்திருந்தார்.

குப்பைத்தொட்டியினூள்ளே கழுவ சலவைத்தூளுடன் கலந்த நீரை அடிக்க இயந்திர நீர் துப்பாக்கி உடன் இணைந்த நீர் தொட்டியை பக்கத்தில் ஒரு வண்டியில் வைத்திருந்தனர். பணியாளர் குப்பைத்தொட்டியை கழுவி கொண்டு இருந்தார்.

அதே தெருவில் இருந்த மற்ற பணியாளர்களின் கையிலும் தரமான கையுறைகள். எல்லாம் அரசு ஏற்படாம்.

இப்படி அடிமட்ட மக்களுக்காக யோசித்து செயல்படும் முதல்வர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார்.

சந்தோஷமாக சொல்வேன் Stalin is more Dangerous Than Karunanidhi.

#DMk 
#StalinIsMoreDangerous 
#TN 
#Stalin

Sunday, May 15, 2022

கலவை - ஜெயில் இயக்குனர் வசந்தபாலன்

வசந்தபாலன் இயக்கத்தில் வந்த ஜெயில் படத்தை பார்த்தேன், ஏதோ கண்ணகி நகரில் இருப்போர் எல்லோரும் திருட்டு தொழிலில்தான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது போல் காட்டியிருக்கிறார்.

ஆனால் உண்மையிலேயே படத்தில் காட்டி இருப்பது போல் மக்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் ஒரு 2% தான்.

நிஜத்தில் கிடைத்த வேலையை, தொழிலை செய்து கொண்டு தங்களது அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுத்திட வேண்டும் என்று உழைப்பவர்களை கொண்ட பகுதி தான் கண்ணகி நகர்.

முன்பு இரண்டு படங்களில் வசந்த பாலனுக்கு இருந்த பிரச்சினை தான் இந்த படத்திலும் அவருக்கு இருக்கிறது. படத்தை ஆரம்பிக்க தெரிந்தவருக்கு அதை எப்படி முடிப்பது என்று புரியாமல் குழப்பிக் கொண்டு முடித்திருக்கிறார்.

- - -

சுஜாதாவின் சிவந்த கைகள் நாவலை படித்தேன். தொடங்கியதும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை. பாதாம் அல்வாவினால் எழுத்தபட்டது ஒரு எழுது நடை. 

ஏற்கனவே இரண்டு ஒரு முறை வாசித்திருக்கிறேன் என்ற ஞாபகமே வரவில்லை. 

வாசித்து கொண்டு இருக்கும் பொழுதே இந்த நாவலை திரைப்படமாக எழுத்தால் எப்படி இருக்கும் என நினைத்து கொண்டே இருந்தேன். 

ஆனால் 1980களில் நடக்கும் கதையை இக்காலத்துக்கு ஏற்றது போல மாற்ற வேண்டும். அதுவே ஒரு சவாலான ஒன்றாகும்.

- - -

இப்பொழுது முகில் எழுதிய உணவு சரித்திரம் பாகம் - 1 வாசித்து கொண்டு இருக்கிறேன். அக்காலத்தில் அல்வாக்களை மருத்துவ ரீதியாகவும் பயன் படுத்த பட்டது என அதில் படித்ததில் இருந்து ...

ஒரு வேளை அமைதிப்படை அம்மாவாசை Anesthesiologistஆக அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்திருப்பார் போல.

- - -

பாரா எழுதிய பொலிக பொலிக வாசித்த பிறவு முதன் முறையாக திருபெரும்புதூர் சென்று வந்தேன். 

நகரமயமாக்கல் நகரங்களின் பக்கத்தில் இருந்து இப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து எழுந்தது போல கொஞ்சம் சோம்பலாக புதுமைகளுக்கு வணக்கம் சொல்லி கொண்டு இருக்கிறது.
இந்திய ஆன்மீகத்தில் திருபெரும்புதூருக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. இங்கு பிறந்த இராமானுஜர் திருப்பதிக்கு போகாமல் இருந்திருந்தால் இன்னுமும் சிவனா காளியா என சண்டை நடந்து கொண்டு இருந்திருக்கும்.

ஆன்மீக பக்தியை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு பார்த்தோமானால் அழகு அழகாய் சிற்பங்கள். ஒவியர் சில்பி இதனை எல்லாம் வரைந்து வைத்திருக்காரா என ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தேன்.

பக்தி, சிற்பங்கள் இரண்டையும் தள்ளி வைத்துவிட்டால் முக்கிய குறை - முன்பு போல தையிலையில் சுட சுட அதிரசம் வைத்து விற்பது இல்லை.

திருபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் சிப்காட் வழியாக சேத்துப்பட்டு தாண்டி மலைப்பட்டுக்கு வந்தால் அமைதியான சூழலில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. மாலை நேரத்தில் அமைதியாக நேரத்தை கழிக்க ஏற்ற இடம்.

- - -

2ஜி வழக்கில் ஆ.ராசா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என சொல்லிவிட பிறகும்  BSNL நிறுவனத்தின் தேக்க நிலைக்கு ராசா, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் காரணம் என இந்த காணொளியில் ( https://youtu.be/Wlgk8XXHWuA ) சொல்லி இருக்கிறார்கள்.

