Pages

Monday, May 1, 2023

பொன்னியின் செல்வன் : நாவலும் திரைப்படமும்

மணிரத்னம் எடுத்த பொன்னியின் செல்வன் திரைபடம் ஏன் நாவலை போல் இல்லை என பலர் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். 

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பம்சமே நந்தினி கதாப்பாத்திரத்தின் பின்னணியில் இருக்கும் குழப்பங்களும், பிறகு அத்தனை அரசியல் சூழ்ச்சியை தாண்டி பிறப்பில் இருந்து மிகவும் கஷ்டபட்டு வளர்ந்து, தான் உண்டு தான்  வேலை உண்டு என இருக்கும் சேந்தன் அமுதனுக்கு ராஜ்ஜியத்தை மணிமகுடத்தை போர்கள் பல வென்று அரசனுக்குரிய எல்லா தகுதிகளையும் கொண்ட அருள்மொழிவர்மன் நியாயத்தின் பாதையில் நின்று தருவது தான். 

நாவலை முதன் முதலில் பதின்ம வயதில் படிப்போர் பலரும் அந்த தியாகத்தில் நெகிழ்ந்து போய் அருள்மொழிவர்மனை கொண்டாடுவார்கள். மிக பெரிய திருப்பமாக அது இருக்கும். 

இதற்கு எல்லாம் முன்பாக சோழ அரசாட்சி எல்லாம் எத்தையக பெருமை வாய்ந்தது, அத்தனை பெரிய சோழ ராஜ்ஜியத்தை கட்டமைக்கப்பட்ட கதை என எல்லாவற்றையும் கல்கி முதலேயே நமக்கு படம் போல் கதை போகிற போக்கில் சொல்லி விடுவார். அதையெல்லாம் படித்துவிட்டு அப்பேர்ப்பட்ட சோழ மணிமகுடத்திற்கு ராஜ்ஜியத்திற்கு ஆபத்தா என பதைபதைப்புடன் நாவலை வாசிக்க வைக்கும். 

மேலும் கல்கியின் வார்த்தை பிரயோகம், எழுத்துநடை அப்படியே கட்டி போட்டுவிடும். மேலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணநலன்கள் பற்றிய விவரிப்பு மேலும் கதைக்குள் நம்மை கொண்டு போய் விடும்.

திரைப்படத்தில் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால் நாவல் தந்த உணர்வை திரைப்படம் தந்திருக்கிறதா என்பது தான் கேள்வி. 

சேந்தன் அமுதன் விரும்பி திருமணம் செய்து கொள்கிற பூங்குழலி ஆகிய இரு கதாப்பாத்திரங்களும் கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அந்த கதாப்பாத்திரங்களை தயிர் சாதத்திற்கு வைக்க படும் அப்பளத்தை போல் கையாள பட்டுகிறது. 

நாவலில் வருது போல் எடுக்க போவது இல்லை, அதனை தழுவி எனது போக்கில் படம் எடுக்க போகிறேன் என்று மணிரத்னம் அவர்கள் முன்பே சொல்லி இருந்தால் எந்தவித பிரச்சனையும் வந்திருக்காது. வெக்கை நாவலை தழுவி அசுரன் படத்தை வெற்றிமாறன் எடுத்தது போல். 

ஆங்கில திரைப்படங்களில்  நாவலின் கதாப்பாத்திரங்களை மட்டும் எடுத்து கொண்டு அவர்களது வசதிக்கேற்ப புது கதை ஒன்றை உருவாக்கி கொள்வார்கள். அப்படியாவது செய்திருக்கலாம். அப்படி செய்தால் வணிகம் பாதிக்கும் என்று செய்யவில்லையோ ?

காலை சிற்றுண்டிக்கு வடை செய்கிறேன், நெய் மசாலா தோசை செய்கிறேன், இரண்டு வகை சட்னி மற்றும் வடைகறி செய்கிறேன் என வீட்டில் காலையில் எழுந்ததும் சொல்கிறார்கள். நீங்களும் அதே நினைப்பில் சொல்லபடுகிற எல்லா வேலைகளும் செய்து விட்டு, உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து விட்டு பசியோடு வந்தால், சாப்பிட தட்டில் உப்புமா வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மணி சார் செய்திருப்பது.

#பொன்னியின்செல்வன்2
#ps2movie 
#PonniyinSelvan2 
#மணிரத்னம்

Saturday, April 22, 2023

கொற்கை : மதுரை : சமணர் கழுவேற்றம் : பாண்டிய நாடு - அத்தியாயம் 4


"மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு...." என்கிற இப்பாடலை சிவ வழிபாட்டு முறையை கொண்ட குடும்பத்தில் பிறந்த எல்லோரும் கேட்டு இருப்பார்கள். சிறுவயதில் என் அப்பா எனக்கு திருநீறு அணியும் பொழுது பாடுவார். (ஆம் அதனை திருநீறு அணிதல் என்று தான் கூற வேண்டும்)

நெற்றி முழுவதும் திருநீறு அணிவதை உத்தூளனம் என்று சொல்ல படுகிறது. இந்த உத்தூளனம் முறை இந்தியாவின் மற்ற இடங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் பரவலாக பின்பற்ற படுகிறது. இதற்கும் பழங்கால வணிகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இதற்கு நாம் 10ஆம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஷாம்பெயின் சந்தையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதனை படிக்கும் முன் பிரான்ஸ்  நாடு ஒரு காலத்தில் ரோம் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததை ஞாபக படுத்திகொள்ள வேண்டும். 

(சரி அதென்ன ஷாம்பெயின் சந்தை.... பின்னர் பார்க்கலாம்)

12ஆம் நூற்றாண்டு மற்றும் 13ஆம் நூற்றாண்டின் கால குறிப்பின் படி இச்சந்தையில் அதிகம் விற்ற பொருட்களில் ஒன்றாக இருந்தவை ஜவுளி, மசாலா மற்றும் தோல் பொருட்கள். இவற்றில் தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து அதிகம் ஏற்றுமதியானவை எதுவென்று பார்த்தால் அவை ஜவுளி, மசாலா, கரும்பு சக்கரை மற்றும் உப்பு.

தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகமாக இருந்தது கொற்கை துறைமுகம் தான். இந்த கொற்கை துறைமுகம் பாண்டிய ராஜ்ஜியத்தின் தலைமை நகரமாக இருந்தது. இங்கு தான் பாண்டிய நாடு முடி இளவரசன் தங்கி வணிக தொடர்புகளை கவனித்து கொள்ளவார். வேறு யாரையும் நம்பி அப்பொறுப்பை பாண்டி நாட்டு ராஜ்ஜியம் வழங்கியது இல்லை. 

பழங்கால ரோமானிய கடல் வணிக வரைபடத்தில் கொற்கை துறைமுகமும் பாண்டிய நாட்டு பெயர்கள் தான் முக்கியமாக அடையாளம் காட்ட படுகிறது. சேர நாட்டு பெயர் அடைப்புக்குறிக்குள் தான் இருக்கிறது. 

பாண்டி நாட்டிற்கு அதிக வணிகத்தையும் அதன் மூலம் வரி பணத்தையும் தந்து கொண்டு இருந்தது.

(பார்க்க படம் இணைத்திருக்கிறேன்)

இப்பொழுது 7ஆம் நூற்றாண்டுக்கு செல்வோம்.

பாண்டியர்களளவிற்கு சோழர்கள் பெரிய ராஜ்ஜியகாரர்களாக இல்லை. பாண்டிய நாட்டை சைவத்தில் இருந்து சமணத்திற்கு மாறிய கூன் பாண்டியன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.  

அப்பொழுது நம் தொடரில் வர போகிறவர்கள் வேறு யார் சமணத்தை பின்பற்றியவர்கள் என பார்த்தால் ஹொய்சள ஆட்சியாளர்கள் தான். 

சமணத்தை ஆதரித்து கொண்டு இருந்த கூன் பாண்டியன் ராஜ்ஜியத்தின் கீழ் தான் உலக கடல் வணிகத்தின் மையமான கொற்கை துறைமுகம் இருந்தது. 

இவ்வேளையில் தான் சோழ நாட்டில் பிறந்த  திருஞானசம்பந்தர் தீராநோய் உடன் போராடி கொண்டு இருந்த கூன் பாண்டியனை சந்திக்கிறார். சமண சமயத்தவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அரசனது நோயை சம்பந்தர் குணமாக்கிவிட்டால் சமணர்கள் அவர்களது உயிரை மாய்த்துகொள்ள வேண்டும் என முடிவாகிறது. 

அதன்படி சைவ அமைப்பின் மருத்துவமுறையில் உடல்நிலையில் முன்னேற்றமடைகிறது.  அப்பொழுது ஒவ்வொரு முறையும் சமபந்தர் சிறப்பு சிவ பூஜை செய்கிறார்கள்.

கூன் பாண்டியனது உடல்நிலை முற்றிலும் குணமாகிவிட்ட பின் திருநீற்று பதிகம் பாடி பூஜையில் வைக்கபட்ட திருநீற்றை கின் பாண்டியனது உடல் முழுக்க அணிவிக்கிறார்.(இது மட்டுமே குறிப்பில் கிடைக்கிறது. பூஜை, சைவ மருத்துவம் எல்லாம் செவிவழி செய்தி)

இடையில் சமணர்கள் திருஞானசம்பந்தர் சோழ நாட்டு உளவாளி, அவரை நம்ப வேண்டுமென சொல்கிறார்கள். 

சமணர் கழுவேற்றம். ஒரு சமணரும் மிச்சமில்லாமல் எல்லோரும் கழுவேற்ற பட்டனர்.

9ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து பாண்டியர்கள் வெளியேற்ற பட்டனர்.

10ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தை பின்பற்றிய சோழர்கள் தஞ்சாவூரை தலைமையிலான ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். ஆதி சோழர்களது தலைநகரம் திருச்சிராப்பள்ளி தான். ஆனால் அதனை தவிர்த்து தஞ்சாவூரில் தலைமை இடத்தை ஏன் சோழர்கள் அமைக்க வேண்டும்.

திருச்சிராப்பள்ளி சமண பள்ளிகளுக்கு அக்காலத்தில் புகழ்பெற்றது.

21ஆம் நுற்றாண்டிற்கு வருவோம். 

