Pages

Sunday, March 3, 2013

**கலவை - சுஜாதா : ஜென் கவிதை : கில்மா / பிட் படங்கள்**

இந்தியாவில் அகப்பெல்லா வகை இசையை வேறு யாரும் முயற்சித்து பார்த்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து ரகுமான் தான் முதன் முதலில் அதை பயன் படுத்தி என்றென்றுக்குமான இனிய இசையை வழங்கி இருக்கிறார் தமிழில். பெருமை நமக்கு. 


அகப்பெல்லா வகை இசை என்பது எந்த வித வாத்தியங்களின் உதவியும் இல்லாமல் வெறும் மனித குரலிலேயே இசை கோர்வையை அமைப்பது. இது அந்த காலத்தில் பிரெஞ்சு / இங்கிலாந்து போன்ற நாடுகளில் செல்வங்கள் இல்லாத தேவாலயங்கள் / வீதியோர நாடகங்கள் என்று பயன் படுத்தினார்கள். முக்கியமாக இந்த அகப்பெல்லா வகையை கையாள ஆழ்ந்த இசை ஞானம் வேண்டும். ரகுமான் கையாண்ட / இசையமைத்த அந்த அகப்பெல்லா பாடலை கேட்க இங்கே கிளிக்கவும். 

= = =


சமீபத்தில் நானெடுத்த புகைப்படங்களில் எனக்கு பிடித்ததொன்று.

= = =
இப்பொழுதெல்லாம் மன அமைதி விரும்பும் நேரங்களில் எல்லாம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் எட்டாவது நடைமேடையில் அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். அப்படி படிக்க காரணம் அங்கிருந்து பார்க்கையில் பார்வைக்கு விரியும் கொளவாய் ஏரி தான். சுற்றியும் மலைகள் , அதிலிருந்து வரும் சிலு சிலு குளிர் காற்று. மெய் மறப்பது என்றால் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 


கட்டுமரத்தில் மீன் பிடிக்கும் தனியொரு மீனவர், கொக்கு, அடிக்கும் காற்றில் பறக்க முடியாமல் தட்டுதடுமாறி பறக்கும் காகங்கள்... ஏரியில் உற்பத்தி ஆகும் சிறு சிறு அலைகள் ...... மெய் மறந்து எங்கெங்கோ பறந்து கொண்டு இருப்பீர்கள் . அதுவும் மனத்துக்கு பிடித்த புத்தகத்தோடு அமர்கையில் ...சுகமோ சுகம்.  





அன்று 
மதியம் இங்கு போய்விட்ட பிறவு தான் கையில் எந்த புத்தகத்தையும் கொண்டு போகாதது ஞாபகத்துக்கு வந்தது, அப்பொழுது முதலாம் நடைமேடையில் எழுமலை அண்ணன் தனது எழுமலை புக் ஸ்டாலை மூடி கொண்டிருந்தார், என்னை பார்த்த உடனே .... சிறிது உரையாடலுக்கு பின், பூட்டி விட்ட கடையினை திறந்து , என்ன புத்தகம் வேண்டுமோ எடுக்க சொன்னார். அவருடைய மதிய சாப்பாட்டுக்கான நேரத்தை நான் சாப்பிட்டு விடாமல் ஆசான் சுஜாதா எழுதிய "கற்றதும் பெற்றதும்" பாகம் இரண்டை வாங்கிவிட்டு. மெய் மறக்கும் இடத்தில அமர்ந்து ஆசான் எழுதிய "யவனிகாவை மறக்க முடியவில்லை" கட்டுரையை படித்து கொண்டிருக்கையில் சிலு சிலு குளிர் காற்று, பலமான மதிய சாப்பாடு... நித்ரா தேவியின் வசம் என்னை நினைவை இழந்தேன். 

= = =
திருச்சியின் தலை சிறந்த பேச்சாளர் திரு.நீலகண்டன் பொதிகை பட்டிமன்றத்தில் பேசினதை பார்த்து ஆச்சரிய பட்டு போனேன். திருச்சியில் அவரது பேச்சை கேட்க ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு பிரபலம். பெரும்பாலும் கோவில்களில் தான் அவரை பேச்ச அழைப்பார்கள், அதனாலேயே புறநானூறு, கலிங்கத்துபரணி ....etc etc தான் அவர் மேடைகளில் பேசி கேட்டிருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் சரித்திரம், பழங்கால தமிழர்களின் வாழ்வியல் என்று நன்றாக பேசுவார். 



பத்து வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒரு ஆராய்ச்சி பட்டம் தான் வாங்கிருந்தார். இப்பொழுது எவ்வளவோ தெரியவில்லை. நல்ல மனிதர். எனக்கு தமிழ் மீது ஆர்வம் வர அவருமொரு காரணம். 


SRC கல்லூரியில் இருந்து வந்து சமயபுரம் பஸ் ஏறும் பெண்களை சைட் அடிக்க நட்புகளோடு சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் காத்து கொண்டு இருந்த பொழுது "தம்பிகளா என்ன பண்ணுறீங்க" என்று குரல் கேட்டு பிறவு திரும்பி முதன் முதலில் அவரை பார்த்து பத்து வருடங்களாகிவிட்டது. இப்பொழுது என்னை அவருக்கு ஞாபகமிருக்குமாமென்று தெரியவில்லை.  


= = =
நதியின் அகண்ட பிரவேச போலவும், கடலோடு கலந்த பின் நதி நீர், மழை நீர் நிலை போலவும் காதலின் உச்ச அழகையும், அதனுடைய பிரிவின் சோகத்தையும்  கவிதைகளாய் வடித்து இருக்கிறார் நர்சிம் "உன்னை அழைத்துப்போக வந்தேன்" கவிதை தொகுப்பில். நான் வாசித்த முதல் காதல் கவிதை தொகுப்பு... ஒண்ணுமில்லாத வெறுமை மனகாரனாகிய என் மனதில் ஆயிரம் ஆயிரமாய் காதல் எறும்புகளை கொட்டி குறுகுறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது இக்கவிதை தொகுப்பு. நர்சிம் கையாண்டு இருக்கிற வார்த்தை ஜாலம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உதாரணத்திற்கு ...



"எனக்குப் பிடித்த 

எல்லாப் பாடல்களையும் 
உன் ஐ-பாடில் 
வைத்திருக்கிறாய் 

என்னை உனக்குப் பிடிக்குமா 
என்பதை மட்டும் இன்னும் 
ஐயப்பாட்டிலேயே 
வைத்திருக்கிறாய்"


= = =
பிரமிள் அவர்களுக்கு கர்வம் கொஞ்சம் அதிகம் என்று கேள்வி பட்டிருக்கிறேன், அது உண்மையாக தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது வம்சி வெளியீட்டில் அவரது சமூகவியல் கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள "வரலாற்றுச் சலனங்கள்" யின் முதல் கட்டுரையான "ரசிகனும் சமூக மனப்பான்மையும்"  படிக்கும் போது.

