Pages

Sunday, October 11, 2020

1922 வருட நாவல் I இந்திரபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்

புஸ்தகா இணையத்தில் / செயலியில் பழைய நாவல்கள் எல்லாம் கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான நாவல்கள், அதில்  அச்சில் இல்லாதவையும் அடங்கும். இது போன்ற முயற்சிகள் எல்லாம் ஆங்கிந் மட்டுமே  பார்த்திருக்கிறேன்.

அதாவது 15ஆம் நூற்றாண்டில் வந்த இலக்கிய படைப்புகள் எல்லாம் இன்றளவில் படிக்க கிடைக்கிறது. அவ்வளவு ஜாக்கிரதையாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பார்க்க அவ்வளவு பொறாமையாக இருக்கும் தமிழில் இது போன்று வருவதில்லையே என.

இன்று ஆரணி குப்புசாமி முதலியார் என்பவர் எழுதிய "இந்திரபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்" என்னும் துப்பறியும் நாவலை ஸ்டோரிடெல் செயலியில் படிக்க ஆரம்பித்தேன்.

"இப்பூவுலகில் காலத்திற்குத் தக்கபடி சம்பவங்கள் நேர்கின்றன. நமது மதநூலில் கூறியபடி யுகதர்மத்திற்குத் தக்கபடி யாவும் மாறுபடுகின்றன. மதத்துவேஷத்தால் நமது மதத்தைக் குறை கூறுகிறவர்கள் கூறட்டும். எவ்வளவோ ...." என ஆரம்பித்தது. என்ன இது இக்காலத்தில் துப்பறியும் கதை என்றால் கொலை, மர்மம் என்று தானே ஆரம்பிக்கும், இது புதிதாய் இருக்கிறதே என ஒரு சந்தேகத்தில் கதை வந்த வருடத்தை பார்த்தேன். சரியாய் 98 வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறது. (ஆசிரியர் குறிப்பு 1-10-1922 என தேதி இடப்பட்டு இருக்கிறது)

நன்றி புஸ்தகா. 

1960 தொடங்கி 1990களின் இறுதி வரைக்குமே நிறைய நாவல்கள் வந்திருக்கிறது. அவற்றில் பல அச்சில் கிடைப்பது இல்லை. அரசு நூலகங்களில் மட்டுமே படிக்க கிடைக்கும். புஸ்தகாவில் அதெல்லாம் வந்தால் புக்பூச்சிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

முக்கியமாக இதுபோன்ற அக்கால படைப்புகள் மூலம் அக்காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நாட்டு நடப்பு எல்லாம் தெரிந்த கொள்ள முடியும். சரித்திர ஆவணம் போன்று.

நேரம் கிடைத்தால் படிக்கவும்.

Sunday, October 4, 2020

96 - ஒரு முரட்டு சிங்கிளின் கதை


96 படம் வந்து இரண்டு வருஷமாக போகுது. எல்லோரும் அதைய ராம் ஜானு காதல் கதையா தான் பாக்குறாங்க. ஆனா உண்மை ல அது ராம் ஜானு கிட்ட இருந்து தப்பிச்ச கதை. 

நல்லா யோசிச்சு பாத்தா தெரியும்.

ஜானு படிச்ச காலேஜ் வரைக்கும் போயிட்டு , ஜானுவ பாக்காம வந்துருவான் ராம். அதே மாதிரி ஜானுவோட கல்யாணத்துக்கு போய் உண்மைய சொல்லி ஜானுவ கல்யாணம் பண்ணிக்காம மறைஞ்சுருந்து பாத்துட்டு வந்துருவான் ராம். 

இது எல்லாம் ஏன் ?

ராமுக்கு பிடிச்ச பாட்ட பாடாம வேற பாட்ட எல்லாம் பாடி ராம்ம கொல காண்டு ஆக்குறதே ஜானு வேலையா வைச்சுருக்கா. 

இதே வாழ்க்க முழுக்க தொடர்ந்தா வாழ்க்கை என்னவாகுறதுங்குற கவலை ல தான் ராம் ஜானு கிட்ட தனக்கு ல்தகா சைஆ (நன்றி - பிரண்ட்ஸ் படம் & விஜய்ணா) இருப்பதாய் சொல்லி கொள்ளவில்லை. 

கடைசில எதோ ஊருக்கு போற பொண்ணுக்கு சோறு போட்டு அனுப்புவோமுன்னு கருணை ல வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் ராம் ஜானுவுக்கு சோறு  போட்டப்ப .... கரண்ட் வேற போச்சு, அந்த காண்டுல இருந்த ராம் முத முதலா ஜானு தனக்கு பிடிச்ச எஸ்.ஜானகி அம்மா பாடின யமுனை ஆற்றிலே பாட்ட பாடுறத கேக்குறான். 

அந்த அளவுக்கு அந்த பாட்ட கேவலமா பாட முடியாதுங்குற அளவுக்கு கேவலமா பாடுறா ஜானு. ஏற்கனவே காண்டு ல இருந்த ராம் கொல காண்டு ஆகுறான். அந்த கோவத்துல தான் எச்சி கையோட ஜானுவ இழுத்துட்டு போய் சிங்கப்பூருக்கு போக பிளேன் ✈️ ஏத்திவிட்டுறான். இன்னும் இருந்தா எங்க காது ல இருந்து ரத்தம் வந்துறோமோன்னு பயம் தாம்.

ஏற்கனவே ராம் வீசிங் மற்றும் நரம்பு தளர்ச்சியால (ஜானு தொட்ட உடனே மூச்சு வாங்குது, மயக்கம் போட்டு விழுதுடுறான் ராம்) அவஸ்தை பட்டு இருந்ததால மேலும் இன்னொரு அவஸ்தை வேண்டாமுன்னு தான் ஜானுவ கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்.

அதனால தான் ஜானு சம்பந்தப்பட்ட டிரஸ கூட உடப்பு ல போட்டுடுறான் ராம். அது ல பல வருஷம் தொட்டு கூட பார்க்க படாத இம்சை ஜானுவின் பல பொருட்கள் இருக்கீ. ஜானு மேல எதாச்சு எண்ணம் இருந்திருந்தா அதைய எல்லாம் எப்பவாச்சு எடுத்து பார்த்திருப்பான் ல .அதைய எல்லாம் எடுத்து பார்த்திற கூடாது தான் கட்டில் கீழ போட்டு வைச்சுருக்கான் ராம் .

எனவே 96 படம் என்பது வெற்றிகரமாக வாழ்கிற ராம் என்கிற முரட்டு சிங்கிளின் காவிய கதை. 

#96movie
#96TheMovie

Saturday, October 3, 2020

அடல் சுரங்கப்பாதை II Atal Tunnel

அடல் சுரங்கப்பாதை.

லே மணாலி இடைய 46கிலோமீட்டராக இருந்த சுற்று பாதையை 8.8கிலோமீட்டராக குறைகிறது இப்பாதையால்.

இதனால் அப்பகுதியின் வியபார வாய்ப்புகள் பெருகும் ; அங்கு விலைவாசி குறைய வாய்ப்பு இருக்கிறது. 

செய்திகள் வழியாக பாதையை பார்த்த பிறகு எல்லாம் எல்லோரும் ஒழுங்காக வாகனத்தை ஓட்டினால் எந்த பிரச்சனையும் வராது என தெரிகிறது.

இந்த திட்டம் கொண்டு வந்த பொழுது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக பிரேம் குமார் துமால் இருந்தார். நாளை பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார். 

பிரச்சனை என்னவென்றால்....காந்தி பிறந்த நாளான நேற்று திறக்க படாமல் இன்று திறக்க படுகிறது. ஹிந்து மத நம்பிக்கையின் படி வெள்ளிக்கிழமை என்பது நிறைந்த நாள். டாட்

இப்படியான திட்டத்தை செயல்படுத்தலாமே என முதன்முதலில் நேரு தான் ஆரம்பித்து வைத்தார். 1983 ஆம் ஆண்டு செயல்திட்ட வடிவம் பெற்றது.

பிறகு பல அரசியல் சூழ்நிலை காரணமாக கிடப்பில் போட பட்டது. பின்னார் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு வந்த சமயத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசி இருக்கிறார். சுரங்கப்பாதை நிச்சயம் கட்ட படும் என அறிவித்தார்.

பின்னார் 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான இறுதி திட்ட வடிவம், செலவு மதிப்பீடு எல்லாம் ஆய்வு செய்ய பட்டது. பல பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக (உலக பொருளாதார மந்தநிலை) நான்கு வருடங்கள் கிடப்பில் இருக்கிறது.

2010ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்த சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கியது.

2019ல் பிரதமர் மோடி வந்து இந்த சுரங்கப்பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என பெயரை மாற்றி வைக்கிறார். 

2020 சுரங்கப்பாதை திறக்கபட இருக்கிறது.

Sunday, September 13, 2020

தமிழுக்கு வந்த சோதனை

திருவள்ளுவர் என்பதை பள்ளியில் படிக்கும் பொழுது பரீட்சையில் கொரவல்லுவர், தெருவள்ளுவர் என்றெல்லாம் எழுதி சாதனை படைத்து இருக்கிறேன். அப்படி பரீட்சைக்கு கிளம்பி போகிற பொழுதெல்லாம் அப்பா கிண்டலாக கம்பர், திருவள்ளுவர் எல்லாம் தூக்கு மாட்டிகொள்ள பள்ளி வந்திருப்பார்கள் என சொல்வார்.

சமீபத்தில் சுவரஜதி என எழுதி இருந்ததை சவரஜாதி என படித்துவிட்டு, சங்கீத குறிப்புகளில் இப்படி சாதியை பற்றி எழுதி இருக்கிறார்களே என மனைவியிடம் சொல்லி மாட்டிகொண்டேன். அதுவரையில் தமிழ் புலவர் என சொல்லி கொண்டு இருப்பேன். 

புலவர் என்பது புளுவர் ஆனது தான் மிச்சம்.