இது தவிர்த்து இவர்களது Think School வலையகத்தில் பல பொருளாதார வழக்காய்வுகள் (Case Studies) பற்றி பல காணொளிகள். ஆர்வம் இருப்போர் கண்டடையலாம். 

- - -

Sunday, April 24, 2022

கலவை - 24/04/2022 - இராவணன் பத்து தலைநகரங்கள்

புதிதாக வாசிக்கிறவர்களுக்கு சொல்லி விடுகிறேன், இப்பகுதி பல துணுக்கு செய்திகள் கொண்ட பகுதி.

- - -

இராவணன்...

இந்திய புராணங்களின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள வேண்டுமென விருப்பம். அப்படி அறிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது தான் இது இப்படியாக இருக்கலாமோ என தோன்றியது. 

இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவை தவிர்த்து ராமாயணம் என்னும் கதை உலகெங்கும் மொத்தம் 12 நாடுகளில் கதையாகவும் புராணமாகவும் வழக்கத்தில் இருக்கிறது. மொத்தம் 14 நாடுகளிலும் சேர்த்து 300 வடிவங்களில் ராமாயணம் சொல்ல பட்டும் எழுத பட்டும் வருகிறது. 

அந்த 12 நாடுகள் - பர்மா, கம்போடியா, சீனாவின் திபெத்து, லாவோஸ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ, நேபால், தாய்லாந்து, மலேசியா, மங்கோலியா, வியட்நாம். 

மேல் சொன்ன நாடுகளில் இந்து சமயம் வழக்கத்தில் இருந்த மாதிரி தெரியவில்லை. 

அதே போல் இந்தியாவில் பல மொழிகளில் பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னரே எழுத பட்டு இருக்கிறது. 

10ஆம் நூற்றாண்டில் தான் இராமானுஜரின் தலைமையில் வைணவ சமயம் பெரும் எழுச்சியை கண்டது. அவர் நாடெங்கும் வலம் வந்து பலரை வைணவ சமயத்தில் இணைத்தார். 

இப்படி பல தகவல்களை அறிந்து கொள்ளும் பொழுது இராவணனுக்கு பத்து தலை இருந்து இருக்காது ; அதற்கு பதிலாக பத்து தலை நகரங்கள் கொண்டு ஆட்சி செய்து இருக்க வேண்டும். அத்தனை பெரியதாக இருந்திருக்க வேண்டும் இராவணனின் ராஜ்ஜியம்.

இராமாயணத்தில் தண்டகாரண்யம் பகுதியில் இருந்தே இராவணன் ஆளுமையில் இருந்ததாக வரும்.

கடவுள் தன்மைகளை புராணத்தில் இருந்து விலக்கி வைத்து அணுகும்போது தான் அதன் உண்மை ஒருவாறு புரிந்துகொள்ள முடியும்.

- - -

பொன்னியின் செல்வன் நாவலை முடிந்த பின் அதே கதை வரிசையில் படிக்க வேண்டிய பல நாவல்கள் இருக்கிறது. 

அதில் முக்கியமானது அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி. அதன் சிறப்பு மிகவும் மிகை படுத்த படாமல் கதை நகரும். இக்கதையில் வரும் ஜனநாதன் கச்சிராயன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இளநிலை பட்டப்படிப்பு முடித்த உடன் அப்பா எனக்கு வீரபாண்டியன் மனைவி நாவலை திருச்சி ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வைத்து வாங்கி கொடுத்தார். 

21 வருடங்களுக்கு முன்பு இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அ.கி. வேங்கட சுப்ரமணியன் "அரு. ராமநாதன் எழுத்துக்களும் எண்ணங்களும்" என்ற பெயரில் எழுதியும் தொகுத்தும் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அதனை வானதி பதிப்பகம் தான் பதிப்பித்து வெளியிட்டார்கள். இப்புத்தகத்தை தான் தற்பொழுது வாசித்து கொண்டு இருக்கிறேன்.

- - - 

பொன்னியின் செல்வன் நாவலை மிகவும் விரும்பி படித்தவர்கள் எல்லாம் சங்கதாரா நாவலை படிக்கும் பொழுது பெரும் அதிர்ச்சியடைவார்கள். 

இது இப்படி எல்லாம் இருக்காதே, உண்மைக்கு புறம்பாக எழுதி இருக்கிறார் என சிலம்பாட்டம் ஆடுவார்கள். எதோ நேரில் பார்த்தது போல் பொங்கல் வைப்பார்கள். அவர்களது பின்னூட்டங்களை / பதிவுகளை படிக்கும் பொழுது சிரிப்பாக தான் இருக்கும். 

சங்கதாரா நாவலின் முன்னுரையிலேயே போதிய விளக்கங்களை ஆசிரியர் தந்து இருப்பார். அதனை கூட புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். 

பொன்னியின் செல்வன் பிரியர்கள் அதே கதையோட்டத்தில் வேறு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் செய்ய வேண்டியது.... பொன்னியின் செல்வனை விட்டு வெளியே வருவது தான்.

- - -

வெங்கட் பிரபு இயக்கத்தில் வந்த மன்மத லீலை படத்தை பார்த்தேன். இது வரையில் அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதோ ஒரு வகையில் பிடித்து இருந்தது. 