= = =
இந்தியாவில் அணைத்து வணிக உணவகங்களிலும் இப்பொழுது பரவி வரும் frozen food கலாச்சாரம் வருகிறது.சிறு நகரங்களில் பள்ளி குழந்தைகளை குறி வைத்து frozen samosa , frozened veg roll போன்றவையை விற்கிறார்கள் ... இவை எல்லாம் சாப்பிட நல்ல மொறு மொறு என்று இருந்தாலும் சுவையோ தரமோ இருக்காது. இந்த அதிகபடியான மொறு மொறுவே குழந்தைகளை ஈர்க்கும். 



கொஞ்ச நாள் முன்பு  சமோசாவில் இருக்கும் stuffing  யை  சரியாக பத படுத்தாமல் இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் வந்தது frozened சமோசாவை இரண்டாவது தடவை செங்கல்பட்டில் சாப்பிட்ட பொழுது. அதனுள் இருந்த வெங்காயம் பச்சையாவே இருந்தது


= = =
எப்பொழுதெல்லாம் ஓர் படைப்பை தளமாய் கொண்டு மத சார்ப்பு பிரச்சனைகள் வருகிறதோ எனக்கு கொபயாஷி இஸ்ஸா எழுதிய ஜென் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்பு புள்ளி தெரியவில்லை ....



"கடவுள் காக்க வேண்டும் நம்மை

ஒரு மின்மினியின் நெருப்பு 
அதிகரித்தாலும் போதும்,
கடவுள் தான்
ஆம், கடவுள்தான் 
நம்மைக் காப்பாற்ற வேண்டும் !"


= = =
நேற்று மாலை கடற்கரை ரயில் நிலைய கட்டண கழிப்பறையில் சிறுநீர் கழித்து விட்டு, வெளியே வந்து அதற்க்கு தர வேண்டிய இரண்டு ரூபாய்க்கு  ஒரு ரூபாயாகவும் இரண்டு ஐம்பது பைசாகளுமாய் தந்த பொழுது, கல்லா உட்கார்ந்து இருந்த பெண்மணி "அம்பது காசு எல்லாம் செல்லாதுங்க...வேற குடுங்க" என்று சொன்னார். 



எவ்வளவு பேசி பார்த்தும் இந்தியாவில் இந்திய அரசாங்கம் வெளியீட்டுள்ள ஐம்பது காசு செல்லாது என்று வாதம் செய்தார். வேறு வழி இல்லாமல் அக்கம்பக்கம் போய் ஒரு ரூபாய் காசாக வாங்கி அவரிடம் தந்தேன், நூறு ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று அவர் சொன்ன பொழுது. 


பிறவு என் பொது அறிவு மங்கி விட்டதோ என்று பயம் வந்து நான் முன்பு வேலை பார்த்த வங்கியில் ஒருவருக்கு போன் செய்து கேட்ட பொழுது "அதெல்லாம் வாங்கிப்போம்ப்பா ..." என்று சொன்னார்.   


= = =
தில்லானா மோகனாம்பாள் படத்தில் கர்நாடக இசையில் மயங்கிய துரைமார் தங்களது இசையை நீங்கள் வாசிக்க முடியுமா என்று சிக்கல் சண்முக சுந்தரம் இடம் கேட்பார்கள். 



பிறகு மேற்கத்திய இசையை தனது கோஷ்டியோடு வாசிப்பார். அந்த இசை கோர்வையை உருவாக்கியது மதுரை மணி ஐய்யர் என்பவர் என்பது எனது சிறு தேடலில் கிடைத்த தகவல். உண்மையா என்று தெரியவில்லை. 


அந்த இசை கோர்வையை பயன்படுத்தி கொண்ட கே.வி.மகாதேவன் அவர்கள் மதுரை மணி அவர்களுக்கு எந்த கிரெடிட்டும் தரவில்லையாம். 

விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.  


= = =
மாயங்களை செய்துவிட்டு தனது அரி வண்ணத்து புன்னகை உடன் மறைந்து போய் விடுகிறான் என் இசை தெய்வம். சொர்க்க காடுகளில் பாய்ந்து ஓடிபோகும் நதியில் குளித்து, அதன் குளுமையை உணர்ந்த தேசாந்திரி போல் ஆகிவிடுகிறேன் அவரது ஒவ்வொரு இசை கோர்வையை கேட்கும் பொழுதும், கேட்டு முடிந்த பொழுதுகளிலும். இளையராஜா இளையராஜா தான்.கோபுர வாசலிலே பட ஆரம்ப இசை ... அற்புதங்களின் ஜீவநதி 

பல வருடம் கழித்து இன்று அகத்தியன் இயக்கிய "காதல் கவிதை" படத்தை பார்த்தேன். படம் ரொம்ப பிடித்து போக காரணம் இளையராஜா ஸார் தான். பொதுவாய் ராஜா ஸார் இசையமைத்த பாடல்களுக்காக இல்லாமல் பின்னணி இசைக்காக பார்த்தேன். மிரட்டி பட்டைய கிளப்பி இருக்கார் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு அற்புதமாக உணர்தேன் பின்னணி இசை கோர்வையை கேட்ட பொழுது. 

= = =
"Barack Obama, The White House, and 9 others have Tweets for you"



என்னகொசம் இவங்களை யாரு  டிவிட் போட சொன்னது ...ஒழுங்காவே வேலை பார்க்க விட மாட்டாங்க போலிருக்கே . ஒபாமாவுக்கு வேற வேலையே இல்லை போலிருக்கு. நான் டிவிட்டர் ல அக்டிவ்வா இல்லைன்னு தெரிஞ்சுகிட்டே ஒபாமா டிவிட்டர் ல எனக்காக டிவிட் போடுறாரு. இதுக்கு ஜிமெயில் காரனும் கூட்டு போல 


= = =
என்னவென்று தெரியவில்லை, எண்டமூரிவீரேந்திரநாத் எழுத்துக்கள் என்னுள் மாயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. சுய மதிப்பீடு விசாரணை ... துள்ளல் எழுத்துநடை, படிக்க ஆரம்பித்தால் முடிவு வரைக்கும் கொண்டு செல்லும் விறுவிறுப்பு. 



சொன்ன போனால் அவரது எழுத்துக்கள் யாவும் கிளாஸ் + மாஸ் என்றே தோன்றுகிறது. 


அவருடைய  த்ரில்லர் என்ற நாவலை தற்பொழுது வாசித்து கொண்டிருக்கிறேன். அசத்தலோ அசத்தல் படித்த வரைக்கும். இந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார். 


அவர்கள் எண்டமூரியின் நாவல்களில் முப்பதை மொழிபெயர்த்து வெளியீட்டு இருக்கிறார்கள்... கேட்டதில் முப்பதும்  ரூ.1500 ல் இருந்து ரூ.2000 க்குள் தள்ளுபடி உடன் வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். 

இந்த அல்லையன்ஸ் பதிப்பகம் மயிலாப்பூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கிறது. கொஞ்சம் தள்ளி அடையார் ஆனந்த பவனும் இருக்கிறது. 

செவுக்குண வில்லாத பொழுது  சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புது கட்டடத்தை கட்டி இருக்கிறார்கள் அல்லையன்ஸ் நிறுவனத்தார். 100 வருட பழமையான பதிப்பகம் இது.  