 இப்பொழுதும் சில இடங்களில் எழுத்து பிழைகளுடன் எழுதுகிறேன். பின்னர் கவனித்து திருத்தி கொள்கிறேன்.

நிற்க

பாமா கோபாலன் எழுதிய "குமுதம் ஆபீஸில் கோபாலன்" புத்தகத்தை படித்து கொண்டு இருக்கிறேன். அதில் ஒரு இடத்தில் தயாரித்த என்பதற்கு பதிலாக தாயாரித்த என வந்திருக்கிறது.

ஆக

நானெல்லாம் எழுத்து பிழை (பேசும்போது கூட எழுத்து பிழை வருன் எனக்கு) கண்டுபிடிக்கும் அளவிற்கு புத்தகம் வருகிறது. 

இது செம்மொழியான தமிழுக்கு நல்லது இல்லை. 

கவனம் எழுத்தாளர்களே.

இரு புத்தகம்

படித்து முடித்தது - குபேரவன காவல், இதிகாசத்தை மைய படுத்திய கதையில் பரபரப்பான சம்பவங்கள் எதிர்பார்த்தேன். அதுவும் மகாபாரத புருஷாமிருகம், யட்சிணி, குபேரவனம் எல்லாவற்றையும் வைத்து வாசகனை மிரட்டி எடுத்திருக்கலாம்.

ஆனால் ஆசிரியர் வேறொரு கோணத்தில் எழுத்திருக்கிறார். 

ஒரு வேளை அதே கதை போக்கில் அவர் இந்த நாவலை எழுதிருந்தால் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கும்.

படிக்க ஆரம்பித்திருப்பது - முகம்மது யூனுஸ் எழுதிய "Banker To The Poor" என்னும் புத்தகம். 
முகம்மது யூனுஸ் என்பவர் பங்களாதேஷ் நாட்டின் முக்கியமான பொருளாதார நிபுணர். பங்களாதேஷ்  நாட்டில் கிராமீன் வங்கி தொடங்கியதற்கும், சிறிய அளவிலான கடன்கள் மற்றும் நுண்ணிய பொருளாதார கொள்கை ஆகியவற்றுக்காக நோபல் விருது வாங்கி இருக்கிறார்.

ஏழைகள் இல்லா உலகம் உருவாக்க போராடி கொண்டு இருப்பவர்.

சமீபத்தில் ராகுல் காந்தி உடனான இணைய வழி உரையாடலின் ( https://youtu.be/f4J7hK_1n1E ) பொழுது இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பு தவறானதாக இருக்கிறது, அது மாற்ற பட வேண்டும் என சொல்லி இருக்கிறார். 

அவசியம் படிக்க வேண்டிய புத்தக பட்டியலில் இவரது புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

Thursday, September 10, 2020

சொத்தில் பங்கு

திரையரங்கில் காட்ட படும் விளம்பரங்களில் மூலம் வரும் வருமானத்தில் பங்கு வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

அப்படியே தங்களது படங்களை திரையிடுவதின் மூலம் நஷ்டம் ஏற்பட்டால் அதில் ஒரு பங்கை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என சொல்வார்களா ???

கொஞ்சம் இப்படியே போனால் காபி,டீ சமோசா விற்ற காசில், சைக்கிள் ஸ்டாண்ட் வாடகை காசில் எல்லாம் பங்கு வேண்டும் என சொல்வார்கள் போல.

எல்லாம் சரி, இது நாள் வரைக்கும் உங்களது படங்களை திரையில் பார்த்து உங்களுக்கு லாபத்தை கொடுத்த ரசிகர்களுக்கு உங்கள் சொத்தில் பங்கு தருவீர்களா மதிப்புக்குரிய தயாரிப்பாளர்களே.

Sunday, September 6, 2020

அய்யரா நீயு....???

வாழ்க்கையில் நான் அதிகம் எதிர்கொண்ட கேள்வி என்றால் அது "அய்யரா நீயு...?" என்பது தான். சைவ உணவுமுறையை பின்பற்றுபவன் என்பதால் அப்படி கேட்பார்கள். இல்லையென சொன்னால் "அப்ப நீங்க யாரு....?" என அடுத்த கேள்வி வரும்.

அடுத்தாய் "இப்ப எல்லாம் அய்யரே நான்-வெஜ் சாப்பிடுறாங்க...." என சொல்வார்கள். அதாவது அவர்களே சாப்பிடுகிறார்கள் நீ சாப்பிட்டால் என்ன என்பது போல் சொல்வார்கள். என் வரையில் யார் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது என் கவலை இல்லை. அவர்களுக்கு பிடித்து இருக்கிறது சாப்பிடுகிறார்கள் என இருந்துவிடுவேன். 

யாரிடமும் போய் சைவம் தான் சிறந்த உணவுமுறை என விவாதம் செய்தது இல்லை. ஆனால் என்னிடம் நிறைய பேர் வந்து அசைவ உணவுமுறைக்கு கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் தான் என்பது போல் பேசுவார்கள்.

சிலர் "இவன் அய்யர் தான் ஆனா சொல்ல மாட்டேனுங்குறான்..." என அவர்களே முடிவு செய்துவிடுவார்கள்.  இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை. 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கல்லூரி சேர்கிற வரைக்குமே சார்ந்த சாதி பற்றி தெரியாது. சாதி சான்றிதழ்  கொடுக்கும் பொழுது தான் அது பற்றி தெரிந்தது. பின் பெயரோடு சாதி பெயரையும் சேர்த்து எழுதி பார்த்தேன், அது அப்படி ஒன்றும் கவர்ச்சிகரமாக இல்லை என்பதால் வெறும் பெயரை மட்டும் வைத்து கொண்டேன்.

சிறு வயதில் இருந்தே அப்பா அம்மா இருவரும் சாதி, மதம் ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில்லை. நல்ல படிக்கணும், உங்க வாழ்க்கை உங்க கையில் என்பது மட்டும் அப்பா அடிக்கடி சொல்வார்.

ஒரு தரம் நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் ஆகியவற்றுக்கு பள்ளி சுற்றுலா போகிறேன் என அம்மாவிடம் சொன்ன பொழுது தர்காவில் உண்டியல் இருந்தால் அதில் போட பணமும், வேளாங்கண்ணி கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க காசும் அம்மா கொடுத்தார். இத்தனைக்கும் அம்மா தீவிர இந்து மத வழிபாட்டை பின்பற்றுபவர்.

பைபிள் , குர்ஆன் மற்றும் பகவத் கீதை ஆகியவை வாங்கி படிக்க கொடுத்தார் அப்பா. அப்பா எல்லா மதங்களையும் விமர்சனம் செய்வார். ஆனால் உனக்கான கொள்கையை நீ தான் தேர்தெடுக்க வேண்டும், நான் வேண்டுமானால் அதற்கு உதவி செய்கிறேன் என்று தான் அப்பா சொல்வார். 

கல்லூரி சேர்ந்த பின் பெரியாரை படித்தேன்.

நான் ஏன் சைவம் சாப்பிடுகிறேன் என கேட்டால் சிறுவயதில் இருந்தே சைவம் சாப்பிட்டே பழகி விட்டேன். அசைவம் சாப்பிட கூடாது என்றோ, பிடிக்காது என்றோ இல்லை. அசைவம் சாப்பிட்டு தான் உயிர் வாழ முடியும், சைவ சாப்பாடே இல்லை என ஒரு நிலை வந்தால் அப்பொழுது பார்த்து கொள்கிறேன்.

நான் ரொம்ப காலம் நெருக்கமாய் பழகும் நண்பர்கள் எல்லோரும் தீவிரமாக அசைவம் சாப்பிடுகிறவர்கள் தான். அவர்கள் யாரும் என்னை அசைவம் சாப்பிட சொல்லி கட்டாய படுத்தியது இல்லை.

கல்லூரி விடுதியில் கூட அவைச உணவும் இருக்கும் சைவ உணவும். நான் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தேன்.

வீட்டில் நீ அசைவம் சாப்பிட கூடாது என கட்டாய படுத்தி இருந்தால் கூட வெட்டிவீம்புக்கு சாப்பிட்டு இருப்பேன். அப்படி எதுவும் நடக்கவில்லை.

இப்படியாக வளர்ந்த என்னிடம் நீ அய்யரா என கேட்டால் எத்தனை முறை தான் இல்லை என சொல்லி கொண்டு இருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பு தான் வருகிறது. 

சரி பொதுவில் சாதி பெயரை சொல்ல கூடாது என இருப்பேன், அதையும் மீறி இம்சை தாங்க முடியாமல் சாதி பெயரை சொன்னால், எதோ எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய சாதி பட்டியலை மனப்பாடம் செய்து வைத்திருப்பது போல "அப்படி ஒரு சாதியா.... கேள்வி பட்டதே இல்லையே..." என பதில் வரும். அத்தோடு நிறுத்தி கொள்ளாமல் அது பற்றி மேலும் கேட்டு, அந்த இம்சைக்கு எல்லாம் விளக்கி பதில் சொல்லும் நிலை வந்து விடுகிறது.

அதனால் இப்பொழுது இப்படி கேட்டால் தயங்கமால் ஆமாம் என சொல்லிவிடுவேன். இல்லாவிட்டால் அப்பா காந்தியவாதி என சொல்லிவிடுவேன்.

மனிதனை மனிதனாக எந்த வித முத்திரைகளும் இல்லாமல் பார்க்க பழகி விட்டேன். என்னிடம் போய் இப்படி கேள்வி வந்தால் முன்பு கோபம் தான் வரும். ஆனால் இப்பொழுது அந்த சாதி மத கேள்விகள் எல்லாவற்றையும் நல்ல பொழுதுபோக்காக பார்க்க தொடங்கி விட்டேன்.

பின் குறிப்பு - எல்லா மனிதர்களுக்கும் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிட முழு உரிமை இருக்கிறது. அதே போல் தான் எனக்கும் சைவ உணவு சாப்பிட முழு உரிமை இருக்கிறது.