ஆனால் இந்த படம் எந்த ரகத்திலும் கவரவில்லை. நல்ல தயிர் சாதத்திற்கு ஜிலேபி தொட்டுகிட்டு சாப்பிட்டது போல் ஒரு படம்.

- - -

இணைய பயன்பாட்டில் எனக்கு இது 25வது வருடம். சமூக தளங்களின் பயன்படுத்த ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகுகிறது.

பதிவுகள் எழுத ஆரம்பித்து 16 வருடங்கள். முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன் பின்னர் தான் தமிழில் எழுத ஆரம்பித்தேன். 

கைபேசி இணைய பயன்பாட்டில் 17 வருடங்கள். 

பல புனைபெயர்கள். 

இணையத்தில் கற்றது தான் நிறைய.

நன்றி.

- - -

Sunday, April 10, 2022

எதற்கும் துணிந்தவன் - Conditions Apply

ஞாயித்து கிழம அதுவுமா நல்ல படத்த பாக்கலாமுன்னு நெட்ஃபிலிக்ஸ் ல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடான்னு ஜெய் பீம் ல விட்டத இப்ப பிடிச்சுருலாமுன்னு எதற்கும் துணிந்தவன் படத்த தமிழ தவிர்த்து விட்டு இருந்தாங்க. 

சரி தமிழ் ல பாப்போமுன்னு சன் நெக்ஸ்ட் பக்கமா தாவினேன்.

ஒரு 13 வருஷத்துக்கு முன்னாடி வாரணம் ஆயிரம், அயன்னு தொடர்ச்சியா இரண்டு ஹிட் கொடுத்தாரு. அதைய நம்பி அதுக்கு அடுத்ததா வந்த ஆதவன் படத்துக்கு ஆவலா முதா நாள் போனேன். வழக்கமா தியேட்டருக்கு போனா உட்கார இடத்துல ஆணி இருக்கும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கலாம். ஆனா ஆதவன் படத்த பார்க்க போனப்ப சீட் ல உட்கார வைச்சு சீட்டோட சேர்த்து ஆணி அடிச்ச மாதிரி ஆகிருச்சு. கதவ திறந்து விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க, நொந்து நூடில்ஸான பிறவு விட்டாங்க. நல்ல வேளை OTT ல பாத்ததால ஓட்டி ஓட்டி தான் பார்த்தேன்.

ஜெய் பீம திரையரங்கு ல கொண்டாடமா விட்டுட்டோம், அதனால இதைய கொண்டாடிருவோமுன்னு தியேட்டரு வந்த ரசிகர்கள் வைச்சு சம்பவம் பண்ணிட்டாங்க. 

சன் டிவிகாரனே தன்னோட படம் வர போகுதுன்ன செமைய விளம்பரம் பண்ணுவான், ஆனா இந்த படத்துக்கு ரொம்ப பேசாம இருந்தப்பவே டவுட் ஆனேன்.

வாய்ஸ் ஓவர் டெக்னிக் எல்லாம் 1980கள் மைக் மோகனோட கடைசி படத்தோட காலாவதி ஆகிருச்சு. அதைய எல்லாம் இப்ப கொண்டு வந்து சுட்டுட்டு இருக்காரு இயக்கனரு. 

சமைக்க தெரியாதவன் யூ டியூப் பாத்து சமைச்ச மாதிரி படம்.

சூரி கிட்ட நீங்க இந்த படத்துல நடிக்குறீங்கன்னு சொல்லி காமெடி பண்ணிருப்பாங்கன்னு நினைக்குறேன். நம்பி ஏமாந்துட்டாரு போல. அதே மாதிரி தான் பிரியங்கா மோகன் கிட்டையும் சொல்லிருப்பாங்க போல. 

ஆக்ஷன் படமுன்ன வில்லன்னு ஒருத்தரு இருக்கணுமே ஷூட்டிங் போறப்ப இல்லாட்டி ஷூட்டிங் முடிச்ச பிறவு தான் இயக்குனருக்கு தோணிருக்கும் போல.... வில்லன் இல்லாம கூட இந்த படத்த கொண்டு போயிருக்கலாம். வினய் வைச்சு montage shots மட்டும் எடுத்துட்டு மொத்த படத்துலையும் அங்கங்க தூவி விட்டுருக்காங்க. 

கடைசி ல எதற்கும் துணிந்தவன்னு படத்துக்கு இயக்குனர் பெயர் வைக்கல படத்த தியேட்டர் ல பாக்க வந்தவங்களுக்கு வைச்ச பெயர் அதுன்னு ரொம்ப யோசிச்ச பிறவு தான் தெரிஞ்சுச்சு.

கன்னித்தீவு : தினத்தந்தி : உலக சாதனை


நான்கு படங்களுடன் கன்னித்தீவு கதை தினத்தந்தியில் வருவதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான்கு படங்கள் எப்பொழுது மூன்று படங்களானது என தெரியவில்லை.

கன்னித்தீவு கதை எங்கப்பா சிறுவயதில் படித்திருக்கிறாராம். நானும் படித்திருக்கிறேன். இந்த தொடரை தொடர்ந்து வாசிக்கிறவர்கள் எப்படி கதையை ஞாபகம் வைத்திருக்கிறார்களென தெரியவில்லை.