= = =
சென்னையிலேயே ரொம்ப பழமையான பகுதிகளில் ஓன்று சைதாபேட்டை, சுருக்கமாக சைதை. கிடைத்த குறிப்புகளின் படி 1730 ல் சைய்து கான் என்பவர் இந்த நில பகுதியின் சொந்தகாரர். அவரது பெயரில் இருந்து தான் சைதை தனது பெயரை பெற்றது. 



அடையாறு நதி பக்கத்தில் இருப்பதால், விவசாயம் நடந்திருக்கலாம் என்று நான் அறிந்த புவியியல் நிபுணர்கள் சொன்னார்கள். மதராஸ் டவுன் என்று அழைக்க பட்ட பகுதிக்கு ஒரே தரைவழி நுழைவாயிலாக பல காலம் இருந்து வந்துள்ளது. 


அந்த காலத்தில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் மண்ணியல் / இயற்பியல் / தாவரவியல் / நில உருவாக்கவியல் / நிலத்தோற்ற வாழ்சூழலியல் ஆராய்ச்சிகளை தோட்டங்கள் வைத்து   மேற்கொண்டு பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்புகள் சரியாக இல்லை. அனால் பெரும் தோட்டங்கள் இருந்தற்கான குறிப்புகள் இருக்கிறது. 

திநகரில் ஒரு காலத்தில் இருந்த காடு / ஏரி சைதை வரை நீண்டு இருந்துள்ளது. 

படகு வழி போக்குவரத்து / வர்த்தகம் நடந்துள்ளதாக சைதை வாழ் பெரியவர்கள் சொல்கிறார்கள், இதற்கும் குறிப்புகள் இல்லை. 

தோட்டங்கள் வைத்த அந்த ஆங்கிலேயர்களது குறிப்புகளை தேடி கொண்டிருக்கிறேன். 


= = =
கற்றதும் பெற்றதுமில் சுஜாதா அவர்கள் பகிர்ந்தது - 



"முன்னாள் இந்நாள் முதல்வர்கள் 

சட்டசபையில் 
எதிரெதிரே மட்டுமல்ல 
அருகிலும்தான்"  - எழுதியவர் எம்.சேவியர்பால், கோயம்பத்தூர். 

ஹைக்கூ வடிவ கவிதைகளை எட்கூ என்று வாத்தியார் சொல்கிறார். அதாவது சமகால நிகழ்வுகளை விமர்சிக்கும் ஹைக்கூ கவிதைகள் தான் எட்கூ. சென்னையை பற்றிய  குறிப்புகளை தேடுகையில் கிடைத்தது. 

ஓர் சென்னை பற்றிய குறிப்பு - 

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு, சென்னையில் மிக முக்கிய பேருந்து நிறுத்தங்களிலேயே  ஒரு பேருந்து நடந்துனர் இருப்பாராம். பேருந்து  வருவதற்குள் அவரிடம் பயணசீட்டு வாங்கி கொள்ளலாமாம். இந்த விஷயம் வண்ணநிலவனின் "பின்நகர்ந்த காலம்" ல் படித்தேன். இந்த புத்தகம் இராமச்சந்திரன் என்ற சாதாரணன் வண்ணநிலவன் ஆன கதையை கட்டுரை வடிவில் சொல்கிறது.  


= = =
NESTLE DRY FRUITS ன்னு புது சாக்லேட் வகையறவை விட்டிருக்காங்க. செம மொக்கையா இருக்கு. சுவையே இல்லை. அவங்க ஏற்கனவே விட்டு MILK வகையறவுல கொஞ்சம் பட்டி தட்டி விட்டு இருக்காங்க போல. விலை ரொம்ப ஜாஸ்தி ரூ.25 



ஆனா, PARLE HIDE & SEEK CAFFE MACHO ன்னு புது வரைட்டி வந்திருக்கு. சுவைன்ன அப்படி ஒரு சுவை. BRITANNIA  CHOCO NUT சீரீஸூக்கு செம போட்டி. நெய் கொஞ்சம் நிறைய சேர்த்து இருக்காங்க போல. 


இதைய டைப் பண்ணிட்டு இருக்கும் பொழுது ஏனோ ஜேன் ரீக்ஹோல்ட் எழுதின ஒரு ஜென் கவிதை ஞாபகத்துக்கு வருது. அப்படி ஞாபகத்துக்கு வர காரணம் அதை நேத்து தான் படிச்சேன். அந்த கவிதை ....

"சம்மணமிட்டுத்
தியானத்திலிருக்கிறான் ஒரு 
சாகபட்சிணி. கோழிக்கறி 
வறுபடுகிறது."  


= = =
தமிழகத்தில் பல குஜால்ஸ் படங்கள் எடுத்து இருந்தாலும், அவைகளில் சொருவ படும் பிட் என்பது 1940 - 1970 வரை வெளிநாட்டில் எடுத்த உடலறவு காட்சிகளாக தான் இருக்கும். 



இதை தவிர்த்து,  முழுமையான உடலறவு காட்சிகளை மட்டும் கொண்ட படங்களை தயாரிப்பதிலும் தென் இந்தியாவில் கொஞ்சம் மந்தநிலையே இருந்தது. 


பிறவு பலான சிடிக்கள் விஷயத்திலும் இந்தியா பின் தங்கியே இருந்தது. அதனால் கில்மா விஷயத்துல வெளிநாட்டுகாரன் தான் டாப்பு. அவனிய பார்த்து தான் நம்ம ஆட்கள் கெட்டு போனாங்க 


பொருளாதார தேடல்களுக்கும், இந்த பிட்டுகளுக்கும் நிறையவே தொடர்பு உண்டு, வேலை தேடி வெளிநாடுகளுக்கு போனவர்கள், கொஞ்ச வருடம் கழித்து தாயகம் வரும் பொழுது அங்கு கிடைக்கும் கில்மா கேஸட்களை வாங்கி வந்தார்கள்..... அதாவது இதன் மூலம் 1970ல் இருந்து ஆரம்பித்தது. 

 சிவா புராணத்தை (சொக்கநாதர் திருவிளையாடல்) எடுத்து கொண்டால் அதில் தாய் - மகன் உறவு என்ற அளவுக்கு எல்லாம் கதை சொல்லி இருப்பர்கள். அதனால் புராணம் / இதிகாசம் கதை எல்லாம் கேட்டு கெட்டு போன சாராரி இந்தியனின் ரசிப்பு வெளிப்பாடு தான் கில்மா படங்கள்  . சினிமா மக்களை கெடுக்கவில்லை. 

Thursday, February 28, 2013

சுஜாதா - இந்திய தேசிய அறிவியல் தினம்


இன்று இந்திய தேசிய அறிவியல் தினம். இந்த நாளில் ஒரு தலைமுறைக்கே ஆஸ்திரேலியா பழங்குடி மக்களின் மொழி போல் இருந்த அறிவியலை அண்ணாச்சி கடை வாழை பழம் போல் எளிதாக்கி தந்த என் ஆசான் சுஜாதா அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

சிறு வயது முதலே சுஜாதாவை பற்றி கேள்வி பட்டு இருந்தாலும், அவர் மீதான ஆர்வம் என்னவோ கொலையுதிர் காலம் நாவலை தழுவி DD தமிழில் சீரியலாக வந்த பொழுது தான். ஆச்சரியங்கள் பலவற்றை தந்தது. 