ஆனால் நான் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது பற்றி கவலை பட்டால் சிறந்த அசைவ பண்டங்களை வாங்க மாதம் 10,000 ரூபாயும், அதனை சிறந்த முறையில் சமைத்து தர சமையல் ஆள் சம்பளம் 20,000ரூபாயும் தர கேள்வி கேட்கும் நீங்கள் தயார் என்றால், அசைவ உணவை சாப்பிடுவதை பற்றி யோசிக்கிறேன்.

Tuesday, August 11, 2020

ஒலிப்புத்தகம் / Audio Book : Audible : Storytel

பம்பாய் கண்ணன், இவரை எஸ்.வி.சேகரோடு பெரிய மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளை நாடகத்தில் நடித்தவர் என்றளவில் தான் அறிமுகம். ஆனால் சமீபத்தில் இவரும் இவரது குழுவினரும் இணைந்து வழங்கி இருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா ஆகிய நாவல்களின் ஒலி வடிவத்தை கேட்டு பிரமித்திருக்கிறேன். அதனை ஒலி நாடகம் என வகை படுத்திப்பட்டு இருந்தாலும் ஒலி நாடகமாக இல்லாமல் ஒலிப்புத்தகமாக தான் இருக்கிறது.  

தமிழில் இப்பொழுது தான் ஒலி புத்தகங்கள் பெரியளவில் வர ஆரம்பித்து இருக்கிறதென்றாலும் ஆங்கிலத்தில் பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது. 

அதில் என்ன பிரச்சனை என்றால் பம்பாய் கண்ணன் குழுவினரது ஒலி புத்தகங்கள் தவிர்த்து மற்ற ஒலி புத்தகங்கள் எல்லாம் ஏற்ற இறக்கத்துடன் இல்லாமல் தட்டையாக இருக்கிறது. 

ராஜேஷ்குமார் நாவலை படிக்கும் பொழுது மனதிற்குள் ஏற்படும் பரபரபப்பு யாரோ ஒரு பெண்மணி வாசிக்கும் பொழுது கதையின்  சுவாரசியமே இல்லாமல் போய் விடுகிறது. 

தமிழியில் இப்பொழுது தான் புத்தகங்கள் ஒலி வடிவில் வர ஆரம்பித்திருப்பதால் பல குறைகள் இருக்க தான் செய்யும். மேலும் புத்தகத்தை சுவாரசியமாக ஒலி வடிவத்திற்கு வாசிக்கும் நபர்கள் அதிகம் இல்லை. 

தமிழ் ஒலி புத்தகங்கள் அதிக லாபம் தருமொன்றாக மாறும் காலத்தில் திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள் நிச்சயம் கால் பதிப்பார்கள். 

இதுவரையில் சரித்திர நாவல்கள் ஒலி வடிவமாக கள்ள பதிப்பில் தான் கிடைத்தது. அதாவது யாரோ ஒருவர் குறிப்பிட்ட அந்த சரித்திர நாவல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது குரலில் நாவலை வாசித்து நிழற்படத்துடன் காணொளியாக யூட்யூப்பில் பதிவேற்றி இருப்பார்கள்.

ஆனால் சட்டரீதியான தமிழ் ஒலி புத்தக பதிப்பு பல செயலிகளில் கிடைக்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் Audible, Storytel போன்ற பிரபல செயலிகள். இதில் ஒரு புத்தகம் மட்டும் வாங்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் மாத சந்தா அல்லது வருட சந்தாவில் மேலே குறிப்பிட்டுள்ள செயலிகளில் ஒலி புத்தகங்கள் கிடைக்கிறது. கூகிள் புத்தகங்கள் என்ற செயலில் மட்டுமே தனி ஒலி புத்தகமாக வாங்க முடியும் என தெரிகிறது. தனி ஒலி புத்தகமாக வாங்கினால் பல நூல்களின் விலை கைக்கு அடங்காத ஒன்றாக இருக்கும்.

நீங்கள் தமிழ் நாவல்கள் மட்டுமே வாசிப்பேன் என இருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பல எழுத்தாளர்களது புத்தகங்கள் ஒலி வடிவில் இல்லை. 

பிரபல தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டு வந்தால் இன்னும் பலரை தமிழ் வாசக பரப்பில் இணைக்க முடியும்.

Saturday, August 8, 2020

கலவை - நெபோடிசம் / ஃபேஸ்புக் / அயோத்யா ராமர் கோயில்

ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவருக்கு ரிச்சா பனாய் என்னும் நடிகையை நான் Follow செய்வதாய் காட்டி இருக்கிறதாம். அவரும் எனக்கு ஏன் இப்படி என்பது போல பதிவு எழுதிருக்கிறார்.

அவரை ஃபாலோ செய்வதும் செய்யாமல் இருப்பதும் பெரிய விஷயம் இல்லை. ஃபாலோ செய்தால் அதை மறுக்கவும் மாட்டேன்.

நான் ஃபாலோ செய்யாத ஒருவரை, அப்படி செய்வதாக என் நட்பு வட்டத்தில் இருப்போருக்கு ஏன் ஃபேஸ்புக் இப்படி காட்ட வேண்டும் ???

வியாபார தந்திரத்தை இப்படி என் பெயரை வைத்து பயன்படுத்த வேண்டுமா ???
- - - - -
"நடிகர்கள் தன் மகன்/மகளை ஆடிசன் பண்ணாமல் சொந்த படத்தில் அறிமுகபடுத்துவது நெபோடிசம்" - சூப்பர் மாடல்

அப்ப எங்க அப்பா அம்மா என்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தது எல்லாம் நெபோடிசம் கீழ வருமா ???

நெபோடிசம் என்றால், அதே நடிகர்கள் தங்களது மகனுக்கு போட்டியாக வேறு ஒருவரை வர விடாமல் செய்வது தான் நெபோடிசம்.

- - - - -
அயோத்யாவில் ராமர் கோயில் கட்ட போகும் வேளையில்...

அயோத்யா ராமர் கோயில் நில வழக்கு மொத்தம் 132 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த 132 ஆண்டுகளாக அதனை மையப்படுத்தி பல்வேறு அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் நடந்துள்ளது. 

அந்த நிகழ்வுகளையும் ஆவன செய்ய வேண்டும். அதனை நல்ல புரிதலோடு எழுத வேண்டும். 

மேலும் இந்த 132 ஆண்டு வழக்கு ஆயுளின் 500 வருட கடந்த காலத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

நினைப்பது சரியென்றால், 2021 ஆம் ஆண்டின் புத்தக திருவிழாவில் இந்த தலைப்பில் புத்தகங்கள் ஏகப்பட்டது வரும்.

நடுநிலைமையுடன் வரும் புத்தகம் சரித்திரத்தில் இடம்பெறும். அதில் சந்தேகம் இல்லை.

- - - - -

Wednesday, August 5, 2020

Alumbunaties : The Hostel Days :: Nakkalities

Alumbunaties : The Hostel Days

நக்கலைட்ஸின் நகைச்சுவை தொடர் யூடியூபில் வெளிவந்து வெற்றிகரமாக பலரது பாராட்டுகளைப் பெற்று கொண்டு இருக்கிறது. மேலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது இத்தொடர். பலர் தங்களது கல்லூரி கால விடுதி நாட்களை நினைவு படுத்துகிறது எனவும் மீண்டும் கடந்து வந்துவிட வாழ்க்கையை வாழ வைக்கிறது இந்த தொடர் என சொல்கிறார்கள்.

தொடர் வந்த சமயத்தில் பார்க்கவில்லை, சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் சொல்லிய பின்னரே பார்த்தேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் விழுந்து விழுந்து சிரித்தேன் என சொன்னால் இருக்கும். அதுவும் "சிடுமூஞ்சி சீனியர்" அத்தியாய முடிவில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு சிரித்து கொண்டு இருந்தேன். ஏனென்றால் அந்த அத்தியாயத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மொத்தம் ஒன்பது அத்தியாயம் : ஒவ்வொன்றும் அத்தனை தரம்.... வாய்ப்புகளே இல்லை. டிவிட்டரில் ஒருவர் சொன்னது போல தமிழ் இணைய தொடர் இயக்குநர்களுக்கு SITCOM தொடர் என்றால் எப்படி எடுக்கப்பட வேண்டும் என உட்கார வைத்து பாடம் எடுத்து இருக்கிறார்கள்.

அதிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கான நடிகர்களின் தேர்வு அவ்வளவு கனகச்சிதமாக இருக்கிறது.

சித்து, ஜோ,சுடலை வேம்பு, பாஷீர் மற்றும் இவர்கள் கண்டு மிரளும் வார்டன் ஆள்துரை ; எல்லோரும் மனத்தில் தங்கிவிட்டார்கள். அதுவும் பாஷீரின் மலையாளம் கலந்த தமிழில் எந்தாடா சித்து என சொல்வது அத்தனை அழகாக இருக்கிறது. 

பொதுவாக இம்மாதிரியான கல்லூரி விடுதி சம்பந்தப்பட்ட தொடர் என்றால் தரமற்ற நகைச்சுவை இருக்க வேண்டும், அதனை விட்டால் தரமாக எதுவும் சொல்ல முடியாது என்பது போல் எடுத்து இருப்பார்கள்.கிடைக்கிறது.. ஆலும்புனாடீஸ் தொடரை குடும்பத்தோடு பார்க்கலாம். ஒரு துளி ஆபாசம் இல்லை.

ஒவ்வொரு தொடரும் சுமார் 20 நிமிடங்களில் இருந்து 25 நிமிடங்கள் வரை இருக்கிறது. வாரயிறுதியை கொண்டாட நல்லதொரு தொடர். 

யூட்யூப்பில் நக்கலைட்ஸ் சேனலில் பார்க்க கிடைக்கிறது.

விடுதி வாழ்க்கை என்பது ஒரு தனி உலகம். அதனை அனுபவித்தவர்களுக்கு இந்த தொடர் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விடுதி வாழ்க்கையை அனுபவிக்காதவர்களுக்கும் இத்தொடர் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் தான் இதன் சிறப்பு.