பிரதான் மந்திரி காத்திஷக்தி மாஸ்டர் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மப்பேடில்  தளவாடங்கள் பூங்கா  ஒன்றை ரிலையன்ஸ்   நிறுவனம் தொடங்க போகிறதாம். இதன் மூலம் வான்வழி, தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள போகிறதாம். புதிதாக அமைக்கபட போகும் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த பூங்கா. 

இந்த இடத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலில் தான் அந்த புகழ்பெற்ற வைணவ விவாதம் நடந்ததாக கூறபடுகிறது. 

8ஆம் நுற்றாண்டில் இன்றைய ஆந்திர பிரதேசத்தில் நடத்த ஒரு வணிக செயல்பாடு  முக்கியமான இந்துமத கோவில் உருவாக காரணமாக இருக்குமோ.

அதென்ன செயல்பாடு , அதென்ன கோவில் ?

தொடரும்...

#indianbusinessseries
#cholargal 
#RelianceIndustries 
#hinduism 
#Seasilkroute
#rajarajacholan 
#PonniyinSelvan2 
#PS2
#KORKAI
#Pandiyan

Monday, April 17, 2023

போர்கள் : வணிகம் : மதம் : சோழர்கள் - அத்தியாயம் 3


ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க பல காரணங்கள் இருக்கிறது, அதில் முக்கிய காரணம் அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க தான் என பலரால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக பாட திட்டத்தில் நாடோடி மன்னர்களான தைமூர், செங்கிஸ் கான் ஆகியோரது வெறிதனமான செயல்களை படித்ததினால் தான். 

ஆனால் வெற்றிவேல் வீரவேல் என சொல்லி கொண்டு நிலையான ஒரு நாட்டின் மன்னனால் அப்படி சாதாரணமாக போர் தொடுத்துவிட முடியாது. முக்கிய காரணம் அதற்கான செலவு.

ஆயுதம் தயாரிப்பது, நாட்டின் உள்ளோர் மற்றும் வீரர்களுக்கான உணவு, பாதுகாப்பு ஆகிய செலவுகள் எல்லாம் கணக்கில் கொண்டு தான் ஒரு போர் தொடுப்பதை பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்க முடியும். ஒரு அரசன் படையெடுத்து நமது நாட்டை நோக்கி வருகிறான் என்றால், அந்நாட்டின் செல்வங்களை தான் முதலில் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைப்பார்கள். படையெடுத்து வரும் அரசனுக்கு கொள்ளையடிப்பது மட்டும் தான் லட்சியம் என்றால், அப்படையெடுப்பில் பெரிய லாபம் இருக்காது.

செல்வங்களை தவிர்த்து ஒரு நாட்டின் வணிக வளமே அந்நாட்டின் மீது படையெடுப்பை பற்றி தீர்மானிக்க முக்கிய காரணியாக அமைகிறது.

அக்காலத்தில் கடல் பட்டுவழி சாலை வழியை பார்த்தால் அது அரேபிய தேசத்தில் இருந்து காயல்பட்டினம் (இன்றைய கன்னியாகுமரி) வந்து அங்கிருந்து ஸ்ரீலங்காவின் (அன்றைய சிலோன்) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வழியாக கலிங்க நாட்டு துறைமுகத்திற்கு (இன்றைய புரி துறைமுகம்) செல்லும்.

கலிங்க நாட்டில் இருந்து தான் ஜாவா, மலாய், சுமத்திரா, ஸ்ரீவிஜயம் ஆகிய நாட்டுகளுக்கு வணிக கப்பல்கள் செல்லும். 

சோழர்கள் போர்களில் ஈழத்து போர், கலிங்க போர் முக்கியமானதாக கருதுவேன். கலிங்க நாட்டு போரில் நடந்தவற்றை 12ஆம் நூற்றாண்டின் பரணி வகை நூலான கலிங்கத்துப்பரணி நூலில் ஒட்டக்கூத்தர் மற்றும் செயங்கொண்டார் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். 

முதலாம் கலிங்கத்துப்பரணி பாடல்கள் முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் தென் கலிங்க மன்னன் வீமனை வென்றதை பாடுகிறது. இரண்டாம்   கலிங்கத்துப்பரணி முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் கருணாகர தொண்டைமான் கலிங்க போரில் வென்றதை பேசும். 

கருணாகர தொண்டைமான் என்ற பெயரை கேட்டதும் சரித்திர நாவல் பிரியர்களுக்கு ஆனந்தம் பொங்கி இருக்கும். சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா நாவலில் தலைமை கதாபாத்திரமாக வருவார்.

இந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் சைவமா வைணமா சண்டை வலுப்பெற்றது. 

சமண மதத்தில் இருந்து மன்னர்களை சைவ சமயம் பக்கம் கொண்டு வந்தார்கள் அப்பொழுது இருந்த  தீவிர சைவ துறவிகள்.  அதற்கு சாட்சியாக இந்நாளும் பலரால் பட பெறும் ஒரு பாடல் .

அந்த பாடல் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு....".

இது யாரால் எதனால் பாட பெற்றது ? அதில் பின்னால் என்ன வணிக செயல்பாடு இருந்திருக்கும் ?

இப்பொழுது 12ஆம் நூற்றாண்டின் சோழர்களின் போர் பக்கம் இருந்து 19ஆம் நூற்றாண்டிற்கு வருவோம்.

திருபாய் அம்பானி செயதது போல் ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர் 1868ல் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். பிறகு 1874ல் ஒரு ஜவுளி நிறுவனத்தை ஆரம்பித்தார்.

ஜவுளியும் சோழர்களின் காலத்தில் முக்கிய வணிக பொருளாக இருந்தது. மஸ்லின் துணிக்கும் சோழர்களுக்கும் சம்பந்தம் இருக்குமா ?

திருப்பதிக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்கும் ?

கடல் பட்டுவழி சாலையில் அந்த வைணவ பெரியவரின் பங்கு என்னவாக இருந்திருக்கும் ?

தொடரும்

#indianbusinessseries
#rajarajacholan 
#rajendracholan 
#Srilanka
#dhirubhaiambani

சோழர்களின் வணிக ராஜ்ஜியம் / BACKWARD INTEGRATION - ரிலையன்ஸ் - அத்தியாயம் 2

இந்தியாவின் நவீன வணிக போக்கில் வெற்றி பெற்ற நிறுவனங்களில் முக்கியமானது திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கதை.  அவர் அவ்வாறான மிக பெரிய வணிக ராஜ்ஜியத்தை அமைக்க காரணமாக இருந்தது BACKWARD INTEGRATION என்கிற முறையில் அவர் தொழிலை மற்றும் அதனை சார்ந்த வியாபாரத்தை விருத்தி செய்தது தான். 

அதென்ன Backward Integration ?

அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

1950கள் - அம்பானி அவர்கள் ஜவுளி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக துணி வாங்கி அதனை தேவைக்கேற்றது போல அல்லது வியாபார வாய்ப்புகள் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். வெளிநாட்டு துணி வகைகளையும் இங்கு விற்பனைக்காக இறக்குமதி செய்தார்.

1960கள் - அம்பானி அவர்கள் என்னதான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்தாலும் உற்பத்தியாளர்கள் தான் அதிக லாபமடைந்தார்கள். அவர்களுக்கு அம்பானி சம்பளம் வாங்காமல் வேலை செய்து போல உணர்ந்தார். இந்நிலையை மாற்ற மிக பெரிய முடிவினை எடுத்தார். அது வரைக்கும் இந்தியாவில் செயல்படும் ஏற்றுமதியாளர்கள் யாராவது அப்படிபட்ட துணிச்சலான முடிவை எடுத்திருப்பார்களா என தெரியவில்லை. 

உற்பத்தியாளர்களின் கைக்கு போகும் லாபம் தனக்கு வர வேண்டும் என்றால் தானும் ஒரு உற்பத்தியாளராக உருவாக வேண்டும் என முடிவெடுத்து ஜவுளி உற்பத்தியில் ரிலையன்ஸ் நிறுவனம் அடியெடுத்து வைத்தது.

1970கள் - இன்னும் பெரியளவிலான தொழில் செய்ய பங்கு சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் பட்டியலிட பட்டது. 

அதன் பிறகான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு வியாபார யுத்திகள் கையாள பட்டதால் ...

அதென்ன Backward Integration ?

ஒரு தொழிலுக்கு தேவையானவற்றை ஒரு நிறுவனமே தயாரித்து கொள்வது தான் அது. 

இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு  ரிலையன்ஸ் நிறுவனத்தை 1970களில் விட்டு விட்டு ஆயிரம் வருடம் பின்னோக்கி இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்திற்கு போகலாம். 

அக்காலத்தில் பட்டுவழி சாலை என்பது நில வழி மற்றும் கடல் வழி என இரண்டு வழிகள் இருந்தன. 

இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் சோழ தேசம் எனது ஒரு வளம் நிறைந்த தேசமாக உருவாக வேண்டும் என்ற கனவு இருந்தது.

தந்தை அக்கனவை கண்டார், மகன் கனவை செயல்படுத்தி காட்டினார். 

அரேபிய வியாபாரிகள் அக்காலத்தின் உலக வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றினார்கள். (அவர்களை பற்றி தெரிந்ததை வரும் நாட்களில் எழுதுகிறேன்)

அவர்களது முக்கியமான வர்த்தக மையமாக அக்காலத்தில் இந்திய நிலப் பரப்பு இருந்துள்ளது (இந்தியா என்னும் தேசம் அப்பொழுது இல்லை).

இந்தியாவை தாண்டி சீனா, சுமத்திரா,பர்மா, தாய்லாந்து, மலாய் , ஜாவா, வியட்நாம், ஸ்ரீவிஜய ஆகிய நாடுகளில் அவர்களுக்கு வர்த்தகம் இருந்தது. இதற்காக இலங்கை, இந்தியா பர்மா ஆகிய துறைமுகங்களை பயன்படுத்தி வந்தனர். இவற்றில் மூலம் வரிபணம் அதிக அளவின் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கிடைத்து கொண்டு இருந்தது. அவற்றை எல்லாம் ராஜேந்திர சோழன் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.

(இதனை ராஜேந்திர சோழர் காலத்து சோழ ராஜ்ஜிய நிலப்பரப்பையும் கடல் வணிகத்தின் பட்டுவழி சாலையும் ஒப்பிடுகையில் நாம் புரிந்து தெரிந்து கொள்ளலாம்)

இதன் மூலம் கடல் வணிகத்தில் வியாபார கப்பல்கள் நிற்கும் எல்லா முக்கியமான துறைமுகங்களும் சோழ ராஜ்ஜியத்தின் கீழ்  இருந்தது. அவற்றின் மூலம் கிடைத்த வரி பணம் சோழ தேசத்தை வளமான தேசமாக இருந்தது. 