இன்று வந்திருப்பது 21,996 அத்தியாயம். அதாவது 20,000 நாட்களுக்கும் மேலாய் தினமும் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. 1960ல் கருப்பு வெள்ளை படங்களுடன் தொடராக ஆரம்பித்தது 2013ஆம் ஆண்டு முதல் வண்ண படங்களுடன் வர ஆரம்பித்தது.

எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்க்கும் ஆதித்தனார், 1958ஆம் வந்த எம்.ஜி.ஆர். படமான கன்னித்தீவு பட பெயரையே தொடருக்கும் வைத்து விட்டார்.ஒரு செய்தித்தாளில் புனைவு பட கதை வருவதே புதுமை, அதிலும் இத்தனை ஆண்டுகள் வருவது உலக சாதனை தான். இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தி கொண்டு இருப்பது தமிழ் செய்தித்தாள் என்பது மற்றொரு பெருமை.

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அரேபிய கதையை தழுவி தான் கன்னித்தீவு கதை.

இந்த தொடருக்கு முதலில் எழுதி ஓவியங்களை வரைந்து வருகிறவர் கணேசன் என்பவர். இடையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட பொழுது தங்கம் என்பவர் சிறிது காலம் தொடரை எழுதி இருக்கிறார்.

சரி இது பழைய தொடர் இப்பொழுதுள்ள தலைமுறையினர் யாரும் விரும்பி வாசிக்க மாட்டார்கள் என நினைத்தால் ஏமாற்றம் நினைத்தவர்களுக்கு தான். இளம் தலைமுறை சிலர் கன்னித்தீவின் முழு கதை என்ன என்று தேடி கொண்டும் விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.

கன்னித்தீவு தொடருக்கு போட்டியாக கண்ணதாசன் தனது தென்றல் திரை பத்திரிக்கையில் ஒரு தொடர் பட கதையை வெளியீட்டு வந்தார். கன்னித்தீவு அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் கண்ணதாசன் சொன்னது போல் படங்கள் போடாமல் வெவ்வேறு படங்கள் வரையபட்டால் சில குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

பிறகு கன்னித்தீவு என்ற பெயருக்கு அதிக கவர்ச்சி வந்ததினால் கன்னித்தீவு வீரன், கன்னித்தீவு மோகினி என்ற பெயரில் எல்லாம் திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்து இருக்கிறது. 

ஒரு கட்டத்தில் பலருக்கு சிறுவயதில் இந்த கன்னித்தீவு தொடர் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தது என்பது தான் உண்மை.

Sunday, March 27, 2022

காணொளி இதழ்கள் II VIDEO MAGAZINES



1980களில் தொலைகாட்சி செய்திகள் என்றால் அது அரசு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு ஒளிபரப்ப பட்ட தூர்தர்ஷனின் செய்திகள் மட்டும் தான். அதிலில் எந்த செய்தியை ஒளிபரப்பலாம், எவை எல்லாம் ஒளிபரப்ப கூடாது, எத்தனை விரிவாக செய்தியை சொல்லலாம் என்ற கட்டுபாடு எல்லாம் இருந்தது. 

1933 ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தின் படி தனியார் நிறுவன செய்தி ஒளிபரப்பு எல்லாம் இயலாத ஒன்றாக இருந்தது. 

அப்பொழுது தூர்தர்ஷனில் "The World This Week" என்னும் வாராந்திர தொடர் வந்து கொண்டு இருந்தது. இதனை தொகுத்து வழங்கியவர் பிரணாய் ராய். பின்னாட்களில் பிரணாய் ராய் மற்றும் இவரது மனைவி இருவரும் இணைந்து என்.டி.டிவி என்னும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை தழுவி தான் சன் டிவி 1990களில் "இந்த வார உலகம்" என்னும் நிகழிச்சியை ஒளிபரப்பினார்கள், பிற்பாடு இது 15 நிமிட செய்திகளாக தினமும் வந்து கொண்டு இருந்த சன் செய்திகளின் ஒரு பகுதியாக மாற்றியது.

தூர்தர்ஷனது செய்தி நிகழ்ச்சிகளில் மேம்போக்கான தன்மையே பெரிதும் இருந்தது. நுனிப்புல் செய்திகள். இவற்றில் எல்லாம் ஒரு வெற்றிடம் இருப்பதை இந்திய டுடே நிறுவன குடும்பத்தை சேர்ந்த அரூன் புரி மற்றும் அவரது சகோதரி மது புரி ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் புலனாய்வு காணொளி இதழான நியூஸ்ட்ராக் (News track) கொண்டு வந்தார்கள். இந்தப்செய்திகள் எல்லாம் 90நிமிட படமாக எடுக்க பட்டு Video Cassette வடிவில் விற்க பட்டது. 

அதுவரையில் நுனிப்புல் செய்தி தகவல்களாக இருந்த பல செய்திகள் விரிவாக மக்கள் பார்வைக்கு வைக்க பட்டது. இத்தனை தொடர்ந்து தமிழிலும் கலாநிதி மாறன் பூமாலை என்னும் காணொளி செய்தி இதழ்  தொகுப்பை கொண்டு வந்தார்.