எல்லா அத்தியாயங்களை பார்த்த பிறகு நீங்கள் கண்டிப்பாக பாஷீர் மற்றும் சுடலை வேம்பு ஆகியோரின் ரசிகர்களாக மாறி இருப்பீர்கள்.

முக்கிய குறிப்பு - இத்தொடரின் முகப்பு பாடலான Hostel Anthem பாடலை தனி பதிவாக கேட்க கிடைக்கிறது. தொடரை பார்த்த பின் இந்த பாடல் உங்களுக்கு பிடித்து போகும்.

Friday, July 31, 2020

கூடலழகி - கொண்டாட்டம்

பிடித்த எழுத்தாளரின் தொடர் ஒன்று வார இதழில் வர போகிறது என தெரிந்தால் எத்தனை கொண்டாட்டமாக இருக்கும் ; 1990களில் விகடனில் வந்த மதன், தேவிபாலா மற்றும் பலரது தொடரின் முதல் அத்தியாயத்தை படிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன்.

Kaalachakram Narasimmaa அவர்கள் கல்கி இதழில் எழுத ஆரம்பித்திருக்கிற இந்த தொடரின் அறிவிப்பை படித்ததும் அதே கொண்டாட்ட மனநிலையை அடைந்தேன்.

அதிலும் ஆதித்ய கரிகாலன் மரணத்தை பின்புலமாக கொண்டு சங்கதாரா என்னும் நாவலை எழுதிவிட்டார்.ஆனாலும் திரும்பவும் கதைகளமாக கொண்டு ஒரு தொடர்....

கதை எப்படி போகும் என ஆவலுடன் படிக்க போகிறேன்.
வாழ்த்துகள் சார்.

கல்கி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய நாவல்களின் மூலம் நடந்த ராஜபாட்டையில் மனம் கவர்ந்த எழுத்தாளர் பயணிக்க போகிறார் என்பதே மற்றொரு கொண்டாட்டமாக இருக்கிறது.

பின் குறிப்பு - தொடரில் இவர் தரும் குறிப்புகளை குறித்துக்கொள்ள நாட்குறிப்போடு படியுங்கள். இவர் தரும் குறிப்புகள் கொண்டே இரண்டு மூன்று சரித்திர நாவல்கள் எழுதிவிடலாம்.

Sunday, July 19, 2020

சங்கதாரா - காலச்சக்கரம் நரசிம்மா

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களெழுதிய சங்கதாரா நாவலை இன்று காலை படிக்க ஆரம்பித்து மதியம் மூன்று மணிக்கு எல்லாம் படித்து முடித்து விட்டேன். 

ஒரு சரித்திர புதினத்தை படிக்கின்றோம் என்ற உணர்வே இல்லாமல் அடுத்தது என்ன என்ற ஆவலை பக்கத்திற்கு பக்கம் ஏற்படுத்திகொண்டே செல்கிறார் ஆசிரியர். 

முக்கியமாக முன்னுரையிலேயே வாசகர்களை ஒரு சரித்திர கால பயணத்திற்கு தயார் செய்து விடுகிறார் ஆசிரியர். அதுவும் முகவுரை படிக்காமல் செல்வோருக்கு சுவாரசிய நஷ்டம். 

சம்பவங்களை தொடர்ச்சியாய் சொல்லாமல் அடுக்கு அடுக்காய் கதை போகிறது, அப்படி போவதினாலேயே நாவலின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்விற்கான பதில் அல்லது தொடர்ச்சி நாவலின் இறுதியில் வரும். அப்படி எழுதபட்டு இருப்பதே தனி சுவாரசியத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கிறது.

முக்கியமாக சரித்திர நாவல் என்பது தரவுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட வேண்டும். ஆசிரியர் அதனை சரியாக செய்திருக்கிறார்.

படைப்புகள் வாசிப்பது என்பது அப்படைப்பிற்குள், படைப்பின் வழியாக நாம் மேற்கொள்ளும் ஒரு பயணம். எல்லா படைப்புகளையும் முன் முடிவுகளின்றி வாசிக்க பட வேண்டும். அப்படி வாசித்தது சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது.

எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா!

தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் புத்தகங்களை படிக்க கூடாது என்கிற பழக்கத்தையும், ஆண்டுக்கு ஒரு சரித்திர நாவல் தான் படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தையும் மாற்றி வைத்திருக்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா.

அத்திமலைத்தேவன், சங்கதாரா ஆகிய நாவல்களை தொடர்ந்து இந்த ஆண்டில் மூன்றாவதாக அவரெழுதிய  அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா! நாவலை படிக்க எடுத்திருக்கிறேன். நாவல் எதை பற்றியது என தெரியவில்லை, எந்தவித முன் முடிவுகளுமில்லாமல் காலச்சக்கரம் நரசிம்மா என்ற பெயருக்காக .....

எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு புத்தகம் வாங்க போகையில் பரிந்துரை பெயரில் வாங்கி, சரி வாங்கிவிட்டோம் அப்படி என்ன தான் இருக்கிறது என படித்து தான் பார்ப்போமே என சட்டென்று முடிவெடுத்து பஞ்ச நாராயண கோட்டம் நாவலை படிக்க ஆரம்பித்தேன். முதல் சில பக்கங்கள் கடக்கிறவரைக்கும் வாசிப்பு அனுபவமாக இருந்தது அதன் பிறகு புத்தகத்தை முடிக்கிற வரைக்கும் நிகழ்ந்தது எல்லாம் மாயாஜாலம் தான். ஹோய்சாலப் பேரரசு, இராமானுஜர், விஷ்ணுவர்த்தன், சாந்தலா என  வாசிப்பின் வழி நிகழ்ந்த காலப்பயணம். பரவச அனுபவம்.

அதன் பிறகு அவரது படைப்புகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொன்றும் தனி உலகத்தை ஏற்படுத்தி தனி மாயாஜால அனுபவங்களை தந்தது.

அதே போல் ஒரு மாயாஜால காலப்பயண அனுபவத்தை அனுபவிக்க ......

அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா...!!!

Sunday, June 28, 2020

பா.ராகவன் - நட்பு வட்டம்

பா.ராகவன் எந்நாளும் நல்ல வாசகராக உருவாகவே முடியாது என கூறி  என்னை நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விட்டார்.இத்தனைக்கும் அவரது புத்தகங்களை விரும்பி படிப்பேன் என அவரிடமே சொல்லிருக்கிறேன். 

என்ன நடந்தது ???

இந்த 2020 புத்தக திருவிழாவில் அவர் எழுதிய என் பெயர் எஸ்கோபர் புத்தகத்தை வாங்கினேன். சமீபத்தில் படித்த நல்ல புத்தகம்.சில நாட்களுக்கு முன்பு அந்த புத்தகம் ஒரு நாளைக்கு மட்டும் அமேசான் கிண்டிலில் இலவசமாக கிடைக்கும் என குறிப்பிட்டு இருந்தார். இதை அன்றே சொல்லிருந்தால் எனக்கும் கொஞ்சம் பணம் மிச்சம் ஆகி இருக்கும். ( https://m.facebook.com/story.php?story_fbid=2696826930644905&id=100009528732084 )

சரி எதோ வியாபாரம்... அடுத்த புத்தகத்திற்கான மார்க்கெட்டிங் என எடுத்து கொண்டாலும், காலையிலிருந்து இரவு வரைக்கும் வெயிலில் சுற்றி கஷ்ட பட்டு சம்பாதித்த பணத்தை மிச்சம் படுத்திருக்கலாமே. போனால் போகட்டும் என நினைக்குமளவிற்கு தாராள பண போக்குவரத்து இல்லை.

பணத்தை மிச்ச படுத்திருப்பேனே என எப்பொழுதாவது இந்த புத்தகத்தை அமேசான் கிண்டிலில் இலவசமாக கொடுக்கும் பொழுது படித்து கொள்கிறேன் என சொன்னேன். 

அதற்கு நீங்கள் எல்லாம் நல்ல வாசகராக உருவாகவே முடியாது என சொல்லி விட்டார். நட்பு வட்டத்திலிருந்து தூக்கியது கூட பெரும் பிரச்சனை இல்லை. சிறு வயதில் இருந்து பழகிய நண்பன் புரியாமல் சண்டை போட்டு கொண்டு பேசாமல் இருந்தான், அவனிடம் கூட நான்கு வருடங்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். 

ஆனால் எதோ என்னை பற்றி முழுமையாக தெரிந்தது போல இப்படி சொல்லி விட்டாரே என்ற வருத்தம் தான்.

மேலும் நல்ல வாசகராக ஏன் உருவாக வேண்டும் என்பதற்கான காரணத்தையும் சொல்லாமல் போய் விட்டார் ; எனக்கு தெரிந்து எழுத்தாளர்களுக்கு வரும்படி வர வேண்டும் அல்லது தங்களது அறிவாளி தனத்திற்கு பக்தர்கள் உருவாக வேண்டும். 

ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்த இருந்த நான், படித்து முடித்த பின்னார் இருக்கும் நான் பழைய நான் இல்லை. அந்த புத்தகத்தில் இருக்கும் எழுத்துகள் வாசகனை மாற்றியிருக்க வேண்டும். 

நல்ல வாசிப்பு என்பது எல்லா மனிதரிடமும் அன்பு செலுத்த சொல்லி தர வேண்டும், மனிதர்களை புரிந்துகொள்ள வைக்க வேண்டும், கோபமடையாமல் வைக்க வேண்டும்.... இவை அனைத்தும் வாசிப்பு வாசகனுக்குள் செய்ய வேண்டும். 

வாசிப்பு என்பது இல்லாமலேயே இவற்றை நான் செய்து கொண்டு இருக்கிறேன். பின் ஏன் நான் நல்ல வாசகனாக உருவாக வேண்டும்.