எல்லாம் சரி .... திருபாய் அம்பானி கையாண்ட யுத்தியை பல வருடங்களுக்கு முன்பே வேறொருவர் கையாண்டு பெரும் வெற்றி பெற்று இருந்தார்.

அவர் யார் ?

தொடரும்...

#IndianBusinessSeries
#Reliance 
#dhirubhaiambani 
#Chozhakingdom
#rajarajacholan 
#Rajendracholan

Sunday, March 12, 2023

Indian Cola Wars In Making அத்தியாயம் 1


Indian Cola Wars In Making

1990களில் நடந்தது போல் மீண்டும் ஒரு வணிக போரை இன்னும் கொஞ்ச நாட்களில் பார்க்க போகிறோம்.

சரி அதற்கு முன்பான காலத்தில், 1990களுக்கு முன் 1980கள் வரைக்குமான வணிக சந்தையை எவ்வாறு விளம்பரங்கள் மூலம் கட்டமைக்க பட்டது என்பதை தெளிவாக அம்பி பரமேஸ்வரன் என்பவர் ஒரு புத்தகத்தில் எழுதி இருப்பார். அதாவது ரேடியோ, செய்தி தாள் விளம்பரங்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

உலகமயமாக்கலுக்கு பிறவான காலத்தில் அதிக முதலீடு உடன் சர்வதேச நிறுவங்கள் இந்திய சந்தையில் காலுன்ற, அவைகள் கொடுத்த சந்தையிடுதல் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவங்கள் சர்வதேச நிறுவங்களுக்கு அடிப்பணிந்து போனது,  சில நிறுவங்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்ந்து கொண்டு புதிய யுத்திகளுடன் களம் கண்டு வெற்றி பெற தொடங்கி இருக்கிறார்கள்.

இதில் முக்கிய பங்கு வகிப்பது அதிகவேக நுகரபடும் நுகர்வோர் பொருட்கள். ஆங்கிலத்தில் Fast Moving Consumer Goods சுருக்கமாக FMCG.

உலகமயமாக்கலால் திறந்து விட பட்ட இந்திய சந்தை கதவுகள் வழியே மற்ற துறைகளை விட உணவு துறை நிறுவங்களே வேகமாக வந்தது. அவற்றில் முக்கியமானது பெப்சி, கொகா கோலா நிறுவங்கள் தான். 

இவற்றின் இரண்டுக்கும் இடைய 1980களில் அமெரிக்காவின் நடந்த வியாபார போட்டி மிக பிரபலம்.  நம்மூரின் குழாயடி சண்டை எல்லாம் தோற்று விடுமளவிற்கு போட்டி. இதனை Cola Wars என அழைப்பார்கள். விளம்பர துறையில் இருப்போர்களுக்கு Cola Wars என்பது முக்கிய பாடம். இந்தியாவிலும் நடந்திருக்கிறது ஆனால் பெரியளவில் இல்லை. 

மிக பெரிய நுகர்வு சந்தையாக இருக்கிற அமெரிக்காவின் பல பொருட்களுக்கு இம்மாதிரியான சந்தை போட்டிகள் நடந்திருக்கிறது. 

இப்படியாக இரு நிறுவங்களுக்கும் போட்டி நடக்கையில், அவர்களுக்கு கிடைத்த புதிய சந்தை தான் இந்தியா. இதில் கொகா கோலா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் தொழில் நடந்த்திருக்கிறது. அரசியல் காரணங்களினால் இந்தியாவை விட்டு வெளியேறியது.

பிறகு 1990களில் இந்திய சந்தைக்கு வந்த இரு குளிர்பான நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தை பிரபல படுத்த கையில் எடுத்தது கிரிக்கெட் என்னும் துடுப்பாட்டம் / மட்டைபந்தாட்டத்தை தான். 

காரணம் 1983 உலக கோப்பை வென்ற பின்னர் அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகளுக்கு  நிதி சேகரிக்க பல முயற்சி எடுத்தும் பெரிதாக பலன் இல்லை. இந்த சமயத்தில் தான் 1987 போட்டியை திருபாய் அம்பானி கையில் எடுத்து நடத்தினார். அதன் பின் தான் ரிலையன்ஸ் என்பது தனிபெரும் அடையாளமாக (Brand) உருவானது.

இந்தியர்கள் எல்லாம் கிரிக்கெட் வெறியர்கள் என நன்றாக உணர்ந்து கொண்ட இரு நிறுவனங்களும் பல்வேறு விளம்பர யுத்திகளை கையாண்டது. அதெல்லாம் கோலா போர்களின் தொடர்ச்சியாக தான் இருந்தது. 

அவற்றில் ஒரு அங்கமாக மக்கள் தாக்கமென்றால் தங்களது குளிர்பானம் தான் அவர்களது ஞாபகத்திற்கு வர வேண்டும் என்ற நிலையை கொண்டு வர முயன்றது. ஜந்து ரூபாய்க்கு குளிர்பானம் எல்லாம் அப்பொழுது தான் வந்தது. நான் கல்லூரி படிக்கும் பொழுது கல்லூரி உணவகத்தில் சாப்பாடு வாங்கினால் கூடவே குளிபானம் ஒன்றை வாங்கிவிடுவார்கள். தண்ணீரை விட விலை குறைவு என்பதால். அதே போல் மதிய வேளையில் மட்டும் அங்கு குடிநீர் தீர்ந்து போய்விடும். 

இதெல்லாம் கோலா போரின் தொடர்ச்சி என்பதால் பெரிய சுவாரசியம் இல்லை. 

சுவாரசியம் எல்லாம் இனிமேல் தான். 

பெப்சி - கொகா கோலா ஆகிய நிறுவனங்களின் லாபத்தை பார்த்துவிட்டு பல புது நிறுவனங்கள் தங்களது புதிய குளிர்பானங்களை சந்தை படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

1970களில் கொகா கோலா இந்திய சந்தையை விட்டு போன பின்னர் அந்த இடத்தை கெம்ப கோலா பிடித்தது. 1990களின் உலகமயமாக்கல் வரைக்குமே பிரபல குளிர்பானமாக இந்திய சந்தையில் இருந்தது. அதன் பின் வியாபார போட்டியினால் தளர்ந்து போனது.

சில நாட்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் வாங்கிருக்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் இந்திய சந்தையை அந்த இரு நிறுவனங்களிடமிருந்து எப்படி மீட்டெடுக்க போகிறது என்பதெல்லாம் Cola Wars Version 2.Oல் வரும். 

கெம்ப கோலா இந்திய சந்தையை மட்டுமா குறி வைத்திருக்கும் சர்வதேச சந்தையையும் தானே கணக்கில் வைத்திருக்கும். பார்ப்போம்.

இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்பே பின்கள ஒருங்கிணைப்பு (Backward Integration) தான். அதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்ய தேவையானத்தை வெளியில் இருந்து வாங்காமல் அதனை அவர்களே தயாரித்து கொள்வது தான். இதன் மூலம் செலவு குறைவும்.

இதனை தான் இனி வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்ய போகிறது.

Wednesday, February 1, 2023

குறட்டையும் தமிழ் மொழியும்


குறட்டையும் "ல,ழ" வும்

தொண்டை பகுதியிலுள்ள சுவாச பாதையில் சதை வளர்வதால் பலருக்கு குறட்டை பிரச்சனை வருகிறது.

இதற்கு நாவு பயிற்சி என ஒன்று பரிந்துரைக்கப்படுகிறது. இதனை செய்வதால் குறட்டை பிரச்சனை குறையும் என சொல்கிறார்கள்.

பல்வேறு விதமான நாவசைவுகள் கொண்ட இந்த பயிற்சியில் நாவை மேல் வரிசை பற்கள் பக்கம் வைப்பது, இரண்டாவது நாவை மடக்கி தொண்டை பார்த்து வைப்பது போல வருகிறது.

இந்த இரண்டு வித பயிற்சிகளும் "ல" மற்றும் "ழ" உச்சரிப்புகளோடு ஒத்து போகிறது.

தமிழில் மட்டும் இப்படியான உச்சரிப்பு இருக்கிறதா அல்லது வேறு மொழிகளிலும் இவ்வகை உச்சரிப்பு இருக்கிறதா என தெரியவில்லை.

இதனை சொற்ப்பிறப்பியலில் வைத்து ஆராய முடியாது, ஏனென்றால் இவை எழுத்து. எழுத்து என்பது மொழி பிறப்பின் பொழுதே அல்லது வெறும் உரையாடல் ஓசையாக இருந்து மொழி எழுத்து வடிவம் பெறும் போதோ உருவானதாக இருக்கும்.

"ல" & "ழ" எழுத்து மற்றும் உச்சரிப்பின்  உருவாக்கம் நா பயிற்சியினை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்குமோ ? தெரியவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, குறட்டை பிரச்சனைக்கு தீர்வாக தமிழின முன்னோர்கள் இதனை செய்து இருப்பார்களா ?

குறிப்பு - ல,ள,ழ ஆகிய மூன்றின் உச்சரிப்பும் நல்ல நாவு பயிற்சி கொடுப்பவை.

Tuesday, December 20, 2022

இன்றைய சினிமா


ஒரு காலத்துல  நியூஸ்பேப்பர் ல இன்னைக்கு டிவில என்னென்ன படம் போடுறாங்கன்னு ஆர்வமா பார்த்துட்டு இருந்தேன்...

அது வெட்டி ஆபீசரா இருந்த காலம் வரைக்கும் தொடர்ந்தது...

அப்ப தான் இந்தியா ல பிராட்பேண்ட் இண்டர்நெட் எல்லாம் புதுசா வர ஆரம்பிச்சது....

அப்பறமா டிவி சேனலேயே காய்கறி விக்குற மாதிரி கூவி கூவி சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பம் தான் இன்றைய சினிமா பகுதிய பாக்குறத நிறுத்தினேன்.

அப்பறமா யூட்யூப் ல புது படம் எல்லாம் வந்த கையோட சுட சுட வர ஆரம்பிச்சது. பழைய படமும் அதே மாதிரி வர ஆரம்பிச்சது. ஒரு நல்ல நாள் ல சட்டம் கொண்டு வந்து அப்படி யூட்யூப் ல படத்த கள்ள தனமா வெளியீடுறத தடை பண்ணிட்டாங்க.