இது அப்பொழுது VHS Wave காரணமாக வசதி படைத்தோர் பலரது  வீடுகளில் VHS player  இருந்தது, அதனால் விற்பனை மற்றும் வாடகை தான் காணொளி இதழின் மூல வருவாய். அப்பொழுது பரவலாக இருந்த கள்ள காணொளி பதிப்பு (Video Piracy) மற்றும் கள்ள ஒளிபரப்பு (Cable Piracy) காரணமாக காணொளி இதழ் முயற்சி இந்தியாவில் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. 

இப்பொழுது நியூஸ்ட்ராக் செய்தி தளமாக (https://english.newstrack.com) இணையத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. 

கலாநிதி மாறன் அவர்கள் தொடங்கிய பூமாலை காணொளி இதழும் தோல்வியே அடைந்தது. அவர் சன் டிவி நிறுவனத்தை ஆரம்பிக்க அது கூட காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் இந்த காணொளி இதழ் முயற்சி பரவலான வெற்றியை அடைந்ததென்றே சொல்லலாம். வாடிக்கையாளர் பயன்படுத்த கூடிய மின்னணு பொருட்கள் பற்றி 1976ஆம் ஆண்டு தொடங்கி 1999ஆம் வரைக்கும் Video என்னும் பெயரில் இதழ்களாக வெளிவந்தது. 

தற்காலத்தில் 24 மணி நேரமும் செய்திகளும் நினைத்த நேரத்தில் தகவல்களும் கிடைக்கும் சூழலில் பலருக்கு புரிய போவது இல்லை இந்த காணொளி இதழ்களின் முக்கியத்துவத்தை. 

முக்கிய குறிப்பு - பூமாலை இதழ் வடிவை பிற்காலத்தில் சன் டிவி செய்திகளின் ஒரு அங்கமாக வந்த சிறப்பு பார்வை பகுதிக்காக பயன்படுத்தி கொள்ள பட்டது.

பிற சேர்க்கை - 1991ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வர தாராளமயமாக்கல் கொள்கையால் இந்திய தந்தி சட்டத்தில் திருத்த மசோதா கொண்டு வர பட்டது. இதனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சமாக இருந்த காணொளி இதழுக்கான சந்தையும் பலியானது.

Thursday, March 17, 2022

கிளப் ஹவுஸ் இம்சைஸ்

இன்னைக்கு வீட்டுக்கு போக ரயிலுக்கு காத்துட்டு இருந்த நேரத்துல, கிளப் ஹவுஸ் ஞாபகம் வந்துச்சு. அன்-இன்ஸ்டால் பண்ணி ரொம்ப நாளாகிருச்சே, இப்பம் என்ன என்ன பேசிக்குறாங்கன்னு பார்ப்போமேன்னு இன்ஸ்டால் பண்ணி உள்ள போனேன்.

போன உடனே எதோ குரூப் உள்ள பராக்கு பாக்க ஆரம்பிச்சேன்.... ஈவெரா பத்தி ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு. ஆர்வமா கேட்டுகிட்டு இருக்க சொல்ல திடீர்ன்னு ஈவெராவ ஈவிரான்னு சொல்ல ஆரம்பிச்சாரு. சரி இங்கிலீஷ் உச்சரிப்புன்னு விட்டுட்டேன்.

பேசினவர் கூடவே இன்னொரு புரட்சி பேசிட்டு இருந்தாரு. ஒரு இருபது நிமிஷம் போச்சு அப்ப அந்த புரட்சி "ஆமா.... ஈவெரான்ன யாரு.."னு கேட்டாரு.

"ஈவெரான்ன பெரியார்ன்னு தான்"

"அப்ப பெரியார்ங்குறது அவர் பெயர் இல்லையா ???"

டமால்ன்னு ஒரு சத்தம். என் மனசு ல தான். 

அப்படியே தஞ்சாவூர் வழியா கோயம்புத்தூர் வந்து பிரபல திமுக டாக்டர் பத்தி பேச ஆரம்பிச்சாங்க....யாருன்னு டக்கு தெரிஞ்சுருச்சு.

"அவரும் இந்த சாதி தான் .... அவரு மூக்க பார்த்தாலே தெரியலையா...".

ஹெட் செட்ட கழுட்டிட்டு கொஞ்சம் தண்ணி குடிச்சேன்.

" அந்த காலத்துல நாகர்கள்ன்னு ஒரு குரூப் இருந்துச்சு அவங்க இருந்தது நாகலாந்து ல. தமிழ் நாட்டுக்கு அவங்க வந்து செட்டில் ஆனாங்க....அதனால அவங்க இருந்த ஏரியா எல்லாம் நாகர்கோயில் , நாகப்பட்டிணமுன்னு பெயர் வந்துச்சு"னு முடிச்சாரு.

ஏங்க இந்த நாகேஸ்வரம் கோயில் விட்டுட்டீங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன்.

வேண்டாமுன்னு லாக் ஆஃப் பண்ணிட்டேன்.

Monday, March 14, 2022

பிரியாணி - ஆண்மை குறைவு

பிரியாணி சாப்பிட்டால் கருவுறுதல் தன்மை குறைவு ஏற்படக்கூடும் என சொல்லி சிலர் மருத்துவ ஆராய்ச்சிகளை ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் ஆப்லும் நடந்தி கொண்டு இருக்கிறார்கள். 