மேலும் யாராது டெலிகிராம் செயலி மூலம் கள்ள பதிப்பை தரவிறக்கம் செய்து படித்துவிட்டு அல்லது இலவசமாக வாங்கி படித்துவிட்டு விமர்சனம் எழுதினால், அதனை தங்களது அடுத்த புத்தகத்தை சந்தை படுத்த பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் ஒருவன் நேர்மையாக, நேர்மையான வழியில் செலவின்றி புத்தகத்தை படித்து கொள்கிறேன் என சொன்னால் இப்படி கோபமடைகிறார்கள்.

அது ஏன் சார் ஒருவன் நல்ல வாசகனா இல்லையா என கண்டுபிடிக்க ஏதேனும் தர கட்டுப்பாட்டு கருவி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா எழுத்தாளர் சார் ???

ஒரு கடையினுள் போய் அங்கிருக்கும் ஒரு பொருளை பிடிக்கவில்லை அதனால் வாங்க மாட்டேன் என சொன்னால் அந்த பொருளை நான் ஏன் வாங்க வேண்டும் என அங்கு இருக்கும் விற்பனை பிரதிநிதி பத்து காரணங்கள் சொல்வார்.

சொல்லி கொள்வது ஒன்றே தான் அமேசான் கிண்டிலில் புத்தகங்களை வெளியிடும் எழுத்தாளர்களது புத்தகங்களை அவசரபட்டு வாங்கி விடாதீர்கள், சில நாட்கள் கழித்து இலவசமாக அந்த புத்தகத்தை தருவார்கள்.

ஜெய சம்ஹிதா / மகாபாரதம்

ஜெய சம்ஹிதா..... தமிழில் மொழிபெயர்த்தால் வெற்றிகளின் தொகுப்பு. மொத்தம் 8800 பாடல்களை கொண்ட இக்காவியம் தான் உண்மையான மகாபாரதத்தின் வடிவம். 

இது மகாபாரத போரை பற்றியும் அதில் & அதனால் ஏற்பட்ட வெற்றி தோல்விகளை பற்றியும் பேசுகிறது. இதனை தான் வேத வியாசர் எழுதினார் என சொல்ல படுகிறது. இதில் மகாபாரதத்தில் வருவது போல் கதைகள் என எதுவும் இல்லை. அவை எல்லாம் பிற்பாடு மகாபாரதம் உருவான பிறகு வட இந்தியாவில் பற்பல கிராமங்களில் வழக்கத்தில் இருந்த செவி வழி கதைகள் எல்லாம் சேர்க்க பட்டவை.

மகாபாரதம் என்பதை ஒரு இந்திய புராண கதை என அடக்கி விட முடியாது. திபெத், இந்தோனேசியா ஆகிய ஊர்கள் இருக்கும் கதைகளுக்கும் மகாபாரதத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

அவ்வளவு ஏன் தாய்லாந்து நாட்டில் இராமாயண கதையின் மற்றொரு வடிவமான ராமகியன் என்கிற புராண கதை வழக்கத்தில் இருக்கிறது. இதில் ஹனுமானது கதாப்பாத்திரம் இந்திய இராமாயண கதையிலிருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.

மேலும் பாலு நாட்டு புத்த மத கதையில் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் பற்றிய குறிப்பும் இருக்கிறது.

ஜெய சம்ஹிதா தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை. இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் படிக்க கிடைக்கிறது.  அமேசானில் ஜெய சம்ஹிதா முழு புத்தகம் விலைக்கு கிடைக்கிறது.

இணையத்தில் படிக்க https://archive.org/details/jayakhya/page/n7/mode/1up

மேலும் மகாபாரதத்தை பற்றி சில இலக்கியவாதிகள் எழுதி இருக்கிறார்கள், எழுதி கொண்டும் இருக்கிறார்கள் ; அவர்களில் யாரும் இந்த புத்தகத்தை பற்றி குறிப்பிடவில்லை.

Monday, April 27, 2020

EXTRACTION 2020

சபாபதி என்னும் படத்தில் டி.ஆர்.ராமசந்திரன் அவர்களது புகழ்பெற்ற நகைச்சுவை ஒன்றுள்ளது பரீட்சை தாளில் ரயில் எப்படி ஓடும் என்பதை "விலாவாரியாக" எழுதி இருப்பார். எப்பொழுது பார்த்தாலும் வாய் விட்டு சிரித்து விடுவேன்.

அதே போல் இந்த படத்தின் கதையை எழுதும் போது டுமீல் , டிச்சூகுல் என மட்டும் வார்த்தைகளுக்கு பதிலாக போட்டு எழுதி விட்டார் போலும்.

சண்டை படம். பார்க்கலாம்.

வழக்கமாய் சண்டை காட்சியில் நடிகர்களு எவ்வளவு அடி, எத்தனை தையல் போட்டு இருப்பார்கள் என யோசிப்போம். ஆனால் இந்த படத்தில் ஒளிப்பதிவாளருக்கு எத்தனை அடி தையல் என கேட்குமளவிற்கு மிரட்டி இருக்கிறார் ஒளிப்பதிவில். 

கடைசி காட்சி ஐந்து நொடிகள் கூடுதலாய் வைத்திருக்கலாம்.

நம்ம தோர் தான் நாயகன். எங்க சுத்தியல காணோமேன்னு தேடினா, மனுஷன் அதைய காண்ட்ராக்டர் நேசமணி தலை ல போட்டுட்டு துப்பாக்கியோட வந்து இங்கன டமால் டுமீல் பண்ணிட்டுருக்காரு.

முக்கியமா ஏரியாவுல பெரிய கைன்னு வில்லன காட்டிட்டு, கொசுவுக்கு ஹிட் அடிக்குற லவங்கத்துல டீல் பண்ணிருப்பது ரொம்ப வருத்தங்களா இருக்கீ.

ஒரு தடவை பார்க்கலாம்.

Sunday, April 26, 2020

DEJA VU (2006) - Time Travel Thriller

நிகழ் காலமும் எதிர்காலமும் ஒரே நேரத்தில் அதனதன் போக்கில் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டு இருப்பவை தான். இப்படத்தை புரிந்துகொள்ள அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விதி. 

மேலும் தேஜா வூ என்றால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பவை எல்லாம் நமக்கு ஏற்கனவே நடந்து இருப்பது போல் தோன்றுவது. அது உண்மையில் நடந்திருக்கலாம் அல்லது அவையெல்லாம் வெறும் எண்ண அலைகளாக கூட இருக்கலாம். இதனை படத்தில் அழகாக கையாண்டு இருப்பார் இயக்குநர். 

மேலும் இப்படத்தை காண்கையில் வரிசைபடி வரும் எல்லா காட்சிகளும் உற்று கவனிக்க வேண்டும். ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகனது நண்பன் கொலை நடந்த இடத்தில் துப்பறிகையில் கைபேசியில் நாயகனை அழைத்து .... "விசாரணை பண்ணுறப்ப பார்த்து பண்ண கூடாதா ... பாரு உன் கைரேகை நிறைய இடத்துல விட்டுட்டு போயிருக்க..." என சொல்வான். பார்த்து கொண்டு இருக்கும் பொழுது இந்த வசனம் வருகையில் சந்தேகம் வர தான் செய்யும் ஏனென்றால் அதற்கு முன்பு வரும் காட்சியில் நாயகன் கையுறை அணிந்து கொண்டு தான் அங்கு வந்திருப்பான் (நினைவில் அவ்வாறு தான் படிந்திருக்கிறது). இந்த சந்தேகத்தோடு இருக்க வேண்டும் என இயக்குநர் திட்டமிட்டு இருக்கிறார் என்பது அதற்கான பதிலாக வரும் காட்சியை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது.

அதே போல் படத்தின் முடிவு புரியவில்லை என சொல்வோருக்கு அதற்கான பதிலை நாயகனுக்கு சக ஊழியர் தொழில்நுட்பத்தை விளக்கும் காட்சியில் வைத்திருக்கிறார்.

படத்தின் பலமென பார்த்தால் இறந்த காலத்தில் போகும் கொலைகாரனை நிகழ்காலத்தில் நாயகன் துரத்துகிற காட்சி தான். இதனை கால பயணத்தின் அடிப்படை விதியை கொண்டு புரிந்து கொள்ளலாம் (நிகழ் காலமும் எதிர்காலமும் ஒரே நேரத்தில் அதனதன் போக்கில் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டு இருப்பவை தான்).

கால பயணத்தின் விதியின்படி கொலைகாரனது நிகழ் காலத்தின் எதிர்காலத்தில் நாயகன் அவனை துரத்துகிறான். அதற்கு உதவி செய்வது ஒரு விஞ்ஞான கருவி. 

அந்த விஞ்ஞான கருவியை கொண்டு நிகழ்ந்தவையை நாயகன் புரிந்துகொண்ட பின், அவன் கால பிரயாண கருவியின் மூலம் கடந்த காலத்திற்கு போகிறான். 

கதை.

அப்படி போன நாயகன் இறந்துவிட பின் எப்படி உயிருடன் வருகிறான் ???

இதனை கால பயண விதியை கொண்டு புரிந்து கொள்ளலாம். 

போய் கொண்டு இருக்கும் கோட்டில் (முதன்மை கோடு) இருந்து ஒரு கிளை கோடு பிரிந்தால், இரண்டும் வெவ்வேறு கோடுகளாகி விடும். ஒரு கட்டத்தில் கிளை கோடு அழிந்தாலும் போனாலும் முதன்மை கோடு அதன் போக்கில் போய் கொண்டு இருக்கும். 

படம் ஏற்கனவே பெரிதும் அறிமுகமானது என்பதால், அந்த அறிமுக படுத்தும் வேலையை செய்யவில்லை.

படம் ஒரு அட்டகாசமான த்ரில்லர்.

Friday, April 24, 2020

நாளைய மனிதன் (1989) & அதிசய மனிதன் (1990) : தமிழின் முதல் ஸோம்பி படம்

அப்பொழுது எங்கள் ஏரியா கேபிள் கடை வந்திருந்த பன்னீர்செல்வம் அண்ணன் விடுமுறை தினமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு படங்களாக கேபிள் டிவியில் போடுவார்.அப்படி இரண்டு மூன்று நாட்கள் இடைவேளையில் தான் இந்த  இரண்டு படங்களை ஒளிபரப்பினார். 