2003 என்று நினைக்கிறேன். ஸ்ரீரங்கது தேவதைகள் தொடர் விகடனில் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு தொடரையும் படித்து முடித்த பொழுது, ஆயிர கிலோ கணக்கில் இன்பங்களையும், சுவாரசியத்தையும் பழசாறாக்கி குடித்தது போல் உணர்தேன். அவரை சந்தித்து அவரது கைக்கு முத்தங்களை தரலாமென்று இருந்தேன். பிறவு நான் ஸ்ரீ ரங்கதுக்கு செல்வது அதிகமாகின. எனக்கு பிடித்த இடங்களில் முதன்மை பெற்றது ஸ்ரீரெங்கம்.  

அவரது கற்றது பெற்றதும் .... படித்திருக்கிறேன் ..தொடர்ச்சியாக இல்லை. 

ஒரு நாள் தொலைக்காட்சியில் சுஜாதா இறந்து விட்டாரென்று செய்தி.... யார் யாரோ அவரது உயர்வுகளை பற்றி பேசினார்கள். தமிழ் பதிவுலகம் எனக்கு அறிமுகமாகிருந்த புதிது. தமிழ் இணைய தளங்களிலும் அவரது உயர்வுகளே வார்த்தை வடிவில் சோக சாயலுடன்.  ஏக்கம், ஏமாற்றம் ...என்ன உணர்வென்று தெரியவில்லை, ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. ஆனால் ரொம்ப சோகமெல்லாமில்லை. 

பிறவு தான் அவரது எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தேன் ..... இப்பொழுது எனக்கு சொல்ல தோன்றுகிறது   "சுஜாதா ..THE GREAT ..என்ன மனுஷனய்யா நீர்"

Wednesday, February 27, 2013

சிறு போராட்ட குழுக்கள்


சுகந்திர போராட்டம் என்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களை தவிர்த்து நிறைய பேர் சிறு சிறு குழுக்களாய் சுகந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு உள்ளார்கள். ஆனால் சோகம் என்றால் பிரிட்டிஷ் அரசும் அன்றைய காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் இந்த சிறு குழுக்களை கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்றே அடையாள படுத்தி உள்ளது. பெரும் தலைவர்களுக்கு சுகந்திர போராட்டத்தில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அத்தனை பங்கு இந்த சிறு குழு வீரர்களுக்கும் இருக்கிறது. 

கல்கி அவர்கள் தனது கிளாச்சிக் நாவலான "அலை ஓசை"யில் இவர்களை பற்றியும், இவர்களது செயல் பாடுகளை பற்றியும் விரிவாகவே எழுதிருப்பார். அதன் மூலம் தான் எனக்கும் இவர்களை பற்றி தெரிய வந்தது. 

இவர்கள் பெரும்பாலும் அறிவுசார்ந்த குழுக்களாகவும், மதம்  சார்ந்த குழுக்களாகவும் தான் இருந்தார்கள். அதுவும் மதம் சார்ந்த குழுக்கள் தான் அதிகம் பரவலாக இருந்துள்ளனர், அதற்கு முக்கிய காரணம் அன்றைய மக்களிடையே நிலவி வந்த மதம் / ஜாதி சார்பு தன்மையே. 

காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவும் அப்படிப்பட்ட மதம் சார்ந்த போராட்ட குழுவை சேர்ந்தவன் தான். 

குறிப்புகளின் படி பார்த்தால், தென் இந்தியாவை விட வட இந்தியாவில் தான் இந்த மாதிரியான போராட்ட குழுக்கள் அதிகம் இருந்தன. அல்லது தென் இந்திய போராட்ட குழுக்களை பற்றி நான் அதிகம் படிக்கவில்லை என்று வைத்து கொள்ளலாம். 

இவர்கள் பலர் காந்திய வழியை ஆதரித்தும் எதிர்த்தும் கொள்கைகளை கொண்டவர்களாக இருந்து உள்ளனர். அனுஷிலன் சமிதி, ஜுகாந்தர், பெங்கால் தோழர்கள், மோகன் பேகன் ஓட்டபந்தைய  குழு ஆகிய குழுக்களை பற்றி குறிப்புகள் கிடைக்கிறது. சில பல குழுக்களை இந்தியாவிற்கு வெளிய இருந்தும் ஆதரவு இத்தகைய போராட்ட குழுக்களுக்கு தந்து உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிதி உதவி, அடைக்கல உதவி என்ற அளவிலேயே இருந்து உள்ளனர். களப்பணியும் சிறுது உண்டு இவர்களுக்கு. 

இன்றைய காலத்தில் இந்த குழுக்களை பற்றிய  சினிமா பதிவுகள் என்று பார்த்தால் கொஞ்சம் குறைவு தான், காரணம் அரசியல், இன்னொன்று இந்த குழுக்களை பற்றி விஷய ஞானம் இல்லாதமை. புனைவு / அபுனைவு புத்தக பதிவுகள் பற்றி எனக்கு தெரியவில்லை.

நேற்று நான் படித்த முக்கிய குறிப்புகளின் முக்கியமானதாக கருதுவது சிட்டகாங் ராணுவ தாக்குதல் தான், ஏனென்றால் லாகன் புகழ் அஷுடோஷ் கோவரிகர் தயாரித்து இயக்கிய   க்ஹெளின் ஹம் ஜி ஜான் சே  (Khelein Hum Jee Jaan Sey ) தான். இது ஏதோ புத்தகத்தை தழுவி எடுத்து உள்ளனர். 

சோகம் என்னவென்றால் இந்த சிறு குழுக்களை கலவர காரர்கள் /  தீவிரவாதி என்றே அடையாள படுத்தி வந்துள்ளதால், சுகந்திர இந்தியாவில் தியாகி பென்ஷன் பலருக்கு கிடைக்கவில்லை. அதை அவர்கள் எதிர் பார்க்கவும் இல்லை என்பது வேற விஷயம். 

இவர்களது காலம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்த வரைக்கும் அது 1900 க்கு பிறவு தான். 

வன்முறை பாதையில் சென்றவர்களுக்கு ஆயுதம் வழங்கி பல வெளிநாட்டவர்களுக்கும் உதவி செய்து உள்ளதாக தெரிகிறது.சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு இம்சை தருவதையே கொள்கையாக வைத்து கொண்டவர்களும் உண்டு. உதாரணம் லக்நொவ்வில் நடந்த காகோரி ரயில் தாக்குதல். மாபெரும் கூட்டு முயற்சி. 

நட்புகளே, உங்களுக்கு இந்த சிறு போராட்ட குழுக்களை பற்றி விவரம் எதாவது தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.  

குறிப்பு - 


இதை படித்து விட்டு நண்பர் கண்ணா.கே அவர்கள்  கூறியது - 

எனக்கு இந்த கவிதைதான் ஞாபகத்துக்கு வருது


'மகாபாரதம் 

இதிகாசமானது.