அப்புறமா OTT, சேனல்ன்னு வளர்ந்துருச்சு. படம் பாக்கணுமுன்ன எதாவது சேனல வைச்சா போதுமுன்னு ஆகிடுச்சு.

இந்த சேனல் ல இந்த சினிமா போடுறாங்கன்னு ஆர்வமா பாத்து, அதுக்காக காத்திருந்து படம் பாத்த காலத்துல சந்தோஷம், இப்பம் எந்த படத்த எப்ப வேணுமுன்னாலுன் பாக்கலாமுன்னு வசதி இருக்கு... ஆனா அந்த காத்திருப்பு சந்தோஷம் இல்ல.

Sunday, August 14, 2022

பொன்னியின் செல்வனும் நானும் 2

மேற்கொண்டு போகும் முன் முக்கிய அறிவிப்பு - எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் பராக் பராக் - வந்தியதேவன் பாதையில் ஒரு அனுபவ பயணம் என்ற தொடரை கல்கி ஆன்லைன் என்னும் கல்கி இதழின் யூடியூப் ஒளியலை வரிசையில் ( https://youtu.be/bUmXhOy3Cfs ) தொகுத்து வழங்க இருக்கிறார். தவற விட கூடாத நிகழ்ச்சி இது. 

- - - 
முதன் முதலில் பொன்னியின் செல்வனை படிக்கையில் ஒரு மாயாஜால உலகத்தில் பயணித்தது போலிருந்ததும். முதல் சில பக்கங்களில் கதையோடு ஒன்ற ஆரம்பிக்கும் வரையில் கொஞ்சம் என்னடா இது என்பது போல் தான் இருந்தது. அதன் பிறவு கல்கியில் எழுத்து நடையோட்டம் கூடவே பத்மவாசனது ஓவியங்கள் எல்லாம் சேர்ந்து கல்கி உருவாக்கிய அந்த மாயாஜால உலகத்திலென்னை தள்ளி விட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாயாஜால உலகத்தை படைக்க எம்மாதிரியான அனுபவங்கள் கல்கி அவர்களுக்கு உத்வேகமாக அமைத்திருக்கும் என்பதை அறிய சில புத்தகங்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

அவை

- தெய்வத்தமிழ் ஈழத்திலே : கல்கி
- நம் தந்தையர் செய்த விந்தைகள் : கல்கி
- பொன்னியின் புதல்வர் - சுந்தா

பொன்னியின் செல்வன் நாவலை போலவே கல்கி எழுதிய மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு அலை ஓசை. கல்கி தனது சுதந்திர போராட்டங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த நாவலை எழுதிருப்பார். 1934 முதல் 1948 வரையிலான இந்தியவை அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பார். 

சிறு போராட்ட குழுக்கள், அவர்களது ரகசிய சந்திப்புகள், இவர்களை கண்காணிக்கும் சி.ஐ.டி.கள் மற்றும் அந்தகால அரசியல்வாதிகள் & பொதுமக்கள் என கலந்துகட்டி  எழுதிருப்பார். மிகுந்த பொறுமையுடன் வாசித்தால் தான் இப்படைப்பில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டடையலாம். கல்கிக்கு சாகித்திய அகாதமி விருதை வாங்கி தந்த படைப்பு இது.

பொன்னியின் செல்வனை மட்டுமே வாசித்த நபர்களுக்கு அலை ஓசை மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம், ஏனென்றால் இரண்டிலும் வெவ்வேறு எழுத்துநடைகளை பயன்படுத்திருப்பார் கல்கி. 

1930களில் ஆனந்த விகடனில் தனது கட்டுரைகளின் மூலமும் கதைகளின் மூலமும் புகழ்பெற்று இருந்த கல்கி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வாசன் சம்மதம் கொடுக்காத நிலையில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. 

அப்படி கல்கி ஆனந்த விகடனில் இருந்து விலகியதும் ஒரு வகையில் நன்மையே நிகழ்ந்தது. கல்கி விட்டு சென்ற இடத்தை தேவன் கையில் எடுத்து வழி நடத்தி சென்றார்.

ஏற்கனவே கல்கி தனக்கான ஒரு அடையாளத்தை எழுத்துலகில் பெற்றிருந்தார். போராட்டத்தில் சிறை சென்றுவிட்டு வந்த கல்கிக்காக அவரது நண்பர் சதாசிவம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடிவெடுத்தார். 

அப்பொழுது கல்கி அவர்களையும்  பங்குதாரராக சேர்த்து கொண்டார். ஆனந்த விகடன் அப்பொழுதே வார இதழ்களின் சந்தையில் புகழ்பெற தொடங்கி இருந்தது. 

சதாசிவம் மற்றும் கல்கி இருவருக்கும் ஆனந்த விகடன் மற்றும் பல பிரபல இதழ்களில் மத்தியில் ஒரு புது இதழை ஆரம்பித்து மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே பெரிய சவால்.

அத்தகைய சவாலை எப்படி எதிர்கொள்வது யோசித்து சதாசிவம் ஒரு முடிவை எடுத்தார். புது பத்திரிக்கைக்கான ஒரு பெயரை தேர்ந்தெடுத்தார். அந்த பெயரே போதும் மக்களின் கவனத்தை பெற என நம்பினார்.

அந்த பெயர் "கல்கி". தமிழ் பத்திரிக்கை உலகில் ஒரு எழுத்தாளரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது அதுவே முதல் முறை.

இன்னொன்றயும் கவனிக்க வேண்டும் அப்பொழுது கல்கி எத்தகைய புகழை பெற்று இருந்தால் சதாசிவம் அவர்கள் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பார்.

பத்திரிக்கை ஆரம்பித்தாகி விட்டது, மக்களின் கவனத்தை பெற்றாகி விட்டது, கல்கி இதழுக்கான வாசக பரப்பை சந்தாதாரர்களை பெற என்ன வேண்டும் ?

எப்படி எல்லாம் எழுதினால் மக்களது கவனத்தை பெற்ற முடியும் என யோசித்து கல்கி எழுத ஆரம்பித்தது தான் " பார்த்திபன் கனவு' தொடர்கதை.

பெரும்பான்மையான மக்கள் சிவகாமியின் சபதம் கதை தான் முதலில் எழுத பட்டு இருக்கும் என்று ஆனால் உண்மையில் அது  பார்த்திபன் கனவு வந்து முடிந்த பிறகே அந்ததொடர் ஆரம்பிக்க பட்டது.

பார்த்திபன் கனவு வந்து கொண்டி இருந்த நேரத்தில் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டு இருந்தது.

அதனை சமாளிக்க போட்டியில் நிலைத்திருக்க அப்பொழுது ஆனந்த விகடனில் தலைமை பொறுப்பில் இருந்த தேவன் ஒரு ஜனரஞ்சக நகைச்சுவை தொடரை எழுத ஆரம்பித்தார். இன்றளவும் அந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. 

அந்த தொடரின் பெயர் ..... "துப்பறியும் சாம்பு".

தொடரும் ...

#பொன்னியின்செல்வன்
#PonniyinSelvan 
#பொன்னியின்செல்வனும்நானும்

Sunday, July 31, 2022

வாடகை மகிழுந்து - அநியாய கட்டணம்


இன்றைய தேதியில் வாடகைக்கு வாகனங்களை அமர்த்துவது என்பது பலரது தினசரி வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சிலரது அன்றாட வேலையே இதனை நம்பியே தான் இருக்கிறது.

கொஞ்ச நாட்களாக எரிபொருள் விலை உயர்வினால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் பலரும் பேருந்து, இரயில்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதுவுமே அதிக சேவைகளை கொண்டதாக இல்லை.

இது தான் வேளையென நாங்கள் இருக்கிறோம் போக்குவரத்து நெரிசல் பற்றியோ எரிபொருள் விலை பற்றியோ கவலை படவேண்டாம், எங்களது வாடகை மகிழுந்து சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று விளம்பர படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட வேளையில் அவர்கள் நிறுவனத்தின் வாடகை கட்டணம் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று புரியாத ஒன்று. ஏனென்றால் நேரத்திற்கு தகுந்தவாறு கட்டணம் மாறி கொண்டே இருக்கும். போகும் தூரம் ஒன்றே என்றாலும்.

இதில் வேறு கூடுதலாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தான் ஓட்டுனர்கள் வருவார்கள். இல்லாவிட்டால் ஏதோ இலவசமாக வர சொன்னது போல் பேசுவார்கள்.

சரி ஒரு மாதிரியான முயற்சி பண்ணி பார்ப்போம் என....

போகிற தூரம் சார்ந்து தான் OLA, UBERல் எல்லாம் கட்டணம் நிர்ணயிக்க படும் என்று சொல்ல படுகிறது.

ஆனால் கிளம்பும் இடமும் போய் சேர்கிற இடமும் ஒரே இடமாக வைத்து பார்த்தேன்.

நியாயமாக பார்த்தால் கட்டணம் எதுவும் வந்திருக்க கூடாது. ஆனால் வந்திருக்கிறது. 

புறப்படும் இடம் - மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன் வாசல்
சேருமிடம் -மைலாப்பூர் கபாலீஸ்வரர் முன் வாசல்

இது இப்படியாக இருக்க...

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போக எதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க படுகிறது தெரியவில்லை. 

இன்னொன்றும் புரிகிறது இதுவரையில் அதிகமாக தான் வாடகை கட்டணத்தை தான் இந்த வாடகை மகிழுந்து நிறுவனத்தார் வசூலித்துள்ளனர்.

இவர்களுக்கென கட்டண அட்டவணை என்று எதுவும் இல்லை. 

ஏன் இல்லை என்பதும் தெரியவில்லை.

#olataxi 
#ubertaxi

Sunday, July 24, 2022

டிபி கூப்பர் - 1


D.P.Cooper. 

இதுவரையில் தீர்வு காண முடியாத பல வழக்குகள் உலகம் முழுக்க இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றில் எல்லாம் இது இப்படியாக நடந்திருக்கும் என ஊகிக்க முடியும்.

ஆனால் ஒரு வழக்கில் யார் குற்றவாளி, அவர் எப்படி தப்பித்தார் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது என்றால் அது டிபி கூப்பர் விமான கடத்தல் வழக்கு தான். அந்த விமான கடத்தல் நடந்து 50 வருடங்களாகி விட்டது, இன்னும் அந்த வழக்கிற்கு டிபி கூப்பருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. வழக்கை பற்றி பல்வேறு ஆவண படங்கள், மின்னூல்கள், கலந்துரையாடல்கள் வந்துவிட்டது.