பெரும் வெற்றி பெற்ற இந்த இரு திரைபடங்களையும் இயக்கியவர் வேலு பிரபாகரன். ஆம் வேலு பிரபாகரனே தான். இந்த படத்தில் அப்பொழுது நட்சத்திர நாயகனாக இருந்த (மைக்) மோகன் கௌரவ வேடத்தில் வந்து போவார். 

தமிழின் முதல் ஸோம்பி படமான இதில் அஜய் ரத்னம் இரு பாகங்களிலும் ஸோம்பியாக நடித்திருப்பார்.

முதல் பாகம் :

கதை 2008ல் நடப்பதாக காட்டி இருப்பார்கள். எய்ட்ஸ் நோயிற்கு (1980களின் இறுதியில் வந்த படம், அந்த காலம் வரைக்குமே தமிழக திரைப்பட கதாபாத்திரங்கள் கேன்சர் என்கிற கொடிய நோய்க்கு பலியாகி கொண்டு இருந்தனர்) மருந்து கண்டுபிடித்த மருத்துவர் தனது அடுத்த ரகசிய ஆராய்ச்சியான இறந்த மனிதனை மீண்டும் உயிர்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் பரிசோதனை முறையில் இறந்த ஒருவனுக்கு மீண்டும் உயிர் அளிக்கிறார்.

அந்த மர்ம மனிதன் எல்லோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கிறான் (ஏன் என்ற விளக்கம் வசனங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும்). அந்த நிலையில் காவல் அதிகாரியும் அவனது காதலியும் மாட்டி கொள்கிறார்கள். 

நடக்கும் பூனை எலி போராட்டத்தில் அந்த மர்ம மனிதனை துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான்.

 இரண்டாம் பாகம் :


சில வருடங்கள் பிறகு நண்பர்கள் குழு விடுமுறையை கழிக்க் விடுதிக்கு வருகிறார்கள். விடுதிக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்திருக்கும் மர்ம மனிதனுக்கு நினைவு வருகிறது. அவன் இறக்கவில்லை.

வந்து அந்த விடுதியில் இருக்கும் எல்லோரையும் கொலை செய்கிறான், அந்த குழுவில் இருக்கும் ஒரு பெண் தப்பித்து அவனை கொலை செய்கிறாள்.

ஆனால் அதிலும் அவன் இறக்கவில்லை, மூன்றாம் பாகத்தில் வருவான் என படம் முடியும். ஆனால் பெரும் நஷ்டம் காரணமாக மூன்றாம் பாகம் எடுக்கப்படவில்லை. 

இரண்டாம் பாகத்தில் ஒரு பின்னணி இசை ஒன்று வரும் அதற்கு பயந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது. 

அதிக செலவு செய்து இன்னும் நன்றாக முயன்று இருந்தால் தமிழில் இந்த இரு படங்களும் Cult Classicகளாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது கூட இவற்றை ரீமேக் செய்யலாம். 

படத்தின் தரமான பிரதி காண கிடைப்பதில்லை. இணையத்தில் சுமாரன பிரதி தான் கிடைக்கிறது.

இன்றைய சூழலில் அதி பயங்கரமான படங்கள் வந்துவிட்ட நிலையில் இந்த படம் எதோ குழந்தைகள் படம் போல தான் தெரியும். ஆனால் எடுக்கப்பட்ட காலத்தில் இது ஒரு முற்றிலும் புதுமையான முயற்சி தான்.

Thursday, April 23, 2020

BIRBAL TRILOGY : CASE 1 FINDING VAJRAMUNI {KANNADA :: 2019}


சமீப காலத்தில் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த INVESTIGATE THRILLER எனபிதனை தைரியமாக சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி என தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைத்து கொண்டு இருப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெறுகிறார்.

ஒரு கொலை நடக்கிறது, அதனை பற்றி சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது : நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான். 

இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி ஏழை மக்களது  வழக்குகளை இலவசமாக நடத்த முடிவெடுக்கிறது. அப்பொழுது அங்கு வேலைக்கு சேரும் மகேஷ் தாஸ் என்பவன் இந்த வழக்கை எடுக்கிறான். 

ஏன் இந்த வழக்கு??? 

எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான சாட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மகேஷ் தாஸ் பூஜ்ஜியத்தில் இருந்து வழக்கை தொடங்குகிறான்.

யார் இந்த மகேஷ் தாஸ் ???

படம் பார்த்து கொண்டு இருப்போரை கதையோடு ஒன்ற செய்து, தான் நினைக்கும் விதத்தில் பார்வையாளர்களை யோசிக்க வைப்பதில் தான் ஒரு இயக்குநரில் திறமை இருக்கிறது. 

முக்கியமாக கொலை இப்படி நடந்திருக்கும் என சொல்கிற காட்சியில் வரும் கிராபிக்ஸ் வேலைபாடு எல்லாம் .... வேற லெவல்.

நிறைய துப்பறியும் படங்களில் கதாநாயகனை அறிமுக காட்சியில் சோம்பலாக, ஒழுங்கற்ற அறையில் இருப்பது போல் காட்டி இருப்பார்கள் (அறிவாளியாம்). ஆனால் இந்த படத்தில் கதாநாயகனது அறிமுக காட்சியிலேயே இந்த வழக்கை நாயகன் எப்படி கொண்டு செல்வான் என பார்வையாளனை தயார் படுத்தி விடுகிறது படத்தின் திரைகதை. 

அதுவும்  வழக்கை புரிந்துகொள்ளும் காட்சி, கடைசியில் வரும் சுய விளக்க காட்சி எல்லாம் மிகவும் ரசித்த ஒன்று. 

ஆரம்ப பெயர் சான்றுகள் (Title card), பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் படத்தின் பார்வையாளனை கதையோடு ஒன்றி போக செய்கிறது.

* எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் - படத்தின் இயக்குநரும் கதாநாயகனும் இவர் தான். குறும்பட அலையில் இருந்து கன்னட திரையுலகில் வந்திருக்கும் முத்து. திரைப்பட இயக்குநராகுவதற்கு முன்பே தனது திறமைகளை நிரூபித்தவர். ஆழ்ந்த இலக்கிய வாசிப்பாளர். இவரது முதல் படமான ஸ்ரீனிவாஸா கல்யாண பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவும் பார்க்க வேண்டிய ஒன்று. 

முதல் படம் வாழ்வியல் தத்துவத்தை எடுத்தவர், துப்பறியும் கதையை இரண்டாம் படமாக எடுத்திருக்கிறாபடம்.

விரைவில் வெளிவர இருக்கும் இவரது அடுத்த படமான OLD MONK (பழைய சந்நியாசி) புராணத்தில் வரும் நாரதர் நவீன காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும் ... அது தான் கதை. *

அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

Tuesday, April 21, 2020

பொன்னியின் செல்வன் :: Ponniyin Selvan / ஒலி புத்தகம் :: Audio Book

பொன்னியின் செல்வனை நாவலை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புத்தகம் + ஒலி புத்தகம் என இரண்டையும் ஒன்றன வாசித்தபடியே கேட்டும், கேட்டபடியே வாசித்தும் நாவலை நுகர்ந்து கொண்டு இருக்கிறேன்.

பம்பாய் கண்ணனின் பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் நாடக வடிவில் இருப்பதினால் ; செந்தில் குமார் மற்றும் ஆர்.ஜே.ஜனா ஆகியோரது குரலிலிருக்கும் இந்த ஒலி புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன்.வரிவரிக்கும் வார்த்தைகள் அவ்வாறே துல்லியமான உச்சரிப்பு தேனூட்டுகிறது. 

ஆனால் பொன்னியின் செல்வனை வாசிக்கும் பொழுது எல்லோருக்கும் மனதில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் தனி குரல் கொடுத்திருப்போம், அம்மாதிரி உருவக படுத்தியோருக்கு இவ்வடிவம் அந்நியமாக இருக்கலாம்.

எப்படியோ இப்படி வாசிப்பதும் தனி சுவையாக தான் இருக்கிறது. 

ஒலி புத்தகம் - Storytel
புத்தகம் - பெரியம்மா கொடுத்தது.

Sunday, April 19, 2020

கூகிள் வாய்ஸ் டைப்பிங் / Google Voice Typing

நான் வீட்டிலிருந்து போடுற போஸ்ட் எல்லாம் கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல தான் போடுவேன். என்ன வெளியில இருக்கும்போது  சும்மா பேசிக்கிட்டே டைப் பண்ண பார்க்கிறவங்க ஒரு மாதிரி பாப்பாங்க.

பெரிய போஸ்ட் எழுதணுமுன்ன கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல தான் பண்ணுவேன். அப்புறம் பிற்பாடு வரிக்கு ஏத்தமாதிரி எடிட்டிங் பண்ணிடுவேன். அப்படி எடிட்டிங் பண்ணும்போது செல்லினம் யூஸ் பண்ணுவேன்.

இது நான் காலங்காலமா பயன்படுத்தற விஷயம்தான். கூகுள் வாய்ஸ் டைப்பிங்ங்குறது இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப நாளாவே இருக்கு.

கூகுள் வாய்ஸ் டைப்பிங் ல குரல வெச்சு மட்டுமில்ல நம்ம எழுதி கூட போஸ்ட் போடலாம் அதுக்கு கூட ஆப்ஷன் இருக்கு. 

கூகுள் வாய்ஸ் டைப்பிங்கில் ஒரு பெரிய கட்டுரை எழுத போறீங்கன்ன முக்கியமான விஷயம், நடுவில் யாரும் வந்து பேசாத மாதிரி பார்த்துக் கொள்ளவும். என்ன பேச போறீங்க இல்ல என்ன டைப் பண்ண போறீங்க என்றது முன்னாடியே யோசனை பண்ணி வச்சிக்கோங்க. என்ன நீங்க சொல்றத அப்படியே அங்க டைப் ஆயிடும். நடுல யாராச்சும் வந்து இந்தாங்க காபி அப்படின்னு சொன்னா கூட அதுவும் டைப் ஆயிடும். 