பகவத்கீதை

வேதமானது.

கண்ணன், அர்ச்சுனர்

அனைவரும் கடவுளானார்கள்.

எல்லாம் சரி,

கூட்டம் கூட்டமாக

வெட்டிக்கொண்டும்

குத்திக்கொண்டும்

செத்துப்போன

சிப்பாய்கள்

என்ன ஆனார்கள்?' ''

= = = 


பின் சேர்க்கை :- 

விவரங்களை காலையில் எழுதிவிட்டு, அலுவலகம் வந்த பின்...யோசனைகள் இது குறித்தானது பலம் பெற்றது. எப்படி போராடி இருந்தாலும் எல்லோரது நோக்கமுமொன்றானதாக தானிருந்திருக்கிறது. ஐயம் இல்லை. அனால் ஒரு விழா என்று வந்துவிட்டால் ஏதோ சிலரை அல்லது ஒரு வகுப்பினரை மட்டுமே நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரும் இயக்கத்தோடு கூட்டு சேரவில்லை இவர்கள்.... அதனால் குறிப்புகளில் கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்று பெயர் பெற்று விட்டனர். 

எல்லாவற்றிலும் இருக்கும் புகழ் சார்பு மயக்கம் இதிலும் மக்களிடத்தில் பரவி உள்ளதாகவே இருக்கிறது. 

கொஞ்ச நேரத்திற்கு முன்பு காகோரி ரயில் தாக்குதலை பற்றி இன்னும் விவரமாக படிக்கலாமென்று தேடல்பொறி உதவி கொண்டு தேடினால், அச்சம்பவத்தை காகோரி ரயில் கொள்ளை என்று பலர் குறிப்பீட்டு எழுதி உள்ளார்கள். கஷ்டமாக இருந்தது. என்ன ஏதென்று கூட படிக்கவில்லை. அப்பக்கத்தை மூடிவிட்டேன். ஆதரங்களே தன்மை யற்று இருக்கிறது ...இவ்விஷயத்தில். 

அதுசரி இந்திய நாட்டின் கல்வி நூல்கள் எல்லாம் அரசியல் சார்பு கொண்டதாக தானே இருக்கிறது, அப்படி இருக்கும் பொழுது சிறு போராட்ட குழுக்களின் நியாய பக்கங்கள் எவ்வாறு எழுத படும் ?? 

நான் பார்க்கும் / கேட்கும் விவாதங்கள் யாவும் பிரபல தன்மை கொண்டவர்களின் சுற்றியே உள்ளது. இந்த சிறு போராட்ட குழுக்கள் பற்றிய விவரங்கள் தேடி கொண்டு இருக்கிறேன். கிடைத்தவைகளை படித்துவிட்டு, முழுமையாக பகிர்கிறேன். 

Friday, February 22, 2013

சென்னை / மதறாஸ் -1859 வருடம் ::: பீப்பில்ஸ் பார்க்

1859 ம் வருடம் அன்றைய மதறாஸில்  பிரிட்டிஷ் அரசு  சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் 166 ஏக்கர் விஸ்தீரணமும், 5 மைல் நீளமும் கொண்ட பீபில்ஸ் பார்க்கை  உருவாக்கி உள்ளனர். இதில் ஜெய்பூர் தோட்டம், சர்க்கஸ், எந்திர விளையாட்டுகள், குளங்கள், மிருக காட்சி நிலையங்கள், தந்தி செயல் முறைகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆராய்ச்சிகள், நகைச்சுவை / சரித்திர / சமூக  நாடகங்கள், ஐரோப்பா சண்டை காட்சிகள், ஒளி / ஒலி / ஓவிய / கலை கண்காட்சிகள் என்று பல நிகழ்சிகளை நிகழ்த்தி உள்ளனர்.

இதில் முக்கிய ஈர்ப்பு விசை என்று பார்த்தால் சென்ட்ரல் ஸ்டேஷனில் போடப்படும் விளக்குகள் தானாம். 

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்த மக்குளே சொந்தங்களால் உருவான  இந்த பீப்பில்ஸ் பார்க் என்பது அன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. 

காலபோக்கில் கலை இழந்து, அல்லது வேண்டும் என்றே இழக்க வைக்க பட்டுள்ளது. பிறவு வேகமாக வந்த நகரவியல் கலாச்சாரத்தால் இன்றைய ரிப்பன் பில்டிங்  லோகநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. பின்புலத்தில் அரசியல் இருந்துள்ளது. 

இப்பொழுதிய  சென்னையையும் அப்பொழுதிய மதறாஸையும் ஒப்பீட்டு பார்த்தால், பெரிய ஏக்கமும் பெருமூச்சுமே வருகிறது. 

இந்த பார்க் அழிந்து போனதில் ரயில் துறை வளர்ச்சிக்கும் , வருடத்திற்கு எட்டு அன்னா ஒப்பந்ததிற்கும் பெரும் பங்கும் இருக்கிறது.  

இந்த பார்க்கின் மூலம் 1770 களிலேயே ஆரம்பிக்க பட்டுள்ளது. பொழுதுபோக்க வந்த மக்களின் தேவைக்காக சிற்சில வியாபாரிகளை பார்க்கினுள்ளே விட்டது தான் அதன் அழிவின் மைய புள்ளியாகவிட்டது என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். 

இதன் மீதான சிறப்பு கவனங்களை 1859 ல் ஸார் சார்லஸ் ற்றெவில்யன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. 

பீப்பில்ஸ் பார்க்கின் அழிவின் வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அவை எல்லாம் சென்னை என்றே மாபெரும் நகரத்தின் வளர்ச்சியின் ஓர் பங்காய் இருப்பதால் சொல்ல முடியவில்லை. 

இது குறித்து சென்னை சரித்திர ஆய்வு நூல்களில் தகவல்கள் கிடைக்கிறது நுண்ணிய தேடல் இருந்தால் மட்டுமே. வருத்தங்கள் இருக்கிறது.... சென்னை 350ம் கொண்டாடங்களில் இந்த பார்க்கை பற்றிய தகவல் இன்றைய மக்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இந்த பார்க்கை அறிந்த / பற்றி கேட்ட தலைமுறைகள் இப்பொழுது இல்லை நம்மிடம். இதை பற்றி ஒருவரிடம் கேட்ட பொழுது ஈஸ்ட் இந்திய கம்பெனியின் ஆவணங்களை பாதுகாக்கும் காப்பகம் ஒன்றில் தேடினால் தகவல் கிடைக்குமென்று சொன்னார். 

உங்களுக்கு இந்த பார்க்கை பற்றிய எதாவது விஷய ஞானம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.   

பின் சேர்கை : -

இது குறித்து நண்பர் கல்வெட்டு  / பலூன் மாமா அவர்கள் தந்த உரலிகள்  






சுட்டியிலுள்ள மின் புத்தகங்கள் யாவும் இலவசம். கட்டணங்கள் எதுவும் இல்லை. 

Tuesday, February 19, 2013

தமிழக அரசின் ஒரு ரூபாய் - ஒரு இட்லி : ஏமாத்து வேலையா ??