இந்த வழக்கை பற்றி முன்பே கேள்வி பட்டு இருந்தாலும், அது இத்தனை பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கும் என தெரியவில்லை நெட்ஃபிலிக்ஸில் D.B. Cooper : Where Are You ? என்னும் தொடரை பார்க்கும் வரையில்.

இந்த வழக்கை பற்றி பல திரைப்படங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள், சமீபத்தில் லோகி  தொடரில் நான் தான் டிபி கூப்பர் என லோகி சொல்வது போல் இருக்கும். 

கொஞ்சம் பெரிய விமான கடத்தல் நிகழ்வை சுருக்கமாக - ஒரு விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண் இடம் ஒரு துண்டு சீட்டு கொடுகிறார், படித்த பயத்தில் விமானியிடம் விஷயத்தை சொல்கிறார். 

மேலும் மிரட்டுவதற்காக பெட்டியில் குண்டு வைத்து இருப்பதை காட்டுகிறார்.

பேச்சு வார்த்தை - கோரிக்கை - நான்கு பாராசூட் - இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்.

கை மாறியது.

உத்தரவு - குறைந்த உயரத்தில் விமானத்தை ஓட்ட.

டிபி கூப்பருக்கு தெரியாமல் - பின் தொடர்தல்.

விமானத்தின் பின் தளத்தில் இருக்கும் வழியின் மூலம் படிகளில் இறங்கி மழையும் குளிருமாய் இருந்த அந்த இரவில் 10,000 அடி உயரத்தில் இருந்து குத்தித்து உலகத்தின் பார்வையில் இருந்து காணாமல் போகிறார் டி.பி.கூப்பர்.

விரிவாக படிக்க ( https://www.thedbcooperforum.com/ , https://en.m.wikipedia.org/wiki/D._B._Cooper , 
https://www.britannica.com/biography/D-B-Cooper ,
null 
https://www.vikatan.com/news/international/66245-fbi-is-giving-up-solving-mystery-of-db-cooper )

அமெரிக்க தனியார் துப்பறிவாளர்கள் இவர் தான் டிபி கூப்பர், இல்லை அவர் தான் டிபி கூப்பர் என பலரை கை காட்டி கொண்டு  இருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது உண்மையென்று ஆகிவிட்டால் அதிலிருந்து கிடைக்க கூடிய வணிக ரீதியிலான வருவாய் முக்கிய காரணம். அமெரிக்காவில் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதே விஷயம் இந்தியாவில் நடந்திருந்தால் அதே வணிக வாய்ப்பு இருக்குமென தெரியவில்லை. 

உங்களுக்கு வலையொளி (Podcast) கேட்கும் பழக்கம் இருந்தால் இந்த வழக்கை பற்றி அமெரிக்கர்கள் ஆர்வமாக பேசுவதை கேட்லாம்.

இந்த வழக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் தேடுதலில் ஒருவர் குற்றவாளி என சொல்ல ஆயிரம் ஆதாரங்கள் கிடைத்தால், அவர் டிபி கூப்பர் இல்லையென சொல்ல இரண்டாயிரம் ஆதாரங்கள் கிடைக்கும்.

உண்மையில் டிபி கூப்பர் என்பது ஒரு நபரா அல்லது உள்கூட்டத்தின் ஒரு ஏமாற்று வேலையா ?

ஏன் கனடாவில் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை ? ஏன் கனடாவில் விசாரிக்க வேண்டும் ?

1980ல் கொலம்பியா ஆற்றங்கரையில் டாலர் நோட்டுகளின் பின்னணி என்னவாக இருக்கும் ?

பண பரிமாற்றத்தின் / பரிவர்த்தனையின் மூலம் ஏன் கண்டுபிடிக்க முயலவில்லை ?

அரசியல் நோக்கம் கொண்டதா இந்த டிபி கூப்பர் விமான கடத்தல் ? அல்லது அந்த கடத்தலே ஒரு நாடகமா ?

தொடரும்....

Sunday, July 10, 2022

பொன்னியின் செல்வனும் நானும் - 1


பொன்னியின் செல்வன் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒன்றை சொல்லி ஆக வேண்டும், வார்த்தைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கதையை அப்படியே திரையில் கொண்டு வர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளின் மூலம் உருவாக்க படும் கற்பனைகளுக்கு எல்லை என்பது இல்லை. ஆனால் ஒரு படமாக எடுக்கப்பட்டு விட்டால் அந்த கற்பனைக்கு ஒரு உருவம் வந்துவிடும். எல்லை உருவாகி விடும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதும்  "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது..." என்று பேசியபடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவிற்கு வரும். உண்மையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படி தான் பேசி இருப்பாரா என தெரியாது. ஆனால் சில பல சரித்திர குறிப்புகளை படித்தால் முற்றிலும் வேறுபட்ட உருவமே நமக்கு கிடைக்கும்.

பலருக்கு பொன்னியின் செல்வன் வழியாக இராஜராஜ சோழனும் அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் தெரிந்திருக்கும். சிலருக்கு கோயில் வழியாக இராஜராஜனையும் பின்னர் நாவலையும் அறிந்திருப்பார்கள்.

ஆனால் .....

2001ல் அழகம் பெருமாள் இயக்கத்தில் டும் டும் டும் என்ற திரைப்படம் வந்தது. அதில் தேசிங்கு ராஜா என்னும் பாடல் தஞ்சை பெருவுடையார் கோயிலில் எடுக்க பட்டு இருந்தது. அக்கோயில் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்து 50 நிமிட பயணத்தில் இருக்கிறதென்று தெரிந்த பின், ஒரு நாளில் ஜோதிகா நடனம் ஆடிய கோயிலை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் சொந்தகார அண்ணனுடன் சென்று பார்த்தேன். 

இவ்வளவு பெரிய கோயிலை யார் கட்டினாங்க என கேட்ட பொழுது இராஜராஜ சோழன் என சொன்னார்.

எங்கள் பகுதியில் நூலகத்தில் இருந்து தினந்தோறும் வார பத்திரிக்கைகள் வரும். அதில் கல்கியும் அடங்கும். அதில் எதோ ஒரு ராஜா காலத்து கதை ஒன்று வரும் (அது பொன்னியின் செல்வன் என்று அப்பொழுது தெரியாது), அதனை அம்மா ஆர்வமுடன் வாசிப்பார். என் பெரியம்மாவும் அந்த கதையை பற்றி மிகவும் சிலாகித்து சொல்வார். 

அதில் வரும் படங்கள் பார்ப்பத்தோடு மட்டும் நிறுத்தி கொள்வேன், அது ரொம்ப தமிழாக இருக்கவும் படிப்பதற்கெல்லாம் முயற்சி செய்ததில்லை. 

இப்படி பொன்னியின் செல்வன் பலர் பாராட்டி சொல்லியும் வாசிக்க சொல்லியும் .... "நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்குறது" என்று அந்த வயதிற்குள்ள மனப்பான்மையுடன் இருந்ததினால் வாசிக்கவில்லை.

நண்பர்கள், சினிமா, பாட்டு என வாழ்க்கை சுழன்று கொண்டே இருந்தது.

மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு படித்து / முயன்று  கொண்டு இருந்த ஒரு வருடத்தில் முக்கால்வாசி நேரமும் வீட்டிலேயே தான் இருப்பேன். அப்படியான நேரத்தில் பெங்களூருவில் இருந்த பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன். பெரியம்மாவிடம் வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது என சொல்லவும் ... சும்மா இருக்குற நேரத்துல் இதைய படி என பத்மவாசனின் ஓவியங்கள் கொண்டு   தொடராக வந்த பத்திரிக்கை பக்கங்களை பிணைத்த பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்கள் (ஆறு புத்தகங்கள்) கொடுத்தார்.

வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு முதல் சில பக்கங்களை வாசித்து முடிக்க 10 நாட்களானது.

அதன் பிறகு கதையோடு ஒன்றி பைத்தியம் பிடித்தது போல் வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு வாரத்தில் மொத்த நாவலையும் படித்து முடித்தேன். 

கல்கியின் வார்த்தைகள் ஏற்படுத்திய மாயாஜாலம் ஒரு பக்கம் என்றால் அதனை வேறொரு தளத்தில் கொண்டு போனது பத்மவாசனின் ஓவியங்கள். 

துப்பறியும் கதைகள், காதல் கதைகள் ஆகியவற்றை வாசித்து கொண்டு இருந்தவனுக்கு பொன்னியின் செல்வன் வாசித்தது எப்படி இருந்ததென்றால் தெரு பசங்களுடன் பொழுதுபோக்கிற்காக குடியிருப்பு தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவனை 20-20 கிரிக்கெட் போட்டியில் விளையாட விட்டது போல் இருந்தது.

பிறவு பெரியம்மாவிடம் பத்மவாசன் ஓவியங்கள் கொண்ட தொகுப்பை கொடுத்துவிட்டு மணியம் ஓவியங்கள் இருந்த தொகுப்பை வாங்கி மீண்டும் மணியம் ஓவியங்கள் வழியாக வாசித்தேன்.

அதகளத்தின் உச்சம் அந்த அனுபவம்.

பின்னர் வேதா ஓவியங்களோடு கல்கியில் தொடராக பொன்னியின் செல்வன் வர ஆரம்பித்தது. முதல் இரண்டு வாரங்கள் தான் வாசித்தேன், ஆனால் வேதாவின் ஓவியங்கள் மூலம் கதையோடு ஒன்ற முடியவில்லை.

பின்னர் பாம்பே கண்ணன் மற்றும் குழுவினர் கொண்டு வந்த பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் / ஒலி நாடகம் வடிவத்தை கிட்டத்தட்ட 64 மணி நேரம் செலவளித்து கேட்டு முடித்தேன். அதுவுமே மறக்க முடியாத மற்றொரு அனுபவம்.

அதே போல இன்னொரு புதிய அனுபவமாக இருக்க போகிறது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம்.

தொடரும்....

Monday, June 6, 2022

கல்கி : சிவகாமியின் சபதம் : பார்த்திபன் கனவு : விக்ரம் : கைதி -மல்டிவர்ஸ்

எதோ கைதி விக்ரம் படத்துல லோகேஷ் கனகராஜ் தான் முதல் முறையே மல்டிவர்ஸ் வைச்சு இருக்காருன்னு கம்பு சுத்திட்டு இருக்காங்க.