உண்மையில் அப்படி நடக்குமா என கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

நான் தீவிரமான சைவ உணவு பழக்கம் கொண்டவன், வெஜ் பிரியாணியை கூட சாப்பிட்டது இல்லை. 

சரியான முறையில் சமைக்க படாத உணவும், சரியாக ஜீரணம் ஆகாத உணவும் ஆண்மை குறைவை ஏற்படுத்த கூடும் என மருத்துவ ரீதியாக சொல்ல படுகிறது. 

இதனை பற்றி திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கிறார், அதாவது

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது அற்றது போற்றி உணின்." என்ற குறளில் உண்ட உணவின் செரித்த தன்மை கண்டுகொண்டு பிறவற்றை உண்ணுதல் வேண்டும் என சொல்கிறார்.

இன்னொற்றில் வள்ளுவர் பின்வருமாறு சொல்கிறார்

"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்." - இதில் அளவு தெரியாமல் அதிகம் உண்டால் நோய் வருகை நிச்சயம் என சொல்கிறார். இதில் 2000ஆம் ஆண்டிற்கு பிறகான பொருளாதார மாற்றம், மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றை வைத்து ஒருவனை அதிகம் சாப்பிட வைக்கிறது இந்த வியாபார உலகம். 

இன்று பல உணவகங்கள் வந்துவிட நிலையில், வெளியே போகாமல் இருந்த இடத்திலேயே சாப்பாட்டை வாங்கி வர வைத்து சாப்பிட முடியும் என்ற நிலையில், பசிக்காக உணவை வாங்குவானா அல்லது ருசிக்காக வாங்குவானா ???

விற்பனை போட்டியில் யார் ருசி அதிகம் தந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள் தேவை இல்லாத ருசி காரணிகளை சேர்க்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது.

இன்று Cloud Kitchen / Institutional Kitchen என்றவை எல்லாம் வழக்கத்தில் வந்த பிறவு அடுப்பில் சமைத்து நேரடியாக சாப்பிட தரும் உணவகங்கள் மிகவும் குறைவு - சைவத்திலும் சரி அசைவத்திலும் சரி. 

அதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் பிரியாணி சாப்பிட்டு தான் கருவுறுதல் பிரச்சனை வர வேண்டும் என்று இல்லை அது சாம்பார் சாதத்திலும் தயிர் சாதத்திலும் வரவும் வாய்ப்பு இருக்கு.

இதனை சார்ந்து வாசிக்க வேண்டும் என்றால் Michael Gershon எழுதிய "The Second Brain". நேரம் இல்லாவிட்டால் உங்களுக்கு வரும் WhatsApp Forwardகளை படித்துவிட்டு அந்த உலகத்திலேயே வாழ்ந்து விடவும்.

மேலும் தெரிந்துகொள்ள 

"The Gut-Fertility Link & Methods To Improve — Dr. Ryan Bailey, PT, DPT, WCS" https://www.expectingpelvichealth.com/blog-posts/what-is-the-gut-fertility-link

Saturday, March 12, 2022

மாறன் - திரை விமர்சனம்


மாறன் 

பயில்வான் ரங்கநாதனின் வாழ்க்கையை வரலாற்றை மொக்கையாக படம் எடுத்திருந்தாலும், அது மாறன் படத்தை விட நன்றாக இருந்திருக்கும்.

கோலியுட் - கோடம்பாக்கம் - தமிழ் திரையுலகிற்கு மொக்கை படங்களை தள்ளி விட நிறைய குப்பை தொட்டிகள் கிடைத்திருக்கிறது. போல சந்தோஷம். 

மேலாக எடுத்தால் ரசம், நடுவாகில் எடுத்தால் சாம்பார், அடியோடு எடுத்தால் குழம்பு என சமையல் தெரியாதோரின் சமையலை கிண்டல் செய்வார்கள். 

அது போல என்னது என தெரியாமல் எதோ ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல வேளை திரையரங்கில் வரவில்லை.

ஒடீடீயில் வந்ததினால் நன்றாக இருக்கும் காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை ஓட்டி விடலாம். அப்படி பார்த்தால் ஆரம்பத்தில் வரும் படத்தின் பெயரையும் முடிவில் வரும் சுபம் அல்லது வணக்கம் (மயக்க நிலையில் இருந்ததால் சரியாக தெரியவில்லை)  மட்டும் தான் பார்க்கலாம். நியாயபடி அதற்கு மட்டும் தான் விமர்சனம் எழுத வேண்டி இருக்கும்.

ஒன்றை மணி நேரம் தேர் திருவிழா போல் நகர்ந்து விட்டு அய்யோ நாம் ஓட்டி கொண்டு இருப்பது தேர் இல்லை திருச்சி - சென்னை ரூட் பஸ் என ஞாபகம் வந்திருக்க வேண்டும் இயக்குனருக்கு.

குறிப்பு (இயக்குனருக்கு) - 

முப்பது / இருபது வருடங்களுக்கு முன்பு ஜீனியர் விகடனின் வந்த கழுகார் இரவு ரவுண்ட் அப், துப்பறியும் செய்தி கட்டுரைகளை ஆகியவைகளை படித்தாலே நல்ல பத்திரிக்கை உலகம் சார்ந்த சிறப்பான த்ரில்லர் படத்தை எடுத்திருக்கலாம்.