கல்லூரி முடித்த பிறவு எனக்கு வேலைக்கு போக எல்லாம் இஷ்டமே இல்லாம இருந்துச்சு, எதாவது பிசினஸ் பண்ணலாம்ங்குற ஐடியா பலமா இருந்ததால ...திருச்சி டவுன் பக்கம் ஒருத்தரு மொத்த இட்லி வியாபாரம் பண்ணுறதை கேள்வி பட்டு, அதே மாதிரி திருவெறும்பூர் பக்கமும் செய்யலாம்ன்னு அவரை பார்க்க போனேன் 2004 வாக்குல.

மொத்த இட்லி வியாபாரம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு ஓட்டலுக்கோ / நிகழ்வுக்கோ மொத்தமா இட்லி தயார் செய்து குடுப்பது. மொத்த விலை என்று இல்லாமல் சில்லறை விலை தான். 

அதாவது அப்பொழுது நான் பார்க்க போயிருந்த மனிதர் ஒரு இட்லியை ரூ.1.25 பைசாவிற்கு விற்று கொண்டிருந்தார் 2004 ல். அங்கு நானும் என் நண்பனும் சாம்பிளுக்காக இரண்டு இட்லி சாப்பிட்டு பார்த்தோம். அவ்வளவு தரம் ..அவ்வளவு சுவை. அற்புதமா இருந்தது.

இதையெல்லாம் ஏன் இப்பொழுது சொல்லுகிறேன் என்றால், புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டில் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை இன்று திறந்து வைக்கிறார். அதில் ஒரு இட்லி ஒரு ரூபாயாம். :))))

2004 லையே நல்ல தரமான சுவையான அடர்த்தியான இட்லியை  அந்த மனிதரால் ரூ.1.25 பைசாவுக்கு விற்க முடிந்தது. விலைவாசி அதிகமுள்ள 2013 ல் தமிழக அரசால் எப்படி ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு தர முடிகிறது என்று தான் தெரியவில்லை. 

விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். 

பாலியல் வன்முறை - ஆண்மை நீக்கம்



பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடுபவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய பட வேண்டும் என்று பரவலாக கருத்து சொல்லுறாங்க. சந்தோசம். ஆனா அந்த மாதிரி பாலியல் வன்முறை செய்றவன் கல்யாணமானவனா இருந்தா, அவனோட ஆண்மைல அவனோட மனைவிக்கும்  பங்கு / உரிமை இருக்குல. 

அப்படி பாலியல் வன்முறைல ஈடுபட்ட கல்யாணமான ஒருத்தனுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவனது மனைவி இடம் அனுமதி கேட்பார்களா ??? கணவன் செய்த குற்றத்துக்காக மனைவிக்கு அவன் மூலம் கிடைக்கும் உடலுறவு இன்பங்கள் மறுக்க பட வேண்டுமா ??? அவள் என்ன பாவம் செய்தாள் ???

முக்கியமா நான் கேள்வி பட்ட வரைக்கும் ஆண்மை நீக்கம் என்பது குடும்ப கட்டுப்பாடு மாதிரி இல்லை. 

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் இந்த ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தால் பல சமூக சீர்கேடுகள் கிளை போல் வருமே, அதற்கு எல்லாம் அரசு பொறுப்பு ஏற்குமா ???

ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தை சரி / தவறு என்று எல்லாம் நான் பேசவில்லை... அப்படி பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு ரூம்ல கம்ப்யூட்டர் முன்னாடி உட்கரந்துகிட்டு எங்கையோ நடந்த குற்றத்தை பற்றியும், அதனால் பாதிக்க பட்ட மனிதர்களை பற்றியும் பேசுறது நியாயம் இல்லை. 

பாலியல் குற்றதுல ஈடுபட்டவன் கல்யாணம் ஆகாதவனா இருந்த ஒன்னும் பிரச்சனை இல்லை, கல்யாணம் ஆனவன் என்றால் .... இந்த தீர்ப்பினால் பாதிக்க பட போகும் அவனது மனைவியை பற்றியும் யோசிக்க வேண்டும்ன்னு தோணுது. அதுக்குன்னு கல்யாணம் ஆனவங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய கூடாதுன்னும் சொல்ல முடியல. 

ஒரு வேளை பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் தான் தீர்ப்பு என்று முடிவானால், அது எல்லா பக்க நியாயங்களையும் யோசித்து எடுக்க பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.  

Saturday, February 16, 2013

போலீஸ் மாமாவும் இன்சூரன்ஸும்


இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பைக்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்குறப்ப, ரோடு ல வைச்சு போலீஸ்காரங்க மடக்குனாங்க. கான்ஸ்டபிள் ரோட்டு நடுவுல நின்னு கவட்டைய விரிச்சு ..அங்குட்டும் இங்குட்டும் போயி வித்தை காட்டிகிட்டு இருந்ததால, லேசா தடுமாறினேன். அதனால பைக்க நிறுத்தின்ன பிறவு அவர் வந்து 

"ஏன் டிரிங்க்ஸ் பண்ணி இருக்கியா" ன்னுன்னாரு 

உடனே நம்ம மூஞ்சிய பார்த்த விஜய மல்லய்யாவுக்கு தூரத்து சொந்தம்ன்னு நினைச்சுட்டாரோன்னு சந்தேகம் எனக்கு தோணுறதுகுள்ள .....

"பைக்க ஓரமா நிறுத்திட்டு ...எஸ்ஐ கிட்ட போய் லைசென்ஸ் காட்டு"

சரின்னு அவர்கிட்ட போனப்ப வழக்கமான கேள்விகளை கேட்ட பிறவும் என்னைய விடுற மாதிரி தெரியல.

"எங்க வேலை பார்க்குற"ன்னு கேட்டாரு 

கொம்பனி பெயர சொல்லிட்டு, டார்கெட் பத்திய கவலைல "ஸார் நம்ம கிட்டக்க ஒரு அருமையான பாலிசி இருக்கு ..மாசமாசம் மூவாயிர ரூவா தான் சார் ...."...சத்தியமா எதார்த்தமா தான் பதார்த்தம் சுட்டேன். 

ரொம்ப அனுபவ பட்டு இருப்பார் போல, பீதில பேதி வந்த மாதிரி "சரி சரி...வீடு இங்கதானே சொன்ன..போ  போ"ன்னு விரட்டாத குறையா அனுப்பி வைச்சுட்டாரு. 

அந்த நேரத்துல பாஸ் போன் கால் பண்ணினாரு, கோத்து விடலாமான்னு யோசனை வந்துச்சு.... திங்கள் காலை ஆபீஸ் போகணும்ங்குற மரண பயத்துல அந்த ஐடியாவை விட்டுட்டேன்.     

ம்ம்ம் இன்சூரன்ஸ் விக்குறதுல கூட நன்மை இருக்க தான் செய்யுது :))))

Thursday, February 7, 2013

மட்டராசு - மதிராசு - மதராசபட்டினம் (கூகிள் பிளஸ் பதிவும் பின்னூட்டங்களும்)


கூகிள் பிளஸ் பதிவு



ஒரு நூறு வருடங்கள் முன்பு சென்னை மதராஸாக இருந்த காலத்தில், பேச்சு வழக்கில் அதற்க்கு இருந்த பெயர்களை கேட்க ஆச்சரியமாய் இருக்கிறது. 