ஆனா இதுக்கு பத்து வருஷம் முன்னாடியே தலைவன் வெங்கட் பிரபு கோவா படத்துல அதைய பயன் படுத்தி இருப்பாரு.

கோவா படத்துல கிளைமாக்ஸ் ல சுபாஷினிய மன்மதன் பட மதன் சந்திக்குற வைச்சுருப்பாரு.

அதெல்லாம் யாருக்கும் ஞாபகம் வராதே.

அவ்வளவு ஏன் பழைய சத்யராஜ் படங்கள் ல பாருங்க ஒரே கதாபாத்திரம் பல படத்துல வரும்.

அவ்வளவு ஏன் எல்லாத்துக்கும் முன்னாடி கல்கி எழுதின பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் இரண்டு நாவலும் இந்த மல்டிவர்ஸ் ல அமைஞ்சது தான்.

பார்த்திபன் கனவு சிவகாமியின் சபதம் கதைக்கான reference இரண்டு இடத்துல வரும். இரண்டு தனி தனி நாவலா படிச்சாலும் புரியும்.

வெவ்வேறு கதைன்னாலும் சில கதாபாத்திரங்கள் இரண்டு நாவலையும் வருவாங்க.

ஆனா இதைய வாசிச்ச நிறைய பேர் சிவகாமியின் சபதம் நாவல் தொடர் தான் முதல் ல வந்ததுன்னும் பார்த்திபன் கனவு நாவல் தொடர் பிறவு வந்ததுன்னும் நினைப்பாங்க.

ஆனா உண்மை என்னன பார்த்திபன் கனவு தொடர் தான் முதல் ல 1942ம் வருஷம் வந்துச்சு. அந்த தொடர் முடிஞ்ச பிறவு தான் 1944ம் வருஷத்துல தான் சிவகாமியின் சபதம் தொடர் ஆரம்பிச்சுச்சு. 

இன்னைக்கு லோகேஷ் கனகராஜ் பண்ணினதுக்கு எல்லாம் கல்கி அப்பவே பிள்ளையார் சுழி போட்டுருக்காரு.

Sunday, May 29, 2022

தாம்பரம் ரயில் நிலையம் - 4ஆம் நடைமேடை


மோடிஜி சென்னை வந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தாம்பாரம் ரயில் நிலையத்திலும் அதற்கான மேடை அமைக்கபட்டது.

தவறில்லை.

மேடை அமைக்க 3 மற்றும் 4ஆம் நடைமேடையில் இருந்த பயணிகள் அமர நிறுவ பட்டு இருந்த நாற்காலிகளை அகற்றி இருந்தனர்.

அதுவும் தவறில்லை. பெரும் நிகழ்வு நடைபெறும் சமயம் நடக்க கூடியவை தான்.

ஆனால் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களாகியும் அங்கு இருந்த நாற்காலிகள் மீண்டும் அதே இடத்தில் நிறுவ படவில்லையே ???

ஏன் ???

இன்று வாரயிறுதி என்பதால் கூட்டம் இல்லை, இதே வார நாட்கள் என்றால் செங்கல்பட்டு வரை போகும் ரயிலுக்காக ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கும்.

தாம்பாரம் வரையிலான ரயில் சேவை தான் அதிகம்.

ஆனால் குறைந்த சேவைகள் கொண்ட செங்கல்பட்டு வரை போகும் ரயில்களை அதிகம் பயன்படுத்தும் புறநகர் பகுதிவாசிகள் நிலை தான் திண்டாட்டம்.  அவர்களின் நேரத்தின் பெரும் பகுதி ரயில் காத்திருப்பில் கழிந்து விடுகிறது.

Tuesday, May 17, 2022

முதல்வர் ஸ்டாலின் II தூய்மை பணியாளர்கள் II நன்மை


வழக்கமாய் இத்தனை பெரிய குப்பை தொட்டியில் இருந்து குப்பைகளை எடுக்க தூய்மை பணியாளர்கள் அந்த குப்பைத்தொட்டியில் இறங்கி அதில் நின்று கொண்டு தான் குப்பைகளை எடுப்பார்கள். 

சுத்தம் செய்ய படாமல் இருக்கும் அந்த தொட்டியில் அவர்கள் நின்று கொண்டு வேலை செய்வதை பார்த்தால் பாவமாக இருக்கும்.

அப்படி அசுத்தமாக இருக்கும் தொட்டியில் நான் இறங்க மாட்டேன், நான் இறங்க மாட்டேன் என்றால் அவர்களும் அப்படி இறங்க கூடாது. சரி கஷ்ட ஜீவனம் என சமாதானத்துடன் கடந்து சென்று விடுவேன்.

கடந்த காலங்களில் சரியாக அசுத்தமாக இருக்கும் பல தொட்டிகள் உடைந்து குப்பைகள் வெளியில் விழுந்து சிதறி கிடப்பதையும் அதில் வெறும் கைகளுடன் பணியாளர்கள் வேலை சரி செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை கேட்டு கூட இருக்கிறேன் ...."அதை கழுவ கூட எங்க காசுல தான் பவுடர் வாங்கணும் ..." என பதில் கிடைத்தது.

ஏன் இப்படிப்பட்ட நிலையில் வேலை செய்கிறார்கள் என யோசித்ததும் உண்டு.

இன்று கோடம்பாக்கத்தில் ஒருவரை பார்க்க சென்று இருந்தது பொழுது ஒரு நிகழ்வை கண்டேன்.

ஒரு பணியாளர் குப்பைதொட்டியை சலவைத்தூள் (Soap Powder) கொண்டு சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

வெறும் கைகளுடனா வேலை செய்கிறார் என கேள்வி பார்த்த பொழுது, தேவையான கையுறைகளை அணிந்திருந்தார்.

குப்பைத்தொட்டியினூள்ளே கழுவ சலவைத்தூளுடன் கலந்த நீரை அடிக்க இயந்திர நீர் துப்பாக்கி உடன் இணைந்த நீர் தொட்டியை பக்கத்தில் ஒரு வண்டியில் வைத்திருந்தனர். பணியாளர் குப்பைத்தொட்டியை கழுவி கொண்டு இருந்தார்.

அதே தெருவில் இருந்த மற்ற பணியாளர்களின் கையிலும் தரமான கையுறைகள். எல்லாம் அரசு ஏற்படாம்.

இப்படி அடிமட்ட மக்களுக்காக யோசித்து செயல்படும் முதல்வர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார்.

சந்தோஷமாக சொல்வேன் Stalin is more Dangerous Than Karunanidhi.

#DMk 
#StalinIsMoreDangerous 
#TN 
#Stalin

Sunday, May 15, 2022

கலவை - ஜெயில் இயக்குனர் வசந்தபாலன்

வசந்தபாலன் இயக்கத்தில் வந்த ஜெயில் படத்தை பார்த்தேன், ஏதோ கண்ணகி நகரில் இருப்போர் எல்லோரும் திருட்டு தொழிலில்தான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது போல் காட்டியிருக்கிறார்.

ஆனால் உண்மையிலேயே படத்தில் காட்டி இருப்பது போல் மக்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் ஒரு 2% தான்.

நிஜத்தில் கிடைத்த வேலையை, தொழிலை செய்து கொண்டு தங்களது அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுத்திட வேண்டும் என்று உழைப்பவர்களை கொண்ட பகுதி தான் கண்ணகி நகர்.

முன்பு இரண்டு படங்களில் வசந்த பாலனுக்கு இருந்த பிரச்சினை தான் இந்த படத்திலும் அவருக்கு இருக்கிறது. படத்தை ஆரம்பிக்க தெரிந்தவருக்கு அதை எப்படி முடிப்பது என்று புரியாமல் குழப்பிக் கொண்டு முடித்திருக்கிறார்.

- - -

சுஜாதாவின் சிவந்த கைகள் நாவலை படித்தேன். தொடங்கியதும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை. பாதாம் அல்வாவினால் எழுத்தபட்டது ஒரு எழுது நடை. 

ஏற்கனவே இரண்டு ஒரு முறை வாசித்திருக்கிறேன் என்ற ஞாபகமே வரவில்லை. 

வாசித்து கொண்டு இருக்கும் பொழுதே இந்த நாவலை திரைப்படமாக எழுத்தால் எப்படி இருக்கும் என நினைத்து கொண்டே இருந்தேன். 

ஆனால் 1980களில் நடக்கும் கதையை இக்காலத்துக்கு ஏற்றது போல மாற்ற வேண்டும். அதுவே ஒரு சவாலான ஒன்றாகும்.

- - -

இப்பொழுது முகில் எழுதிய உணவு சரித்திரம் பாகம் - 1 வாசித்து கொண்டு இருக்கிறேன். அக்காலத்தில் அல்வாக்களை மருத்துவ ரீதியாகவும் பயன் படுத்த பட்டது என அதில் படித்ததில் இருந்து ...

ஒரு வேளை அமைதிப்படை அம்மாவாசை Anesthesiologistஆக அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்திருப்பார் போல.

- - -

பாரா எழுதிய பொலிக பொலிக வாசித்த பிறவு முதன் முறையாக திருபெரும்புதூர் சென்று வந்தேன். 

நகரமயமாக்கல் நகரங்களின் பக்கத்தில் இருந்து இப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து எழுந்தது போல கொஞ்சம் சோம்பலாக புதுமைகளுக்கு வணக்கம் சொல்லி கொண்டு இருக்கிறது.
இந்திய ஆன்மீகத்தில் திருபெரும்புதூருக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. இங்கு பிறந்த இராமானுஜர் திருப்பதிக்கு போகாமல் இருந்திருந்தால் இன்னுமும் சிவனா காளியா என சண்டை நடந்து கொண்டு இருந்திருக்கும்.

ஆன்மீக பக்தியை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு பார்த்தோமானால் அழகு அழகாய் சிற்பங்கள். ஒவியர் சில்பி இதனை எல்லாம் வரைந்து வைத்திருக்காரா என ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தேன்.

பக்தி, சிற்பங்கள் இரண்டையும் தள்ளி வைத்துவிட்டால் முக்கிய குறை - முன்பு போல தையிலையில் சுட சுட அதிரசம் வைத்து விற்பது இல்லை.

திருபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் சிப்காட் வழியாக சேத்துப்பட்டு தாண்டி மலைப்பட்டுக்கு வந்தால் அமைதியான சூழலில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. மாலை நேரத்தில் அமைதியாக நேரத்தை கழிக்க ஏற்ற இடம்.

- - -

2ஜி வழக்கில் ஆ.ராசா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என சொல்லிவிட பிறகும்  BSNL நிறுவனத்தின் தேக்க நிலைக்கு ராசா, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் காரணம் என இந்த காணொளியில் ( https://youtu.be/Wlgk8XXHWuA ) சொல்லி இருக்கிறார்கள்.

இது தவிர்த்து இவர்களது Think School வலையகத்தில் பல பொருளாதார வழக்காய்வுகள் (Case Studies) பற்றி பல காணொளிகள். ஆர்வம் இருப்போர் கண்டடையலாம். 

- - -

Sunday, April 24, 2022

கலவை - 24/04/2022 - இராவணன் பத்து தலைநகரங்கள்

புதிதாக வாசிக்கிறவர்களுக்கு சொல்லி விடுகிறேன், இப்பகுதி பல துணுக்கு செய்திகள் கொண்ட பகுதி.

- - -

இராவணன்...

இந்திய புராணங்களின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள வேண்டுமென விருப்பம். அப்படி அறிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது தான் இது இப்படியாக இருக்கலாமோ என தோன்றியது. 

இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவை தவிர்த்து ராமாயணம் என்னும் கதை உலகெங்கும் மொத்தம் 12 நாடுகளில் கதையாகவும் புராணமாகவும் வழக்கத்தில் இருக்கிறது. மொத்தம் 14 நாடுகளிலும் சேர்த்து 300 வடிவங்களில் ராமாயணம் சொல்ல பட்டும் எழுத பட்டும் வருகிறது. 

அந்த 12 நாடுகள் - பர்மா, கம்போடியா, சீனாவின் திபெத்து, லாவோஸ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ, நேபால், தாய்லாந்து, மலேசியா, மங்கோலியா, வியட்நாம். 

மேல் சொன்ன நாடுகளில் இந்து சமயம் வழக்கத்தில் இருந்த மாதிரி தெரியவில்லை. 

அதே போல் இந்தியாவில் பல மொழிகளில் பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னரே எழுத பட்டு இருக்கிறது. 

10ஆம் நூற்றாண்டில் தான் இராமானுஜரின் தலைமையில் வைணவ சமயம் பெரும் எழுச்சியை கண்டது. அவர் நாடெங்கும் வலம் வந்து பலரை வைணவ சமயத்தில் இணைத்தார். 

இப்படி பல தகவல்களை அறிந்து கொள்ளும் பொழுது இராவணனுக்கு பத்து தலை இருந்து இருக்காது ; அதற்கு பதிலாக பத்து தலை நகரங்கள் கொண்டு ஆட்சி செய்து இருக்க வேண்டும். அத்தனை பெரியதாக இருந்திருக்க வேண்டும் இராவணனின் ராஜ்ஜியம்.

இராமாயணத்தில் தண்டகாரண்யம் பகுதியில் இருந்தே இராவணன் ஆளுமையில் இருந்ததாக வரும்.

கடவுள் தன்மைகளை புராணத்தில் இருந்து விலக்கி வைத்து அணுகும்போது தான் அதன் உண்மை ஒருவாறு புரிந்துகொள்ள முடியும்.

- - -

பொன்னியின் செல்வன் நாவலை முடிந்த பின் அதே கதை வரிசையில் படிக்க வேண்டிய பல நாவல்கள் இருக்கிறது. 

அதில் முக்கியமானது அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி. அதன் சிறப்பு மிகவும் மிகை படுத்த படாமல் கதை நகரும். இக்கதையில் வரும் ஜனநாதன் கச்சிராயன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இளநிலை பட்டப்படிப்பு முடித்த உடன் அப்பா எனக்கு வீரபாண்டியன் மனைவி நாவலை திருச்சி ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வைத்து வாங்கி கொடுத்தார். 

21 வருடங்களுக்கு முன்பு இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அ.கி. வேங்கட சுப்ரமணியன் "அரு. ராமநாதன் எழுத்துக்களும் எண்ணங்களும்" என்ற பெயரில் எழுதியும் தொகுத்தும் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அதனை வானதி பதிப்பகம் தான் பதிப்பித்து வெளியிட்டார்கள். இப்புத்தகத்தை தான் தற்பொழுது வாசித்து கொண்டு இருக்கிறேன்.

- - - 

பொன்னியின் செல்வன் நாவலை மிகவும் விரும்பி படித்தவர்கள் எல்லாம் சங்கதாரா நாவலை படிக்கும் பொழுது பெரும் அதிர்ச்சியடைவார்கள். 

இது இப்படி எல்லாம் இருக்காதே, உண்மைக்கு புறம்பாக எழுதி இருக்கிறார் என சிலம்பாட்டம் ஆடுவார்கள். எதோ நேரில் பார்த்தது போல் பொங்கல் வைப்பார்கள். அவர்களது பின்னூட்டங்களை / பதிவுகளை படிக்கும் பொழுது சிரிப்பாக தான் இருக்கும். 

சங்கதாரா நாவலின் முன்னுரையிலேயே போதிய விளக்கங்களை ஆசிரியர் தந்து இருப்பார். அதனை கூட புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். 

பொன்னியின் செல்வன் பிரியர்கள் அதே கதையோட்டத்தில் வேறு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் செய்ய வேண்டியது.... பொன்னியின் செல்வனை விட்டு வெளியே வருவது தான்.

- - -

வெங்கட் பிரபு இயக்கத்தில் வந்த மன்மத லீலை படத்தை பார்த்தேன். இது வரையில் அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதோ ஒரு வகையில் பிடித்து இருந்தது. 

ஆனால் இந்த படம் எந்த ரகத்திலும் கவரவில்லை. நல்ல தயிர் சாதத்திற்கு ஜிலேபி தொட்டுகிட்டு சாப்பிட்டது போல் ஒரு படம்.

- - -

இணைய பயன்பாட்டில் எனக்கு இது 25வது வருடம். சமூக தளங்களின் பயன்படுத்த ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகுகிறது.

பதிவுகள் எழுத ஆரம்பித்து 16 வருடங்கள். முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத ஆரம்பித்தேன் பின்னர் தான் தமிழில் எழுத ஆரம்பித்தேன். 

கைபேசி இணைய பயன்பாட்டில் 17 வருடங்கள். 

பல புனைபெயர்கள். 

இணையத்தில் கற்றது தான் நிறைய.

நன்றி.

- - -

Sunday, April 10, 2022

எதற்கும் துணிந்தவன் - Conditions Apply

ஞாயித்து கிழம அதுவுமா நல்ல படத்த பாக்கலாமுன்னு நெட்ஃபிலிக்ஸ் ல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடான்னு ஜெய் பீம் ல விட்டத இப்ப பிடிச்சுருலாமுன்னு எதற்கும் துணிந்தவன் படத்த தமிழ தவிர்த்து விட்டு இருந்தாங்க. 

சரி தமிழ் ல பாப்போமுன்னு சன் நெக்ஸ்ட் பக்கமா தாவினேன்.

ஒரு 13 வருஷத்துக்கு முன்னாடி வாரணம் ஆயிரம், அயன்னு தொடர்ச்சியா இரண்டு ஹிட் கொடுத்தாரு. அதைய நம்பி அதுக்கு அடுத்ததா வந்த ஆதவன் படத்துக்கு ஆவலா முதா நாள் போனேன். வழக்கமா தியேட்டருக்கு போனா உட்கார இடத்துல ஆணி இருக்கும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கலாம். ஆனா ஆதவன் படத்த பார்க்க போனப்ப சீட் ல உட்கார வைச்சு சீட்டோட சேர்த்து ஆணி அடிச்ச மாதிரி ஆகிருச்சு. கதவ திறந்து விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க, நொந்து நூடில்ஸான பிறவு விட்டாங்க. நல்ல வேளை OTT ல பாத்ததால ஓட்டி ஓட்டி தான் பார்த்தேன்.

ஜெய் பீம திரையரங்கு ல கொண்டாடமா விட்டுட்டோம், அதனால இதைய கொண்டாடிருவோமுன்னு தியேட்டரு வந்த ரசிகர்கள் வைச்சு சம்பவம் பண்ணிட்டாங்க. 

சன் டிவிகாரனே தன்னோட படம் வர போகுதுன்ன செமைய விளம்பரம் பண்ணுவான், ஆனா இந்த படத்துக்கு ரொம்ப பேசாம இருந்தப்பவே டவுட் ஆனேன்.

வாய்ஸ் ஓவர் டெக்னிக் எல்லாம் 1980கள் மைக் மோகனோட கடைசி படத்தோட காலாவதி ஆகிருச்சு. அதைய எல்லாம் இப்ப கொண்டு வந்து சுட்டுட்டு இருக்காரு இயக்கனரு. 

சமைக்க தெரியாதவன் யூ டியூப் பாத்து சமைச்ச மாதிரி படம்.

சூரி கிட்ட நீங்க இந்த படத்துல நடிக்குறீங்கன்னு சொல்லி காமெடி பண்ணிருப்பாங்கன்னு நினைக்குறேன். நம்பி ஏமாந்துட்டாரு போல. அதே மாதிரி தான் பிரியங்கா மோகன் கிட்டையும் சொல்லிருப்பாங்க போல. 

ஆக்ஷன் படமுன்ன வில்லன்னு ஒருத்தரு இருக்கணுமே ஷூட்டிங் போறப்ப இல்லாட்டி ஷூட்டிங் முடிச்ச பிறவு தான் இயக்குனருக்கு தோணிருக்கும் போல.... வில்லன் இல்லாம கூட இந்த படத்த கொண்டு போயிருக்கலாம். வினய் வைச்சு montage shots மட்டும் எடுத்துட்டு மொத்த படத்துலையும் அங்கங்க தூவி விட்டுருக்காங்க. 

கடைசி ல எதற்கும் துணிந்தவன்னு படத்துக்கு இயக்குனர் பெயர் வைக்கல படத்த தியேட்டர் ல பாக்க வந்தவங்களுக்கு வைச்ச பெயர் அதுன்னு ரொம்ப யோசிச்ச பிறவு தான் தெரிஞ்சுச்சு.

கன்னித்தீவு : தினத்தந்தி : உலக சாதனை


நான்கு படங்களுடன் கன்னித்தீவு கதை தினத்தந்தியில் வருவதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான்கு படங்கள் எப்பொழுது மூன்று படங்களானது என தெரியவில்லை.