Sunday, March 6, 2022

பொன்னியின் செல்வன் II வீரமே வாகை சூடும்


எல்லோரும் எழுதிவிட்ட காரணத்தினால் நானும் எழுதுவிட வேண்டுமென தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படித்த எல்லோரும் அவர்கள் மனதில்  ஒவ்வொரு மாதிரி கதைக்கும் கதைமாந்தர்களுக்கும் உருவம் கொடுத்து வைத்திருப்பார்கள். 

இப்பொழுது அப்படி உருவம் கொடுத்த அத்தனை ஆட்களும் ஒரே உருவமாக திரைப்படமென நுகர்வ ஆரம்பிக்க வரும் பொழுது பிரச்சனை வர தான் செய்யும்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் இதுவரையில் தமிழில் இதுவரையில் சரித்திர நாவலை தழுவி எடுக்கப்பட்ட எந்த படமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.

உதாரணமாக - பார்த்திபன் கனவு நாவலை தழுவி அதே பெயரில் படமாக எடுத்தார்கள். நாவலில் பார்த்திபனுக்கு உதவி செய்யும் சிவனடியார் யார் என்று தெரிய வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் படத்தில் சிவண்டியாராக எஸ்.வி.ரங்காராவ் வரும் பொழுதே தெரிந்து விடும் நரசிம்ம பல்லவன் தான் சிவனடியார் என்று. 

இந்த லட்சணத்தில் தான் இது வரையில் சரித்திர படங்களை எடுத்திருக்கிறார்கள். 

இப்பொழுது மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வனை கையில் எடுத்திருக்கிறார். பார்ப்போம்.

- - - -

வீரமே வாகை சூடும் படத்தை பார்த்தேன். 

வங்கி துறை, தொழில்நுட்ப துறை என எதை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் தோன்றியதை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய நாவலை அப்படியே தழுவி எடுத்திருக்கிறார்கள். நாவலில் இப்படி தான் கொலைகாரன் தான் யார் என்று தெரிந்துவிட கூடாது என்று நாயகன் ( விவேக் என நினைக்கிறேன்) தேடி போகும் ஆட்களை எல்லாம் முன்பே போய் கொன்று விடுவான்.

அந்த நாவலை அப்படியே ஒழுங்காய் எடுத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கும்.

- - - -

Sunday, January 2, 2022

1990கள் II பிலிப்ஸ் டூ இன் ஒன் II மலரும் நினைவுகள்


1990களின் மத்தியில் அப்பா Philips Two in One Tape recorder வாங்கி கொடுத்தார். அத்தோடு இருந்த இரண்டு ஒலிபெருக்கி உடன் ஏற்கனவே வீட்டில் இருந்த பெரிய ஒலிபெருக்கிகளை இணைத்து அண்ணன் அவரது மாடி அறையில் அதிக சத்தத்துடன் ஒலி சேவை செய்து கொண்டு இருப்பார். 

அவர் பொறியியல் படிப்புக்காக கல்லூரி விடுதியில் தங்க ஆரம்பித்த உடன் பிலிப்ஸ் என் வசமானது.

அது வரையில் மேற்கத்திய இசை மற்றும் ஹிந்தி சினிமா பாடல்களை மட்டும் கத்தி கொண்டு இருந்த பிலிப்ஸ் என் வசமான பின்பு தேனிசை தென்றல் தேவாவின் கானா பாடல்களை கதற ஆரம்பித்தான். 

அண்ணனாவது மாடி அறையில் தான் பிலிப்ஸை வைத்திருந்தார் ஆனால் நானோ வீட்டின் வரவேற்பு அறையை அடுத்து இருந்த என் அறையில் பிலிப்ஸை கதற விட்டு கொண்டு இருந்தேன்.

அதுவும் ஞாயிறு என்றால் ஒரே பாடலை Rewind பண்ணி திரும்ப திரும்ப போட்டு (அப்போதைய Loop) கேட்டு கொண்டு இருப்பேன். 

அப்பா தொழிற்சாலையில் அதிக சத்தங்களுக்கிடையே வேலை செய்பவர் என்பதால் வீடு அமைதியாக இருக்க வேண்டும் என சொல்வார். ஆனால் அந்த வயசுக்கே இருந்த வேகத்தில் இதென்று இல்லை அப்பாவின் எந்த பேச்சையும் கேட்டதில்லை. (ஆனால் இப்பொழுது எல்லாம் அவரது பேச்சை கேட்டு இருந்திருக்கலாம் என தோன்றும்)

அப்பா இரண்டு காதுகளையும் கைகளால் மூடி கொண்டு அமர்ந்திருப்பார். அவருக்கு கோபம் வரும் வரைக்கும் பிலிப்ஸை கதற விடுவேன்.

சில சமயம் நானே வெறுத்து போய் பிலிப்ஸை கதற விடாமல் இருந்தால் அப்பா "என்னணா டீ கடைய இன்னும் திறக்கலையா ....உடம்பு சரியில்லையா.." என கேட்பார். 

நான் கல்லூரி சேர்ந்த பொழுது ஒலிப்பேழை மற்றும் ஒளிப்பேழை எல்லாம் (Audio & Video Cassette) எல்லாம் முதியோர் ஊக்கத்தொகை (Pension) வாங்க ஆரம்பித்திருந்தனர்.