1. மட்டராஸு / மட்டராசு 
2. மதிராசு 


தற்பொழுது படித்து கொண்டிருக்கும் புத்தகத்தில் படித்த வரைக்கும் கண்ணில் பட்டவை. இது குறித்து என் அண்ணனிடம் சொன்ன பொழுது அவன் மதராசபட்டினம் ("ச" இல்லை "ஸ" என்று தான் இருந்ததாம் பழைய "ன" இருந்த காலத்தில்) என்பதை மதிராஸபாளையம் என்று கூட சொல்லுவார்கள் என்று சொன்னான். அந்த பெயர் தமார்ல சென்னப்ப நாயக்கர்  பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சொன்னான். 

என் சந்தேகம் என்னவென்றால் பாளையம் என்ற பெயர் பாளைய முறை இருந்ததால் வந்திருக்கலாம் அல்லவா ??? பாளையம் என்றால் யார் இந்த பகுதியை ஆண்டு இருப்பார்கள் ?? அந்த பாளையத்தை ஆண்டவர்கள் தான் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த ஏகப்பட்ட ஏரிகளை  அமைதவர்களா ??? 

கொஞ்சமான எனது தேடலில் சரித்திர குறிப்புகளில் மதகரி நாயகர் மற்றும் சென்னப்ப நாயகர் என்ற பெயர்கள் சென்னை சரித்திரத்துக்கு நெருக்கமாய் வருகிறது. இத்தனை ஏரிகள் இருந்ததால் ஒரு வேளை தற்பொழுதுள்ள சென்னை மாநகருக்கு வளமான சரித்திரம் இருக்குமோ ??


விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். 

= = = 
கூகிள் பிளஸில் இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் :- 

திரு. ராஜா சங்கர் - 

1.மதராசபட்டினம் என ஒரு நூல் இருக்கிறது எழுதியவர் நரசய்யா. அதிலே ஒருவேளை நீங்கள் தேடுவது இருக்கலாம்.

+Raja sankar என்னிடம்  இருக்கிறது ...ஆனால் விலாவரி தன்மை சந்தேகம் தான் 

2.இதெல்லாம் தனித்தனி கிராமமா இருந்தது. சேத்து நரகம் ஆக்கினா இப்படித்தான் இருக்கும்

என் ஊர் புரம் என முடியும். பக்கத்துல நாலு பாளையம், இரண்டு ஊர், இரண்டு துறை. ஆறோ ஏரியோ பக்கத்துல இல்லாததால அதெல்லாம் இல்லை.

பாளையம் கொஞ்சம் சின்ன கிராமம். ஊர் கொஞ்சம் பெரிசு. புரம் அதுக்கும் கொஞ்சம் பெரிசு. பேட்டையா பேட் ஆ அப்படீன்னு ஒரு சந்தேகம் உண்டு. சைதாபேட் சேத்துபேட் அப்படீன்னுதான் உண்டு என நினைக்கறேன். அப்புறம் அது பேட்டை ஆயிருக்கலாம்.

வாக்கம் அப்படின்னா பக்கத்துல குளமோ, ஏரியோ இருக்கனும். பாக்கம் மீனவர் குடியிருப்பா இருந்திருக்கனும்.

இப்படி யோசிங்க. ஈரோடு இல் கோயமுத்தூர் வரைக்கும் 100 கிலோமீட்டருக்கு ஒரே நகரமா இருந்தா??? கூடுவாஞ்சேரியில் இருந்து எண்ணூர் வரைக்கும் அப்படித்தான் இருக்கு.

மதுரையை பெரிய கிராமம் என சொல்லுவாங்க. இது அது மாதிரி இருந்து நரகமா மாறினது.


மேவி .. 3. முழு சரித்திரம் கொஞ்சம் கஷ்டங்க. திருவொற்றியூர் அந்த காலத்துல பெரும் இடமா இருந்திருக்கு. ஆதிசங்கர், சுந்தரர், தியாகராஜர் என பலரும் வந்த இடம், பாண்டிய மன்னர் கட்டிய கோயில் படம் பக்கநாதர் கோயில்.  இன்னைக்கு அவுட்டர் சென்னை.

இன்னைக்கு கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்திலே சமண கோயிலும் பவுத்த விகாரையும் இருந்திருக்கலாம் என ஊகிக்கிறார்கள். ஏன்னா கடற்கரைக்கு பக்கத்துல சமண கோயில் இருந்ததா பாட்டு இருக்கு. மயிலாப்பூர் கபாலீசுவர் கோயிலே கடற்கரை பக்கம் இருந்து அப்புறம் உள்ளே கொண்டுவந்து வைச்சு ஊரை உருவாக்கினாங்க எனவும் ஒரு கருத்து உண்டு.

இப்போ இருக்கும் கோட்டையை கட்டும் முன் பலதையும் இடிச்சிருக்காங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.

என்ன பிரச்சினை அப்படீன்னா நம்மோட வரலாறு மூவாயிரம் நாலாயிரம் வருட வரலாறு. அதுவும் தொடர்ச்சியா. எதை எங்க இருந்து கண்டுபிடிச்சு எப்படி எழுத???

4.ராசேந்திரன் காலத்திய சோழர்களின் கடற்படை இங்கதான் இருந்ததாவும் சொல்றாங்க. பிச்சாவரம், கோவளம் பகுதிகள் அப்போதைய வன்னிய குறுநில அரசர்களின் கையில் இருந்ததாகவும் அவர்கள் சோழர்களுக்கு உதவி செஞ்சு கோழகோன் பட்டம் பெற்றதாகவும் சொல்றாங்க.


நமக்கு தெரிஞ்ச வரலாறு நாயக்க பாளையக்காரர்கள் ஆண்டது தான். இன்னும் சொல்லிட்டே போகலாம் ஆனால் முழுசுமா எழுத பலர் பல்லாண்டுகள் உழைப்பு போடனும்.


"+Raja sankar அதே தான் நண்பா .....

என்னொன்று திருச்சிக்கு பிறவு சென்னை தான் என் வாழ்வில் முக்கிய பங்கு. அதான் முயல்கிறேன் தெரிந்து கொள்ள. 

பிறவு முக்கியமாக பல்லவ சாம்ராஜ்யம் தமிழகத்தில் அமைய சென்னை முக்கிய காரணி என்று, களப்பிரர் மூலம் சென்னை என்று கேள்வி பட்டிருக்கிறேன். 

எழுத்தில் எதுவும் இல்லை, வாய் வழி தகவல்களை ஓன்று திரட்டி முழுமையான சென்னையின் சரித்திர உருவத்தை காண ஆசை படுகிறேன்"

5.நண்பரே, உங்கள் ஆசை எனக்கு புரிகிறது. நாம் தான் முயற்சி எடுக்கவேண்டும், ரீச் பவுண்டேன் கேள்விப்பட்டிருப்பீர்கள் சென்னையில் வரலாற்று இடங்களை ஆராய பதிய பல முயற்சிகள் எடுக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இணையலாம்.