கன்னித்தீவு கதை எங்கப்பா சிறுவயதில் படித்திருக்கிறாராம். நானும் படித்திருக்கிறேன். இந்த தொடரை தொடர்ந்து வாசிக்கிறவர்கள் எப்படி கதையை ஞாபகம் வைத்திருக்கிறார்களென தெரியவில்லை.

இன்று வந்திருப்பது 21,996 அத்தியாயம். அதாவது 20,000 நாட்களுக்கும் மேலாய் தினமும் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. 1960ல் கருப்பு வெள்ளை படங்களுடன் தொடராக ஆரம்பித்தது 2013ஆம் ஆண்டு முதல் வண்ண படங்களுடன் வர ஆரம்பித்தது.

எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்க்கும் ஆதித்தனார், 1958ஆம் வந்த எம்.ஜி.ஆர். படமான கன்னித்தீவு பட பெயரையே தொடருக்கும் வைத்து விட்டார்.ஒரு செய்தித்தாளில் புனைவு பட கதை வருவதே புதுமை, அதிலும் இத்தனை ஆண்டுகள் வருவது உலக சாதனை தான். இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தி கொண்டு இருப்பது தமிழ் செய்தித்தாள் என்பது மற்றொரு பெருமை.

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அரேபிய கதையை தழுவி தான் கன்னித்தீவு கதை.

இந்த தொடருக்கு முதலில் எழுதி ஓவியங்களை வரைந்து வருகிறவர் கணேசன் என்பவர். இடையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட பொழுது தங்கம் என்பவர் சிறிது காலம் தொடரை எழுதி இருக்கிறார்.

சரி இது பழைய தொடர் இப்பொழுதுள்ள தலைமுறையினர் யாரும் விரும்பி வாசிக்க மாட்டார்கள் என நினைத்தால் ஏமாற்றம் நினைத்தவர்களுக்கு தான். இளம் தலைமுறை சிலர் கன்னித்தீவின் முழு கதை என்ன என்று தேடி கொண்டும் விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.

கன்னித்தீவு தொடருக்கு போட்டியாக கண்ணதாசன் தனது தென்றல் திரை பத்திரிக்கையில் ஒரு தொடர் பட கதையை வெளியீட்டு வந்தார். கன்னித்தீவு அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் கண்ணதாசன் சொன்னது போல் படங்கள் போடாமல் வெவ்வேறு படங்கள் வரையபட்டால் சில குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

பிறகு கன்னித்தீவு என்ற பெயருக்கு அதிக கவர்ச்சி வந்ததினால் கன்னித்தீவு வீரன், கன்னித்தீவு மோகினி என்ற பெயரில் எல்லாம் திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்து இருக்கிறது. 

ஒரு கட்டத்தில் பலருக்கு சிறுவயதில் இந்த கன்னித்தீவு தொடர் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தது என்பது தான் உண்மை.

Sunday, March 27, 2022

காணொளி இதழ்கள் II VIDEO MAGAZINES



1980களில் தொலைகாட்சி செய்திகள் என்றால் அது அரசு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு ஒளிபரப்ப பட்ட தூர்தர்ஷனின் செய்திகள் மட்டும் தான். அதிலில் எந்த செய்தியை ஒளிபரப்பலாம், எவை எல்லாம் ஒளிபரப்ப கூடாது, எத்தனை விரிவாக செய்தியை சொல்லலாம் என்ற கட்டுபாடு எல்லாம் இருந்தது. 

1933 ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தின் படி தனியார் நிறுவன செய்தி ஒளிபரப்பு எல்லாம் இயலாத ஒன்றாக இருந்தது. 

அப்பொழுது தூர்தர்ஷனில் "The World This Week" என்னும் வாராந்திர தொடர் வந்து கொண்டு இருந்தது. இதனை தொகுத்து வழங்கியவர் பிரணாய் ராய். பின்னாட்களில் பிரணாய் ராய் மற்றும் இவரது மனைவி இருவரும் இணைந்து என்.டி.டிவி என்னும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை தழுவி தான் சன் டிவி 1990களில் "இந்த வார உலகம்" என்னும் நிகழிச்சியை ஒளிபரப்பினார்கள், பிற்பாடு இது 15 நிமிட செய்திகளாக தினமும் வந்து கொண்டு இருந்த சன் செய்திகளின் ஒரு பகுதியாக மாற்றியது.

தூர்தர்ஷனது செய்தி நிகழ்ச்சிகளில் மேம்போக்கான தன்மையே பெரிதும் இருந்தது. நுனிப்புல் செய்திகள். இவற்றில் எல்லாம் ஒரு வெற்றிடம் இருப்பதை இந்திய டுடே நிறுவன குடும்பத்தை சேர்ந்த அரூன் புரி மற்றும் அவரது சகோதரி மது புரி ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் புலனாய்வு காணொளி இதழான நியூஸ்ட்ராக் (News track) கொண்டு வந்தார்கள். இந்தப்செய்திகள் எல்லாம் 90நிமிட படமாக எடுக்க பட்டு Video Cassette வடிவில் விற்க பட்டது. 

அதுவரையில் நுனிப்புல் செய்தி தகவல்களாக இருந்த பல செய்திகள் விரிவாக மக்கள் பார்வைக்கு வைக்க பட்டது. இத்தனை தொடர்ந்து தமிழிலும் கலாநிதி மாறன் பூமாலை என்னும் காணொளி செய்தி இதழ்  தொகுப்பை கொண்டு வந்தார்.

இது அப்பொழுது VHS Wave காரணமாக வசதி படைத்தோர் பலரது  வீடுகளில் VHS player  இருந்தது, அதனால் விற்பனை மற்றும் வாடகை தான் காணொளி இதழின் மூல வருவாய். அப்பொழுது பரவலாக இருந்த கள்ள காணொளி பதிப்பு (Video Piracy) மற்றும் கள்ள ஒளிபரப்பு (Cable Piracy) காரணமாக காணொளி இதழ் முயற்சி இந்தியாவில் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. 

இப்பொழுது நியூஸ்ட்ராக் செய்தி தளமாக (https://english.newstrack.com) இணையத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. 

கலாநிதி மாறன் அவர்கள் தொடங்கிய பூமாலை காணொளி இதழும் தோல்வியே அடைந்தது. அவர் சன் டிவி நிறுவனத்தை ஆரம்பிக்க அது கூட காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் இந்த காணொளி இதழ் முயற்சி பரவலான வெற்றியை அடைந்ததென்றே சொல்லலாம். வாடிக்கையாளர் பயன்படுத்த கூடிய மின்னணு பொருட்கள் பற்றி 1976ஆம் ஆண்டு தொடங்கி 1999ஆம் வரைக்கும் Video என்னும் பெயரில் இதழ்களாக வெளிவந்தது. 

தற்காலத்தில் 24 மணி நேரமும் செய்திகளும் நினைத்த நேரத்தில் தகவல்களும் கிடைக்கும் சூழலில் பலருக்கு புரிய போவது இல்லை இந்த காணொளி இதழ்களின் முக்கியத்துவத்தை. 

முக்கிய குறிப்பு - பூமாலை இதழ் வடிவை பிற்காலத்தில் சன் டிவி செய்திகளின் ஒரு அங்கமாக வந்த சிறப்பு பார்வை பகுதிக்காக பயன்படுத்தி கொள்ள பட்டது.

பிற சேர்க்கை - 1991ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வர தாராளமயமாக்கல் கொள்கையால் இந்திய தந்தி சட்டத்தில் திருத்த மசோதா கொண்டு வர பட்டது. இதனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சமாக இருந்த காணொளி இதழுக்கான சந்தையும் பலியானது.

Thursday, March 17, 2022

கிளப் ஹவுஸ் இம்சைஸ்

இன்னைக்கு வீட்டுக்கு போக ரயிலுக்கு காத்துட்டு இருந்த நேரத்துல, கிளப் ஹவுஸ் ஞாபகம் வந்துச்சு. அன்-இன்ஸ்டால் பண்ணி ரொம்ப நாளாகிருச்சே, இப்பம் என்ன என்ன பேசிக்குறாங்கன்னு பார்ப்போமேன்னு இன்ஸ்டால் பண்ணி உள்ள போனேன்.

போன உடனே எதோ குரூப் உள்ள பராக்கு பாக்க ஆரம்பிச்சேன்.... ஈவெரா பத்தி ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு. ஆர்வமா கேட்டுகிட்டு இருக்க சொல்ல திடீர்ன்னு ஈவெராவ ஈவிரான்னு சொல்ல ஆரம்பிச்சாரு. சரி இங்கிலீஷ் உச்சரிப்புன்னு விட்டுட்டேன்.

பேசினவர் கூடவே இன்னொரு புரட்சி பேசிட்டு இருந்தாரு. ஒரு இருபது நிமிஷம் போச்சு அப்ப அந்த புரட்சி "ஆமா.... ஈவெரான்ன யாரு.."னு கேட்டாரு.

"ஈவெரான்ன பெரியார்ன்னு தான்"

"அப்ப பெரியார்ங்குறது அவர் பெயர் இல்லையா ???"

டமால்ன்னு ஒரு சத்தம். என் மனசு ல தான். 

அப்படியே தஞ்சாவூர் வழியா கோயம்புத்தூர் வந்து பிரபல திமுக டாக்டர் பத்தி பேச ஆரம்பிச்சாங்க....யாருன்னு டக்கு தெரிஞ்சுருச்சு.

"அவரும் இந்த சாதி தான் .... அவரு மூக்க பார்த்தாலே தெரியலையா...".

ஹெட் செட்ட கழுட்டிட்டு கொஞ்சம் தண்ணி குடிச்சேன்.

" அந்த காலத்துல நாகர்கள்ன்னு ஒரு குரூப் இருந்துச்சு அவங்க இருந்தது நாகலாந்து ல. தமிழ் நாட்டுக்கு அவங்க வந்து செட்டில் ஆனாங்க....அதனால அவங்க இருந்த ஏரியா எல்லாம் நாகர்கோயில் , நாகப்பட்டிணமுன்னு பெயர் வந்துச்சு"னு முடிச்சாரு.

ஏங்க இந்த நாகேஸ்வரம் கோயில் விட்டுட்டீங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன்.

வேண்டாமுன்னு லாக் ஆஃப் பண்ணிட்டேன்.
Related Posts with Thumbnails