முக்கியமான விஷயம் வார்த்தைகள சொல்லுறப்ப சரியா சொல்லணும். பேசுறப்ப ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டு பிறவு கூகிள குத்தம் சொல்ல கூடாது. 

தமிழ் மொழில இருக்குற வட்டார வழக்க கூட டைப் பண்ண முடியும்.

இந்த ஜி போர்டு ஆப் கூகுளில் இருந்து வர ஆபீஷியல் அப். இதைய ப்ளே ஸ்டோரில் போய் நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.

ஒரு 15 - 20 வருஷத்துக்கு முன்னாடி ல இருந்து இத பத்தியும் இத்தோட சாத்தியங்களை பத்தியும் பல பேர் ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் எழுதி வந்துட்டு இருக்காங்க. அது எல்லாம் சயின்ஸ்ங்குறதால நம்ம இலக்கியவாதிகள் லைட் ரீட்டிங் ல விட்டுருப்பாங்க.

ஆனா இதைய அமெரிக்காவை கண்டுபிடிச்சா கொலம்பஸ் கணக்கா நம்ம ஊரு இலக்கியவாதிகள் பேசுறது தான் சிரிப்பு சிரிப்பா இருக்கு. ஏன்ன  சரித்திரத்த கொஞ்சம் புரட்டி பார்த்தா கொலம்பஸுக்கு முன்னாடி வைக்கிங் இன மக்கள் அமெரிக்காவுக்கு பஸ் (கப்பல்) விட்டு இருக்காங்க. 

பின் குறிப்பு - இது முழுவதும் தூய்மையான நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்கள் மாதிரி ... இது முழுக்க கூகிளின் ஜி போர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் எழுதப்பட்ட பதிவு.

தொலைக்காட்சியில் புத்தகங்கள்

புத்தகங்களை வீட்டு தொலைகாட்சியில் எப்படி வாசிப்பது.

உங்கள் தொலைக்காட்சியில் இருக்கும் HDMI பகுதியில் கூகிள் காஸ்ட் கருவியை இணைக்கவும்.

அதன் பின்னர்

உங்களது ஆண்டிராய்டு மொபைலில் கூகிள் ஹோம் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்ட பின் அதற்கு தேவையான அனுமதிகளை Settingsல் ஏற்படுத்தி கொள்ளவும்.


பின் கூகிள் ஹோம் உங்கள் தொலைகாட்சியை ஒரு பெயர் வைத்து சேமித்து கொண்டு செயலில் போய் CAST MY SCREENயை தேர்ந்தெடுக்கவும்.


அதன் பின் AMAZON KINDLE அல்லது சேகரிப்பில் இருக்கும் மின்னூல்களை தேர்ந்தெடுத்து படிக்கவும். 

முக்கியமாக ROTATE SCREEN கொடுத்து அகல வாக்கில் வைத்து படிக்கவும். நேர் வாக்கில் வைத்திருந்தால் படிக்க கடினமாக இருக்கும். 

தொலைக்காட்சியும் மொபைலும் ஒரே இண்டர்நெட் இணைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

இந்த வசதியின் மூலம் யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகியவையும் படிக்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களாக சில புத்தகங்களை இப்படி தான் படிக்கிறேன். இப்படி படிப்பதின் மூலம் கண்களுக்கு அதிக சிரமம் இருக்காது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு குழுவாக உட்கார்ந்து கொண்டு விவாதித்த படியே புத்தகங்களை படிக்கலாம்.

மொபைலில் தரவிறக்கம் செய்து  வைத்திருக்கும் திரைப்படங்களை இதன் மூலம் பார்க்க வேண்டாம். ஒளி ஒலி அமைப்பு சரியாய் வராது.

நன்றி - சிவதீபம், விஸ்வா, கே.ஆர்.டீ. சார், அமேசான் கிண்டில், சாம்சங் நிறுவனம்

ANJAAN - SPECIAL CRIMES UNIT # PARANORMAL INVESTIGATION

 ஆவிகள் பேய்கள் கதைகளென்றாலே மிகவும் பிடித்தொன்று. அதிலும் அந்த பின்னணி இசை அகோரமான பேய் முகம், திடுதிடுப்பு படபடப்பு மனதிற்குள் எழும் பயம் என எல்லாம் பிடித்தவைகளொன்று. 

வழக்கமாக பேய் கதைகள் என்றால் பேய் பழிக்கு பழி வாங்கும், அதிலிருந்து தப்பித்து வரும் நாயக குழு என்று தான் இருக்கும். 

ஆனால் ஏ.சி.பி. விக்ராந்த் போய் மாட்டிகொள்பவரல்ல. அப்படி மாட்டி கொண்டவர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி. பேய்களின் பின்னணி கதையறிந்து பிரச்சனைகளை தீர்ப்பவர்.

இவருக்கு பேய் 👻களின் மேல் நம்பிக்கையோ பயமோ இல்லை. உலகத்தில் பேய்களே இல்லை என்று சொல்பவர். ஆனால் தனக்கு கொடுக்கபடும் கொலை வழக்குகளை முடிக்க வேண்டுமென உறுதியாக இருப்பவர். 

முதலில் ஒரு வழக்கை விசாரணை செய்ய போய் அதுவும் வெற்றிகரமாக முடிய தொடர்ந்து அதே போல் வழக்குகளாய் இவருக்கு கொடுக்கப்படும்.

இவருக்கு துணையாய் இரு பெண் காவல் அதிகாரிகள் (ஒருவர் இறந்து போக மற்றொருவர்) நியமிக்கப்பட்டாலும் பல வழக்குகளில் இவர் மட்டுமே களமாடுவார். 

பல்ப் ஃபிக்ஷன் நாவல்களின் பெரும் ரசிகனென்பதால் மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. 

இந்திய தரத்தில் பேய் துப்பறியும் கதைகளை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததிலேயே... பெரிய ஆச்சரியம் தான்.

முக்கியமாக ஏ.சி.பி. விக்ராந்த்க்கு தனிப்பட்ட கதை என ஒன்றுமில்லை. அங்கிங்கு ஒன்று இரண்டு வசனங்கள் மட்டுமே வரும் அவரை பற்றி. 

நகரம், காடு, கிராமம் என்று பல கதைகள் வரும். ஒவ்வொன்றும் ஒரு கதை.

Thursday, April 16, 2020

இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார். {1}

2006.

வாரயிறுதியில் செய்வதறியாது சத்யம் தியேட்டரில் வெயில் படத்தை பார்த்துவிட்ட பின் கதையை விட அப்படத்தின் பாடல்கள் மனத்தில் ஒலித்து கொண்டே இருந்தது.

எல்லோரும் வானொலியில் வெயிலோடு விளையாடி பாடலையும் உருகுதே மருகுதே பாடலையும் கொண்டாடி கொண்டு இருக்க எனக்கோ காதல் நெருப்பின் பாடல் தான் அதிகம் பிடித்து இருந்தது.

இசையமைப்பாளர் யாரென்று கவனிக்கவில்லை.

அதே வருடத்தில் ஓரம்போ மற்றும் கிரிடமும் வந்தது. முறையே இது என்ன மாயம் மற்றும் அக்கம் பக்கம் யாருமில்லா ஆகியவை பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. 

அப்பொழுது தான் தொடங்கி இருந்த ஹாலோ எஃப்.எம்., பிக் எஃப்.எம்., மிர்ச்சி எஃப்.எம் மற்றும் ஆஹா எஃப்.எம். ஆகியவை மாறி மாறி இந்த மூன்று பட பாடல்களை அலறவிட்டு வண்ணம் இருந்தன. அதுவும் காலை நடை பயிற்சியின் பொழுது இது என்ன மாயம் பாடல் மாறி மாறி ஒலிபரப்பாகும், அதனை கேட்டும் பொழுது எதோ மனதில் சந்தோஷம் துளிர் விடும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் அத்தனை வாட்டி கேட்டும் இசையமைப்பாளர் யாரென்று தெரியாது.

2007.

இந்த வருடம் தான் அந்த அதிசயம் நடந்தது. வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி நிகழ்ந்தது. தனுஷ் அப்பொழுது பெரிய ஹீரோ எல்லாம் இல்லை. நன்றாக நடிக்க கூடியவர் என மட்டும் பெயர் எடுத்திருந்தார். 

சிம்பு தான் முன்னணியில் இருந்தார். 2004ல் வந்த மன்மதன் மற்றும் 2006ல் வந்த வல்லவன் ஆகிய படத்தின் பாடல்கள் மிக பெரிய வெற்றி பெற்று இருந்தன. இதில் வல்லவன் மன்மதன் அளவிற்கு வெற்றி இல்லை.

சரவணா, தொட்டி ஜெயா, வல்லவன் என தொடர்ந்த பாக்ஸ் ஆபீஸ் சொதப்பலுக்கு பிறகு சிம்புவுக்கு நிச்சயம் ல் ஒரு வெற்றி வேண்டும் என்ற நிலையில் சிம்பு - தருண் கோபி கூட்டணி நிகழ்ந்தது. இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்.

2006ல் தருண் கோபி விஷாலை வைத்து திமிரு என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். இந்த யுவன் சங்கர் ராஜா இசையில் வந்த படத்தின் பாடல்கள் பெரும்பாலானோரின் விருப்ப பட்டியலில் இடம்பெறவில்லை. 

2007ல் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வந்தது மொத்தம் 3 படங்கள். 

சிம்பு படமான காளையில் எப்ப நீ என்னை பார்ப்ப பாடலும், காளை காளை பாடல் மட்டுமே வெற்றி பெற்றன.