தென்னிந்திய வரலாற்று மையத்தின் ஆய்வாளர் திரு ராமச்சந்திரன் அவர்கள் சென்னை பற்றி பல தகவல்கள் அறிந்தவர். இப்படி பலர் உண்டு ஆனால் ஒருமுகப்படுத்திய ஆவணப்படுத்துதல் இது வரை இல்லை என்பது தான் சோகம்.

திரு. வாசு பாலாஜி : -

இந்த மாதிரி சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனா இப்ப மாதிரியே அப்பவும் கலந்தாங்கட்டியா இருந்திருக்கும் போல இருக்கு.

கொச,கொலகாரன்,நம்மாழ்வார்,வண்ணார்,சௌகார்,கண்ணம்மா,புது,தண்டையார், சைதா (பேட்டைகள்)
மயிலாப்பூர்,பெரம்பூர்(ஊர்),கொரட்டூர்
புரச,வில்லி,வளசர,மேட (வாக்கங்கள்)
அயன்,ராய புரங்கள்
கீழ்ப்பாக்கம், நெசப்பாக்கம்,அரும்பாக்கம்
மேட்டுப் பாளையம், பெரிய பாளையம்,


எதுனா ஒரு அமைப்பா இதுக்கடுத்து அதுன்னு இருக்கான்னு பார்த்தா இல்லை. ராயபுரம் தாண்டுனா தண்டையார் பேட்டை. பெரம்பூருக்கு உள்ளாற ஒரு மேட்டுப் பாளையம், தாண்டி பெரிய பாளையம். அயன்புரம் தாண்டுனா வில்லிவாக்கம்.அதுக்கடுத்து ஒரு ஊர்னு தல சுத்துது:))

Sunday, January 13, 2013

இலக்கியபீடம்


ரொம்ப டென்ஷனாகி போன வாரத்தில் ஒரு நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு தாம்பரம் சண்முகம் தெருவுல சுத்திகிட்டு இருந்தேன். அப்ப இருந்த அரசு நூலகத்துக்குள்ள போய் கலீல் ஜிப்ரானோட மிட்டாய் கதைகள் படிச்சு முடிச்ச நேரம் கரண்ட் அம்ருதாஞ்சன் விளம்பரத்துல வர மாதிரி போயே போச்சு. அந்த நேரம் சுஜாதா நாவல் ல வர மாதிரி விதி எங்கனையோ பக்கத்துல குத்துகால் போட்டு உட்கார்ந்து சிரிச்சு இருக்கும். இல்லாட்டி அந்த விபத்து  நடந்திருக்குமா ???? 

கரண்ட் இல்லையேன்னு வெளிச்சம் இருந்த பத்திரிக்கைகள் பிரிவுக்கு வந்தப்ப ஒரு பத்திரிக்கை அனாதையா இருந்துச்சு .... சரின்னு அதுக்கு ஆதரவு தருவோமேன்னு பிரிச்சு படிக்க ஆரம்பிச்சேன். இலக்கியபீடம் ...அது எனக்கு பலிபீடமாகிருச்சு. 

எடுத்த உடனே கண்ணுல பட்டது சென்னிமலை தண்டபாணி எழுதின  "உனக்கான சில கஜல்கள்" கவிதை. கஜல்ன்ன உடனே எனக்கு அடிபட்ட மாதிரி திறந்த வாய மூடாம பாடுறது தான் ஞாபகம் வந்துச்சு. எனக்கு கஜோல் தான் இல்லாம போயிச்சு அட்லீஸ்ட் கஜலாச்சு இருக்கட்டுமேன்னு படிச்சேன். எடுத்த உடனே "காயா ...பழமா ... தெரியவில்லை .... இது /(ஒன்னு கீழ் ஒன்னு)/ காதல் தானா புரியவில்லை ...." ஆரம்பிச்சாரு. ஆணியே புடுங்க வேண்டாம்ன்னுட்டு வேற பக்கம் திருப்பினேன். 

வாழ்க்கைல எத்தனை வாட்டி திருப்பம் வந்தாலும் அது திரும்பி திரும்பி திருப்பி திருப்பி வந்துகிட்டும் போயிகிட்டும் தான் இருக்கும். (நான் எழுதுறதுல கருத்து எதுவும் இல்லைன்னு நிறைய புகார் வருது ..ஸோ மீ தி கருத்து டெல்லிங்)  

சண்டேசுவரர் (சன்டே ல சுவர் பக்கம் நின்னுகிட்டு இருந்த சாமி போல) ன்னு மு.நளினி & இரா.கலைக்கோவன் ன்னுனவங்க பழைமையான சிற்ப்பங்கள் பத்தி எழுதிருந்தாங்க போல ...பல கொட்டாவிகளுக்கு நடுவுல படிக்க முடியல சரியா. 

வேறொரு பக்கத்துல "மறக்க முடியுமா ?"ன்னு ஒரு கட்டுரை ...ஏதோ  ஞாபக மறதி அதிகமான என்னை அவமதிக்குற மாதிரி இருந்தால அதைய லூஸ்ல விட்டுட்டேன். சரின்னு ஏகபட்ட மன போராட்டங்களோடு ( அப்புடி என்ன மன போராட்டம்ன்னு யூ பிப்பிள் ஆஸ்கிங்கா... வெளில போன பிறவு என்ன சாப்பிடுறதுன்னு தான்.. பானி பூரி தான் என்னோட சாய்ஸா இருந்துச்சு ...ஆனா தாகி பூரி சாப்பிடணும்ன்னு ஒரு சின்ன சபலம்)  வேற பக்கத்தை திருப்பினேன். 

அந்த பக்கத்துல "கலைமாமணி விக்கிரமனின் இரட்டை வரலாற்றுப் புதினங்கள் - ஓர் இன்னுரை"ன்னுட்டு     பேராசிரியர் இரா.சோதிவாணன் எழுதி இருந்தாரு. எடுத்த உடனே ஜிலேபி சுத்த ஆரம்பிச்சாரு. பானி பூரி ஞாபகம் வந்து போச்சு. அதைய படிச்சுட்டு வேற பக்கத்துக்கு போனேன்.   

இந்த பத்திரிக்கையோட மெயின் அட்ராக்ஷன் அது தான்னு புரிஞ்சது. லா.ச.ரா. துணைவியாரின் நினைவுக்குறிப்பு. படிக்க வேண்டியது. இதே மாதிரி இன்னொரு அட்ராக்ஷன்னு எனக்கு பட்டது ஜனகன் எழுதின / எழுதிகிட்டு இருக்குற குறும்படங்களும் டெலி பிலிம்களும்". எனக்கு பிடிச்சு இருந்துச்சு. 

இத்தோட வெப்பன் சப்ளையர் யாருன்னு பார்த்த விக்கிரமன் / ராஜேந்திரகுமார்ன்னு போட்டிருந்துச்சு. 

இதற்குள் கரண்ட் வந்துறவே "திருமுருகாற்றுப்படை" இருக்கான்னு உள்ளர தேடி போயிட்டேன். 
Related Posts with Thumbnails