CD, MP3 என பரிணாம வளர்ச்சி கண்டு இருந்தது.

கடைசியாய் பத்ரி மற்றும் லகான் திரைப்பட கேசட் வாங்கி இருக்கிறேன் போல. மற்றது எல்லாம் அண்ணனது சேகரிப்பு.

# மலரும் நினைவுகள்

நெட்ஃபிக்ஸ் II பாக்யராஜ் II கோபி சுதாகர் II டாப் டென் சுரேஷ் குமார்

Absolute Master Class Marketing 

நெட்ஃபிக்ஸ் தமிழக பார்வையாளர்கள் சந்தையை கைபற்ற வேண்டுமென முடிவு செய்துவிட பிறவு அவர்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு யுத்தியும் ஆச்சரிய பட வைக்கிறது. 

சந்தைப்படுத்தலில் கற்க ஆர்வமாக உள்ள எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இதற்கு முன்பு சிலபல முயற்சிகள் நெட்ஃபிக்ஸ் எடுத்திருந்தாலும் சமீபத்திய காலத்தில் தமிழர்களை குறி வைத்து நகர்த்தும் விஷயங்கள்  நெட்ஃபிக்ஸை தமிழ் மக்கள் மனதில் உட்கார வைத்து விடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

ஆரம்பத்தில் மொத்த இந்தியாவிற்கும் ஒரே மாதிரியான விளம்பரங்கள் வெளியிட்ட பொழுது வடக்கு தெற்கு சண்டைகள் பின்னூட்ட பகுதியில் அதிகம் வந்ததால் Netflix South என தனி ட்விட்டர் பக்கத்தை ஆரம்பித்தார்கள். 

அதன் பிறகு தெற்கில் எந்த மாநில மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என ஆராய்ந்து அந்த மொழியில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்.

மொத்த இந்திய மக்களின் வருவாயை கணக்கிட்டு சந்தா தொகையை குறைத்தார்கள். 

அதன் பின் ஆட்டம் ஆரம்பம்.

Sex Education தொடருக்கு விளம்பர படுத்தும் விதமாக பாக்யராஜ் அவர்களை பேச வைத்து ஒரு காணொளி வெளியிட்டார்கள். அதில் வேறு யார் பேசி இருந்தாலும் எடுபட்டு இருக்காது. ( https://youtu.be/I1kA5YSYuEU )

கொஞ்ச நாட்களுக்கு முன்பு Squid Game தொடருக்காக பரிதாபங்கள் கோபி சுதாகர் ஆகியோரை வைத்து காணொளி கொண்டு வந்தார்கள். அதில் பிரபல Youtube காணொளி பதிவர்களை நடிக்க வைத்து இருந்தார்கள். வழக்கம் போல எல்லையில்லா அளவில் அதகளம். ( https://youtu.be/C3RVZdoN9to )

இப்பொழுது 1980கள் மற்றும் 1990களின் சிறுவர்களை அதிகம் ஈர்த்த சன் டிவி டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேஷ் குமார் அவர்களை வைத்து நெட்ஃபிக்ஸின் 2021ஆம் ஆண்டின் சிறந்தவைகள் என ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறார்கள். ( https://youtu.be/4wrHALUeIrE )

இவற்றின் முக்கிய அம்சம் என பார்த்தால் நெட்ஃபிக்ஸ் பற்றியோ அல்லது அவற்றின் தொடர்களை பற்றி தெரியாதவர்களுக்கு கூட இந்த காணொளிகளின் மூலம் தெரிய படுத்திவிட்டார்கள்.

மன சோர்வின் பொழுது எல்லோரும் ஒரு நல்ல பழைய படத்தை பார்ப்போம் என பாக்யராஜ் அவரது படத்தை பார்த்திருப்போம். 

கோபி சுதாகர் ஆகியோரின் புது காணொளி வந்திருக்கிறது என அறிவிப்பு வந்தாலே உடனே சென்று பார்க்கும் கூட்டம் ஒன்றுள்ளது. சிரிப்புக்கு நாங்க உத்தரவாதம் என களம் இறங்கும் கோஷ்டி அவர்கள்.

முன் சொன்ன இரண்டு முயற்சிகளுக்கு மகுடமாய் அமைந்திருக்கிறது சுரேஷ் குமார் அவர்களை வைத்து வந்திருக்கும் இந்த காணொளி. டாப் டென் சுரேஷ் குமார் அவர்களை பார்த்ததும் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சியில் இது வரையில் பார்க்காத தொடர்களை புதியவர்களுக்கு அறிமுக படுத்தி பார்க்க வைத்து விடுவார்கள்.

சந்தைப்படுத்தலின் அடிப்படை புரிதல்களான ஈர்த்து விடுதல் (பாக்யராஜ் காணொளி), கவனம் பெறுதல் (கோபி சுதாகர் காணொளி), விற்று விடுதல் ( டாப் டென் சுரேஷ் குமார் காணொளி) ஆகியவற்றை வைத்து தமிழர்களுக்கிடைய தங்களது தொடர்களை அறிமுக படுத்திவிட்டார்கள். 

ஆனால் இதில் எதுவும் செய்யாத நிறுவனங்களுக்கு நெட்ஃபிக்ஸ் கடுமையான போட்டி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Related Posts with Thumbnails