ஆனால் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வந்த பொல்லாதவன் பட பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் மாஸ் ஹிட். பின்னணி இசை வேற லெவலில் இருந்தது. இளசுகளின் பார்டி லிஸ்ட்டில் படிச்சு பார்த்தேன் ஏறவில்ல, எங்கேயும் எப்போதும் ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றது.

இளமை ஊஞ்சலாடும் காதல் பாடல்களாக பொல்லாதவன் படத்தில் வந்த மின்னல்கள் கூத்தாடும் பாடலும் ; கிளாசிக் படமான வெள்ளிதிரை படத்தில் வந்த உயிரிலேயே (விழியிலேயே) பாடலும் இடம்பெற்றது.

வழக்கம் போல் ரேடியோ மிர்ச்சியில் Back To Back பாடல்களாக இவை இரண்டும் ஒலிபரப்பப்பட்ட பொழுது ஆர்.ஜே. ..... "ஜி.வி. பிரகாஷின் மயக்கும் இசையில் ...." என சொன்னார்.

அது தான் அவரது பெயரை முதலில் கேட்டது.

அப்பொழுது யாருக்கும் தெரியாது.... இரண்டு வருடங்களுக்கு  இவரது இசையில் வரும் பாடல்களுக்கு மொத்த இசை ரசிகர்களும் மயங்கி இருக்க போகிறார்களென்று.

தொடரும்.

#GVPRAKASHKUMAR

Tuesday, April 14, 2020

கமர்கட் - இலக்கிய உவமை

சி.சரவணகார்த்திகேயன் எழுதின பிரியத்தின் துன்பியல் புத்தகத்தை வாசித்து கொண்டு இருக்கிறேன்.

அதில்.

எழுத்தாளர் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுதிருக்கிறார் போல அல்லது இரவு உணவகத்தில் எதுவுமில்லாத பொழுது உப்புமா தயாரித்து தருவது போல கமர்கட் நாவில் உருட்டி என எழுதிருக்கிறார்.

கமர்கட் மிட்டாயை வாயில் ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு இருந்தாலே போதும். அதனை வாயிலின் வைத்து உருட்டி உருட்டி யாரேனும் ருசிப்பார்களாக என தெரியவில்லை. 

இது இன்னொரு எழுத்தாளரின் புத்தகத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை என சொல்கிறார்.(பா. ராகவனின் 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்)

இம்மாதிரி உருட்டி உருட்சி ருசிப்பது எல்லாம் சிறு பிள்ளைகள் செய்வார்கள் என்றால், அந்த எழுத்தாளர் எழுதுவது எல்லாம் சிறு பிள்ளைதனமானது என சொல்கிறாரா .... தெரியவில்லை.

தமிழ் இலக்கியத்தில் உவமைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல.

இது இப்படியே போனால் தீவிர அரசியல் கட்டுரை தொகுப்பிற்கு இலந்தை வடை போல காரசாரமாக உள்ளது என யாராவது எழுதினால் ஆச்சரியம் இல்லை.

Sunday, April 12, 2020

Confession Of Murder { Korean / 2012}

confession Of Murder {Korean - 2012} - Thriller 

படத்தை பற்றி சொல்வதற்கு முன்னால் தென் கொரியா நாட்டு சட்டம் ஒன்றை தெரிந்து கொள்வது நல்லது. 

Statue Of Limitation - ஒரு குற்றம் நடந்து 15 வருடங்களுக்குள் அதனை நிரூபிக்க முடியவில்லை என்றால், அதன் பிறவு அந்த வழக்கிற்காக அந்த குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

பலர் சொல்வது போல தென் கொரியா நாட்டிற்கு மட்டுமானது இல்லை இந்த சட்டம். ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இந்தியா மற்றும் பல நாடுகளில் இந்த சட்டம் பின்பற்ற படுகிறது. 

மேலும் இந்த சட்ட பிரிவு பற்பல நாடுகளில் சில திருத்தங்களுடன் கடுமையாக பின்பற்றப்படுகிறது. எப்படிபட்ட திருத்தங்கள் என்றால் ஒவ்வொரு குற்றத்திற்கும் வெவ்வேறு கால அளவு.

தென் கொரியாவில் முன்பு 15 வருடங்களாக இருந்தது இப்பொழுது 25 வருடங்களாக மாற்றபட்டுள்ளது.

இப்பொழுது படத்தை பற்றி :

அரசு துப்பறிவாளர் சொய் 1986 - 1990 ஆகிய ஆண்டுகளில் ஆள்கடத்தல் மற்றும் தொடர் கொலைகளை செய்யும் குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். அப்த கொலைகாரனை கிட்டத்தட்ட பிடிக்கும் அளவிற்கு வந்து, கொலைகாரன் தப்பி விடுகிறான் அவரை தாக்கிவிட்டு.

2005 ஆம் ஆண்டு. குற்றம் நடந்து 15 வருடங்களாகிவிட்ட நிலையில் அந்த தொடர் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை. சொய் தோல்வியால் மனமுடைந்து மதுவிற்கு அடிமையாகி விடுகிறார். கொலையான நபரின் குடும்பத்தில் நடக்குமொரு தற்கொலை சொய்யை அசைத்து விடுகிறது மனதளவில். 

இரண்டு வருடங்கள் கடக்கிறது.

2007.

சலிப்பான தினசரி வாழ்வின் அங்கமாக இயங்கி கொண்டு இருக்கும் சொயிற்கு லீ என்படும் நபர் 17 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைகளை தான் தான் செய்தது என சொல்லி ஒரு புத்தகம் எழுதி இருப்பதாய் செய்தி கிடைக்கிறது. 

Book Name : "I AM THE MURDERER".

அந்த புத்தகம் நாடளாவிய அதிர்வலைகளை ஏற்படுகிறது. புத்தகம் மிக பெரிய வெற்றியடைந்து, லீக்கு நிறைய ரசிகர்கள் கிடைக்கிறார்கள். 

தன்னால் கொலையான நபர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கிறார் லீ. 

இதனை பார்த்த பாதிப்படைந்த நபர்கள் சேர்ந்து தங்களது அன்பிற்குரியவர்களை கொலை செய்ததற்காக லீயை பழிவாங்க திட்டம் போடுகிறார்கள். 

என்ன செய்தார்கள் ???

சொய் லீ உண்மையான கொலைகாரன் இல்லை, வெறும் புகழ்ச்சிக்காக பொய் சொல்கிறான் என குற்றம் சாடுகிறார்.

இருவரையும் தொலைக்காட்சி நிறுவனம் நேரலை விவாதத்திற்கு அழைகிறது. நிகழ்ச்சியில் சொய்க்கு ஒருவர் தொலைபேசியின் மூலம் தான் தான் உண்மையான கொலைகாரன் (ஜெ) என்று அடையாள படுத்தி கொள்கிறான். ஆனால் லீ அந்த நபர் போலியான ஒருவர் என்கிறார்.

அடுத்து நடந்தது என்ன ???

- - - 

படத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே தமிழில் இப்படம் வந்தால் எப்படி இருக்குமென ஒரு எண்ணம் ஒடி கொண்டு இருந்தது. 

சொய் - கார்த்தி சிவகுமார்
லீ - அருண் விஜய் 
ஜெ - விக்ரம் 

திரைகதை & இயக்கம் - மகிழ் திருமேனி.

இந்த குழு மட்டும் அமைந்தால் தமிழில் வரலாறு காணாத வெற்றி கிடைக்கும். 

ஒவ்வொரு காட்சியும் அப்படியொரு கொண்டாட்டம் தான். அதிலும் ஒரு கார் துரத்துதல் காட்சி .... ஒரு மூன்று முறை திரும்ப பார்த்திருப்பேன். 

இம்மாதிரியான கொரியன் படங்கள் மட்டும் இங்குள்ள திரையரங்குகளில் துணை உரை (Subtitle) உடன் வந்தால் முதல் ஆளாக போய் பார்த்து விடுவேன். கணினி வழி பார்த்த பொழுதே இப்படி பரபரப்பாக இருக்கிறதே ... திரையில் பார்த்தால் தெறிக்க விட்டுவிடும் போல.

Memories Of Murder (2003) தொடர்ச்சியாக கதை அமைக்க பட்டு இருப்பது ஒரு சிறப்பு. அந்த தொடர்ச்சியை கூட நுலளவு தான் காட்சி படுத்தி இருக்கிறார்கள். முதல் பிணம் கண்டெடுக்கப்படும் காட்சி. 

அவசியன் பார்க்க வேண்டிய ஒரு படம். முக்கியமாக சில காட்சிகள் எல்லாம் மணி மணியாக இருக்கிறது. 

#ConfessionofMurder #Koreanmovies #Quarantine #Kollywood

Saturday, March 28, 2020

Nanna Prakara (Kannada) - 2019

இந்த படத்தை பற்றிய கதைச்சுருக்கத்தை படித்துடனே பார்ப்பது என முடிவு செய்து பார்த்தாகிவிட்டு, இதனை எழுதிகொண்டு இருக்கிறேன்.

ஒரு விபத்து நடக்கிறது, காவல்துறை அந்த வழக்கை எடுத்து நடத்தி இறந்தது யார் என கண்டுபிடித்து வழக்கை முடித்து வைக்கிறது. 

எல்லாம் சரி, இதில் என்ன சுவாரசியம் இருந்துவிட போகிறதென யோசிக்கையில் தான் அந்த முக்கிய திருப்பம் வருகிறது.

அதாவது அந்த விபத்தில் கிடைத்த சடலத்திற்கும், அந்த வழக்கிற்கும் சம்பந்தமே இல்லை. வழக்கு வேறொரு பெண்ணை பற்றியது, சடலமாக கிடைத்திருப்பது இன்னொரு பெண். 

இதனை அடுத்து யார் அந்த பெண்கள், இன்னொரு பெண் எங்கே என போகிறது கதை. 

கன்னட திரையுலகில் புது புது கதைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி. 

தேவையில்லாத காட்சிகள் என எதுவுமில்லை. நூல் பிடித்தது போல் படம் போகிறது. 

அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

Related Posts with Thumbnails